4 அமைச்சர்களை தவிர… 12 -18% வாங்குறாங்க… : பாமக எம்.எல்.ஏ.வின் பகீர் கடிதம்!

அரசியல்

தமிழ்நாட்டில் நான்கு அமைச்சர்களைத் தவிர மற்றவர்கள் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை என்று பாமக எம்.எல்.ஏ அருள் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் இதுதொடர்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த ஜூன் 13ஆம் தேதி  6 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இதுவரை தான் 20,000 மனுக்கள் கொடுத்துள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அருள்,

“கடந்த 3 ஆண்டுகளாக பதவி உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்களை ஏற்படுத்தி இருக்கலாம். இந்த கடிதத்தை படித்தபிறகு நீங்கள்… அருள் தவறாக எழுதுகிறாய் என என்னைத் திட்டினாலும், என் உணர்வை அருள் வெளிப்படையாக சொல்கிறார், என்னால் சொல்ல முடியவில்லை என நீங்கள் நினைத்தாலும் சரி..

கடந்த 32 ஆண்டுகளாக பல தேர்தல்களில் தோற்று மிகப்பெரிய செலவு செய்து தொடர்ந்து அரசியல் களத்தில் உள்ள என்னை சேலம் மேற்கு தொகுதி மக்கள் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற செய்தார்கள்.

மக்களது வேலைக்காரன் என்ற எண்ணத்தோடு ஊர் ஊராக, தெருத் தெருவாக, வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கிறேன்..குறைகளை கேட்கிறேன்..மனுக்களை வாங்குகிறேன்.

மக்களது பொதுவான கோரிக்கைகளை சட்டமன்ற கேள்விகளாக 20,000க்கும் மேல் கொடுத்து உள்ளேன். இதையே நீங்களும் உங்கள் பாணியில் சிறப்பாக செய்து இருப்பீர்கள்.

நான் எழுதும் கீழ்கண்ட கருத்துகள் அனைவரையும் அரவணைத்து பாராட்டும்படி செயல்படும் 4 அமைச்சர்கள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவமானம்தான்…

மேலும் அவர்,  “மக்களது கோரிக்கைகள், அவர்களில் சிலரது தனிப்பட்ட தேவைகளுக்காக அமைச்சர்களை கேட்கிறோம். காபி சாப்பிட்டியா ? என்னோடு நீ டிபன் சாப்பிட்டே ஆக வேண்டும் என அன்பொழுக பேசி சாப்பிட்டு முடித்து, அண்ணா ஒரு வேலை என்றால் கொடு … ஏ பிஏ இத உடனே செய்து கொடு எனும் பொழுது நமது காதில் தேன் பாய மகிழ…

நான் கொடுத்த ஏதும் இதுநாள் வரை நடக்கல. உங்களுக்கு ஏதாவது நடந்ததா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.. சில அமைச்சர்களிடம் நாம் தனிப்பட்ட முறையில் கொடுக்கும் பரிந்துரைக்கு நேரடியாக யாருக்காக பரிந்துரைக்கிறோமோ அவர்களிடமே அமைச்சர்களது உதவியாளர்கள் நேரடியாக டீல் ( அதாங்க டீல் (புரிஞ்சுதுல்ல) செய்து எம்.எல்.ஏ-வான நம்மை அவமானப்படுத்திய நிகழ்வு மதுரையை சேர்ந்த பத்திரமானவர் உள்ளிட்ட பலரால் எனக்கு ஏற்பட்டது.

மனுவை தொட்டால் தீட்டா…

இன்னும் சில அமைச்சர்கள் நாம் கொடுக்கும் மனுவை தொட்டாலோ, படித்தாலோ தீட்டு என்பது போல் பாவிக்கும் விதம் பாடம் சொல்லும் அமைச்சர் உள்ளிட்ட சிலரிடம் எனக்கு ஏற்பட்டது. இதுவரை எனது தொகுதி சார்ந்தும், மக்களின் தனிப்பட்ட பிரச்சினைகள், தேவைகளுக்காகவும் 1000க்கும் மேற்பட்ட மனுக்களை அமைச்சர்களிடம் நேரில் கொடுத்துள்ளேன்.

இதன் அனைத்து நகல்களும் என்னிடம் உள்ளது. அதில் 9 கோரிக்கைகள் நிறைவேற்றி மீதமுள்ள மனுக்கள் குப்பைக்கு போய்விட்டனவா? அல்லது தனிப்பட்ட டீல்! .. க்காக காத்திருக்கிறதா? என்பது அமைச்சர்களுக்கே வெளிச்சம்” என கூறியுள்ள அருள்,

இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா?

“கட்சிக்கு அப்பாற்பட்டு இன்றும் அவையில் உள்ள சில சீனியர் எம்.எல்.ஏ.க்களிடமும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடமும் இதுகுறித்து ஏங்க அண்ணா இது தானா உங்க பழைய அனுபவம் என கேட்டேன்.. அவர்கள் சொன்னது வியப்பை தந்தது. கடந்த திமுக, அதிமுக இருகட்சி ஆட்சியிலும் மந்திரிங்ககிட்ட போயி ஏதாவது பரிந்துரை கொடுத்தா சபை நடக்கும் போது பேரவையில் நம்ம சீட்டுல ஒட்டிய கவரில் ஆர்டர் இருக்கும். செய்ய முடியவில்லை என்றால் போன் போட்டு கூப்பிட்டு இது குறித்து அமைச்சர் விளக்கமா சொல்வாரு என்றார்கள்.

ஆனால் இதுவரை ஒருநாள் கூட எனக்கு இந்த அனுபவம் இல்லை. உங்களுக்கு…? பழையவர்கள் பலர் இருந்தும் மாறிவிட்டார்கள்.. இன்று உள்ளவர்கள் போட்டி போட்டுக்கிட்டு 12 முதல் 18 வரை வாங்குறாங்க.

குறைத்து கொள்ளுங்கனா, மேல கை காட்டுறாங்க. எல்லாத்துக்கும் தனித்தனி… என வேதனையை வெளிப்படுத்துறாங்க.

இன்று அமைச்சர் நாளை எம்.எல்.ஏ

இதை நான் சொல்லவில்லை. இவைகளை எல்லாம் ஏன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் உங்கள் மாவட்ட அமைச்சர் உங்களுக்கு நெருக்கமானராக இருக்கலாம். அவரும் நம்மைப்போல எம்.எல்..ஏவாகி பின்னரே அமைச்சரானார் என அவரிடம் எடுத்து சொல்லுங்கள். இன்றைய அமைச்சர் நாளையே வெறும் எம்.எல்.ஏ. ஆகலாம். அவருக்கும் நம் நிலை ஏற்படக் கூடாது என எடுத்துச் சொல்லுங்கள்.

அமைச்சர்கள் நமக்கு தரும் மரியாதை இதுதான் என்றால் அதிகாரிகள் தரும் மரியாதை மிக சிறப்பு. நல்ல பல அதிகாரிகளுக்கு மத்தியில் சிலரை நாம் சந்திக்க செல்லும் போது கூட்டத்தில் இருக்கிறார் என சந்திக்க மறுக்கிறார்கள்.

அதிகாரியும் இப்படிதான்…

சமீபத்தில் ஒரு மிக உயர் அதிகாரியிடம் தலைமைச் செயலகத்தில் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றேன். அவர் மறுத்துவிட்டார். ஏங்க எம்.எல்.ஏ.வுக்கு படம் எடுத்துக் கொள்ள தகுதி இல்லையா? அவருக்கு முன் இருக்கையில் அப்போது அமர்ந்து இருந்த அந்த நேர்மையான உயர் அதிகாரியே அதற்கு காட்சி.

இது தான் இன்றைய மக்களாட்சி . நமக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு இந்த 5 ஆண்டுகளில் ஏதேனும் செய்து கொடுத்தால் தானே மீண்டும் அவர்களது முகத்தில் விழிக்க முடியும்.

தேர்தலில் நாம் செய்த செலவுகள், அதனால் நமக்கு ஏற்பட்ட கடன்கள் குறித்து இங்கு நான் ஏதும் குறிப்பிட விரும்பவில்லை. என் மனதில் இருக்கும் இதுபோன்று இன்னும் பல வேதனைகள் பெரும்பாலான உங்களுக்கும் இருக்கும் என்பதை நான் அறிவேன்.

அப்படிஇல்லை என்றால் நீங்கள் ஆளும் கட்சி மாவட்ட செயலாளராக இருப்பீர்கள், நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் ஆளும்கட்சி, எதிர் கட்சி, கூட்டணி கட்சி, கூட்டணி இல்லா கட்சி என்ற பாகுபாடின்றி அனைத்து MLAக்களும் முதல்வரிடம் முறையிட்டு நமக்கு அமைச்சர்களால் ஏற்படும் புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் ஒன்றாகவோ, தனித்தனியாகவோ, வாய்ப்பு கிடைக்கும் போது தனிமையிலோ, சபையிலோ முதல்வர் செயலாளர்கள், உதவியாளர்கள் மூலமோ எடுத்துரையுங்கள். நேரில் சொல்ல முடியாவிட்டால் முதல்வரிடம்  கடிதமாவது கொடுங்கள்.

எம்.எல்.ஏ.க்களின் குறைந்தபட்ச உரிமையை மரியாதையை காப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கம், வெள்ளி விலை உயர்வு : எவ்வளவு தெரியுமா?

”எதிர்பார்ப்புகள் எப்போதும் பாரம்தான்” – விஜய் சேதுபதி ஓபன் டாக்!

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0