அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் போல பிரதமர் மோடிக்கும் மெமரி லாஸ் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும் காங்கிரஸின் மகா விகாஸ் ஆகாதி கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் அமராவதியில் இன்று (நவம்பர் 16) பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வருகை தந்தார்.
ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ராகுல் காந்தியின் பேக் மற்றும் அவரது உடைமைகளை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்த நிலையில் அமராவதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தவறுதலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கியை ரஷ்ய அதிபர் புதின் எனறு அறிமுகப்படுத்திய நிகழ்வை நினைவுப்படுத்தி பேசினார்.
“எனது சகோதரி மோடியின் பேச்சை பற்றி என்னிடம் கூறினார். சமீப நாட்களாக மோடி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறார். ஏன் அவ்வாறு சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் நினைவாற்றலை இழந்திருக்கலாம்.
ஜோ பைடனைப் போல பிரதமர் மோடியும் நினைவாற்றலை இழந்து நிற்கிறார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் .
மேலும் அவர், “அதானியின் தாராவி திட்டத்திற்காக 2022 இல் மகாராஷ்டிரா அரசை பாஜக கவிழ்த்தது. பிரதமர் மோடியும் அமித்ஷாவும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய ஏழை மக்களின் தாராவி நிலத்தை தங்களது நண்பர் கௌதம் அதானிக்கு கொடுக்க துடிக்கின்றனர்.
இதனால் மகாராஷ்டிரா அரசு, மக்களாகிய உங்களின் கைகளில் இருந்து பாஜகவால் பறிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசை திருடிய பாஜக, அரசியலமைப்பை பாதுகாக்கிறது என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்றும் கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
200 சீட் – ஸ்டாலின் ஆசையை அதிமுக நிறைவேற்றும் : தங்கமணி
3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை