சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 27 )தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சிறப்பு பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் குருதிக்கொடை முகாம்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இலுப்பூர் பேரூர் கழகம் சார்பில் புதுக்கோட்டை சின்னக்கடை வீதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று (நவம்பர் 27 ) நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய லியோனி, “புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் பெண்கள் படிக்கக்கூடாது என்ற நிலை தீவிரமாக இருந்த காலத்திலேயே இதே மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி ரெட்டிதான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரானார்.
இப்படி ஏகப்பட்ட சிறப்புகளை கொண்டது புதுக்கோட்டை மாவட்டம். தற்போது கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கையில் நான் கூட்டத்தில் பேசப்போகிறேனா இல்லை மாநாட்டில் பேசப்போகிறேனா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது” என்றார்.
பின்னர், உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசுகையில், “இளைஞர்களை மேய்ப்பது கடினம். அதனால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்தார்.
சினிமாவில் பெரியவர் என்றால் நடிகவேள் எம்.ஆர்.ராதா, சின்னவர் என்றால் எம்ஜிஆர். எம்ஜிஆர் திரைப்படங்களிலும், அரசியலிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்.
அதேபோல் தற்போது சின்னவர் உதயநிதி ஸ்டாலினும் அரசியலிலும், திரைப்படங்களிலும் பெரும் மாற்றத்தை உருவாக்குவார். அவரது படங்களில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
ஒரு செங்கலை வைத்து தேர்தல் பரப்புரையை சிறப்பாக செய்தவர் உதயநிதி. தேர்தல் சமயத்தில் அவருக்காக பிரசாரம் செய்ய வேண்டுமென என்னிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார்.
அதன்படி நானும் பிரசாரம் செய்துவிட்டு வந்தேன். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு என்னை தொலைபேசியில் அழைத்த அவர் வீட்டில் எப்போது இருப்பீர்கள் என கேட்டு நேரடியாகவே வந்து எனக்கு நன்றி தெரிவித்தார்.
அவர் நினைத்திருந்தால் தொலைபேசியிலேயே எனக்கு நன்றியை தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதுதான் அவரது பண்பு என்று பேசியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
குஜராத் தேர்தல்: துணை ராணுவப் படையினருக்கு நேர்ந்த கொடூரம்!
கொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீப திருவிழா!