டெல்லியில் பாதயாத்திரையின் போது ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது திரவம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அதன்படி ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் டெல்லி சட்டமன்ற தொகுதிகளில் பாத யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 30) மாலை 5.30 மணியளவில் டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் கெஜ்ரிவால் பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது சாலையின் ஓரத்தில் நின்ற மக்களை சந்தித்தபடி அவர் சென்ற நிலையில், அங்கிருந்த ஒருவர் கெஜ்ரிவால் மீது திரவத்தை வீசினார்.
இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், திரவத்தை வீசிய நபரை உடனடியாக பிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கெஜ்ரிவால் மீது திரவம் வீசியவர், கான்பூர் டிப்போவில் பஸ் ஓட்டுநராக பணிபுரியும் அசோக் ஜா என கண்டறிந்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லியில் பாஜக குண்டர்களின் ஆட்சி!
அரவிந்த் கெஜ்ரிவால் மீதான இந்த தாக்குதலுக்கு பின்னால் பாஜகவின் கை இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பியதற்காக கெஜ்ரிவால் தனது பாதயாத்திரையின் போது பாஜகவால் தாக்கப்பட்டார். டெல்லியில் சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக பாஜக குண்டர்களின் ஆட்சி நடந்து வருகிறது. ஒரு முன்னாள் முதல்வர் நாட்டின் தலைநகரில் பாதுகாப்பாக இல்லை என்றால், சாமானியர்களின் கதி என்ன? பாஜக ஆட்சியில் டெல்லியின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது” என்று அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
மக்கள் இதற்கு பழிவாங்குவார்கள்!
இந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி டெல்லி முதல்வரான அதிஷி கூறுகையில், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாகத் தோற்கடிக்கப்படுவோம் என்ற பயத்தில் கெஜ்ரிவாலைத் தாக்கியதன் மூலம் பாஜகவின் கேவலமான அரசியல் மிகவும் கீழ்த்தரமானது என்பது தெரியவந்துள்ளது. பாஜகவின் இதுபோன்ற மலிவான செயல்களுக்கு டெல்லி மக்கள் தேர்தலில் பழி வாங்குவார்கள். கடந்த முறை 8 இடங்களை பெற்ற பாஜகவுக்கு இந்த முறை டெல்லி மக்கள் ஒரு இடங்களை கூட வழங்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
அதே போன்று டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சவுரப் பரத்வாஜ், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ராஜ்யசபா எம்.பி., ராகவ் சதா, கட்சி எம்.எல்.ஏ., நரேஷ் பல்யான் உள்ளிட்ட பல தலைவர்களும் கெஜ்ரிவால் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மறுப்பு!
ஆம் ஆத்மி கட்சியின் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக முற்றிலுமாக மறுத்துள்ளது. அதன்படி, ’இந்த சம்பவம் அனுதாபத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஆம் ஆத்மியின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட PR ஸ்டண்ட். பாஜகவை அவதூறு செய்யும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. என்று பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறினார்.
பாஜக எம்பி கமல்ஜீத் செராவத் கூறுகையில், அரசியல் தலைவர்கள் பாத யாத்திரை மேற்கொள்ளும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. தெருக்களில் சாக்கடை வடிகால் நிரம்பி வழிவதும், மாசு அளவு அதிகமாக உள்ளதால் ஆம் ஆத்மி அரசு மீது மக்கள் கொதிப்படைந்துள்ளனர். டெல்லி அரசு தான் அளித்த பெரும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது, அதன் வெளிப்பாடு தான் இது.
ஆனால் இத்தகைய தாக்குதலுக்கு பதிலாக மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் ஆம் ஆத்மிக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்… கைது செய்யப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஜீத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாகிச்சூடு!
கஞ்சா விற்பனை : மன்சூர் அலிகான் மகனை சிக்க வைத்த காண்டக்ட் நம்பர்… தட்டி தூக்கிய போலீஸ்!
ஹெல்த் டிப்ஸ்: ‘பஃபே’வுக்குச் சென்றால் எந்த வரிசையில் சாப்பிடுவது ஆரோக்கியமானது?