கொரோனா வைரஸ் லண்டனிலிருந்து ஒரு கடிதம்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

முரளி சண்முகவேலன்

இரண்டு நாட்கள் முன்னதாக ஒரு நண்பர் அலைபேசியில் தொடர்ந்து அழைத்தவண்ணம் இருந்தார். என்னிடம் பேச முயற்சி செய்த நண்பர். ஒரு மகளுக்கு இளம் தாய். சில வருடங்களுக்கு முன் மணவிலக்கு பெற்று தனது ஆறு வயது மகளோடு தனியாக வாழ்ந்து வருபவர். தெற்கு லண்டனில் ஒரு வீட்டுக்கு சொந்தக்காரர். பல விருதுகளை வென்ற திரைப்பட இயக்குநர் – பிறகு அதிக வாய்ப்பில்லாததால் ஒப்பந்த அடிப்படையில் லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படம் பற்றி பாடம் எடுத்து வருகிறார்.

அன்றிரவு நான் அவரை அழைத்தபோது அவருடைய குரல் உடைந்து அழத்தொடங்கினார். சமூக இடைவெளியைக் காரணம் காட்டி அவர் கணவர் கடந்த நான்கு வாரங்களாக மகளைப் பார்க்க வருவதில்லை (ஆனால், அரசாங்கம் 16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் அப்பா, அம்மாவைப் பார்க்க பிரயாணம் செய்ய அனுமதி அளித்துள்ளது). என் நண்பரின் பெற்றோர்களோ லண்டனுக்கு வெளியே வசித்து வரும் முதியவர்கள். இந்த நிலையில் எனது நண்பருக்குப் பணி வாய்ப்பு அளித்து வந்த பல்கலைக்கழகம் தனது ஒப்பந்தத்தை ரத்து செய்து பணி நீக்கம் செய்துள்ளது. ஆறு வயதுக் குழந்தையை 24 மணி நேரமும் யாரின் துணையின்றி பராமரிப்பு செய்ய உடம்பிலும் மனத்திலும் உறுதி இல்லை என்று சொல்லும்போது குரல் உடைந்து மீண்டும் அழ ஆரம்பித்தார். நடுத்தர மக்களுக்கே இந்த நிலை என்றால் ஏழை மற்றும் வீடற்று வீதியில் வாழும் லண்டனின் ‘ஹோம்லெஸ்’ மக்களின் நிலை மிக மோசம்.

லண்டன் போன்ற பெருநகரங்களில் கொரோனா வைரஸ் செல்வந்தர்களையும் நடுத்தட்டு மக்களையும் அதிக அளவு பாதிக்கவில்லை. அரசு மற்றும் நிரந்தரப் பணியாளர்களின் வாழ்க்கைகளிலும் அதிக பாதிப்பு கிடையாது. ஆனாலும் கொரோனா தொற்றுக்குப் பின் பல துறைகள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வண்ணம் உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே பிரிட்டனில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

அது மட்டுமல்ல. உடல் உழைப்பை நம்பியுள்ள தினசரி தொழிலாளர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாகக் கட்டடத் தொழிலாளர்கள்.

லண்டனில் கட்டுமானப் பணியும் அதனோடு சேர்ந்த ரியல் எஸ்டேட் (நிலம் சார்ந்த கட்டுமான) வர்த்தகமும் மிக முக்கியமானது. லண்டன் ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை வணிகத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போதுகூட ரியல் எஸ்டேட் வர்த்தகம் பாதித்துவிடாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் அரசு செய்தது.

பிரிட்டனின் பென்ஷன் நிதிக்கும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் பங்குகளுக்கும் தொடர்புண்டு. ரியல் எஸ்டேட்டின் பங்குகள், நிதிச் சந்தையில் வீழ்ந்தால் அது பிரிட்டனின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே பாதிக்க வாய்ப்புள்ளது.

இந்த மாதிரியான பொருளாதார காரணங்களாலேயே, கொரோனா ஊரடங்கினை பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்கத் தயங்கினார் என மீடியாவும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளது.

ஒருபுறம் லண்டன் மேயர் சாதிக் கான் கட்டுமான வேலையை உடனடியாக நிறுத்த முடிவு செய்தார். ஆனால், போரிஸ் ஜான்சனின் தலைமையிலான பிரிட்டன் அரசோ கட்டுமான வேலையை ‘தேவையான பாதுகாப்புடன்’ தொடர்ந்து செய்யலாம் என முடிவெடுத்தது. இந்தக் கொள்கைக் குளறுபடி பொதுமக்களை, குறிப்பாக தினசரி உழைப்பாளர்களைக் குழப்பியது.

கட்டடப் பணியானது ஒரு குழுப்பணி. அலுவலகப் பணியைப்போல் வீட்டிலிருந்தோ , மற்றவர்களிடமிருந்து விலகியோ அப்பணியைச் செய்ய முடியாது. உள்ளபடியே, இந்தக் குளறுபடியில் பாதிக்கப்பட்டவர்கள் கட்டடத் தொழிலாளர்கள். இவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது எவருக்கும் இதுவரை தெரியாது.

அரசாங்கம் கட்டுமானப் பணிகளை நிறுத்த ஆணையிட தாமதப்படுத்தியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அரசாங்கம் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு ஆணையிட்டால் அத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை கொடுக்கும் பொறுப்பு ரியல் எஸ்டேட் முதலாளிகளிடமிருந்து அரசின் பொறுப்பின் கீழ் வந்து விடும்.

ரியல் எஸ்டேட் முதலாளிகளோ தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை இன்ஸ்யூரன்ஸ் மூலம் சரிக்கட்டி விடுவர். ஆனால் தொழிலாளர்களின் நிலை?

கொரோனா தொற்றுவின் சமூகப் பொருளாதார விளைவுகள் இதுவரை முதலீட்டியத்துக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களின் நலன்களையும் பாதித்தவாறாக உள்ளது என்பதே உண்மை.

பிரிட்டனில் மற்றொரு முக்கியமான வியாபாரமும் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. பப் (Bub) என்றழைக்கப்படும் மதுபான விடுதிகள். பிரிட்டனின் பப் குடிக்கும் இடம் மட்டுமல்ல; பல வகைகளில் பப் என்பது பிரிட்டனின் சமூக நாடி. பிரிட்டனின் அன்றாட முகத்தைப் பார்க்க ஒரு பப்புக்குப் போனால் போதும். ஐரோப்பிய சமூகவியலாளர் ஹாபெர்மாஸ் பிரிட்டனின் ஜனநாயகத்தை வளர்த்ததில் பப்புகளுக்கு பங்குண்டு எனக் குறிப்பிடுகிறார்.

இந்த பப்புகள் இரண்டு உலகப் போர்களிலும்கூட மூடப்படவில்லை. குண்டுகளுக்குப் பயப்படாத இந்தப் பப்புகள், தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ளது. கட்டடப் பணிகளைப் போல இந்த விடுதிகளையும் சீக்கிரமாக மூடவில்லை. அதனால் ஆரம்ப கால தொற்று பரவியதில் இந்தப் பப்புக்களும் ஒரு காரணம் என விற்பன்னர்கள் ஆளும் கட்சியைக் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

பிரிட்டனின் மதுபான விடுதிகள், குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் கலகலப்பாக இருக்கும். இங்கு சமூக இடைவெளிக்கெல்லாம் சாத்தியமில்லை. ஒருவேளை இடைவெளி இருந்தாலும் மதுபான வியாபாரங்களில் எச்சில், இருமல், புகைத்தல், சிகரெட் துண்டில் உள்ள எச்சில் எல்லாம் மிகச் சாதாரணம். இவையெல்லாம் தொற்றுக்களின் நண்பர்கள்.

இவ்விடுதிகளை ஆரம்பத்திலேயே பூட்டியிருந்தால் விடுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொற்று பரவுவதைக் குறைத்திருக்க முடியும். முதலீட்டியத்துக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கையே இதற்குக் காரணம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

Ei group (ஈஐ குழுமம்) என்ற காப்பீட்டு நிறுவனம் பிரிட்டனின் 4000-க்கும் மேற்பட்ட பப்புகளுக்குக் காப்பீடு வழங்கியுள்ளது. இந்தக் குழுமம் எப்போதாவது ஏற்படும் எதிர்பாரா நட்டத்தைச் சமாளிக்க பன்னாட்டு நிறுவனமான சுரிக்கிடம் (Zurich) தனது காப்பீடுகளை இன்ஷ்யூரன்ஸ் (underwriting) செய்துள்ளது.

சுரிக் நிறுவனம் கொரோனா தொற்றுவினால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்க முடியாது என கையை விரித்து விட்டது. பிரிட்டன் அரசாங்கமோ, பப்புகளை மூடி அத்தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க விருப்பமில்லை.

விளைவு: ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் லட்சக்கணக்கான பொதுமக்களும் தொற்று நோய் பரவ உதவும் பப்புகளுக்குத் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நான்கு வாரங்கள் முன்பு வரை திறனற்றப் பணியாளர்களாகக் கருதப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தற்போது பிரிட்டனை சாகவிடாமல் காத்து வருகின்றனர். இந்த சுகாதாரப் பணியாளர்களில் பெரும்பான்மையோர் புலம்பெயர்ந்தவர்கள். இவர்களுக்கு திடீர் மரியாதை ஏற்பட்டிருக்கிறது. இந்த அங்கீகாரம் தொற்றுப் பயங்கரத்துக்குப் பின்னும் நீடிக்குமா என்று சொல்ல முடியாது.

இத்தனை கொள்கைக் குழப்பத்துக்கிடையிலும் பிரிட்டனின் தேசிய சொத்தான நேஷனல் ஹெல்த் சர்வீஸ் என்றழைக்கப்படும் பொது மருத்துவ சேவையின் பங்கு மிக முக்கியமானது.

என்ஹெச்எஸ் (NHS) என்றழைக்கப்படும் இந்த மருத்துவ நிறுவனத்தில் தினசரி நடைமுறைப் பிரச்சினைகள் இருப்பினும் இன்றைய தேதியில் என்ஹெச்எஸ் மட்டுமே, இத்தொற்றை எதிர்க்க, பிரிட்டனிடம் உள்ள ஒரே ஆயுதம். அந்த வகையில் இத்தொற்று சில முக்கியமான சமூகப் பொருளாதார விவாதங்களைத் தொடங்கியுள்ளது.

அனைவருக்கும் வேலை, உணவு, மருத்துவம், உறைவிடம் போன்ற தேவைகளை சந்தை மட்டுமே தீர்மானிக்க முடியாது என்ற விவாதம் நடுத்தர மக்களிடமும் உறைக்க ஆரம்பித்திருக்கிறது.

உதாரணமாக மதுபான விடுதி மூடலால் அங்குள்ள தொழிலாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. பப்புகளின் முதலாளிகள் பெருமளவில் மிகுந்த சேமிப்பின்றி மாத வருவாய் அளவிலேயே இயங்குவதால் இரண்டு மாத அடைப்பு ஒரு மில்லியனர் முதலாளியையும் மிகச் சிக்கலான பொருளாதாரச் சூழ்நிலைக்குக் கொண்டு செல்லப்படுவதை மீடியா வெளிப்படுத்தி வருகிறது. ஆக முதலீட்டியப் பண்புகளின் கொடூரமானது யாரையும் விட்டு வைக்கப் போவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மருந்து, மருத்துவ உபகரணங்கள் இருப்பில் இல்லாது சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளிடம் கையேந்தும் நிலை மற்றொரு விதமான விவாதத்தை தொடக்கி வைத்திருக்கிறது. உலகமயமாக்கலின் தேவையை வலியுறுத்தி ஒரு சாராரும், உற்பத்தித் துறையை மீண்டும் தம் நாடுகளுக்குக் கொண்டு தன்னிறைவோடு வாழ ஆரம்பிக்க வேண்டும் என ஒரு சாராரும் கொடி பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இத்தொற்று சமத்துவமின்மையை அதிகரிக்கிறது. அதே நேரம் உலக மாந்தர்கள் தனித்தீவாக வாழ முடியாது என்பதையும் உணர்த்தியுள்ளது. செல்வந்தர்களும் தலைவர்களும் தங்களை மட்டும் காத்துக் கொள்ளும் முயற்சிகளை அருவருப்பானது என்ற உரையாடல் மீடியாவில் சத்தமாகக் கேட்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், க்யூர் வேக் (Cure Vac) என்ற தடுப்பூசியை ரொக்கப் பணம் கொடுத்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுத் துறை மருந்து நிறுவனத்திடமிருந்து வாங்க பேரம் செய்தபோது ஜெர்மனியில் மிகப்பெரிய விவாதம் வெடித்தது.

ஜெர்மன் விஞ்ஞானியும் அரசியல்வாதியுமான கார்ல் லாடர்பாச் “முதலீட்டியத்திற்கும் ஓர் எல்லை உண்டு. இந்தத் தொற்று நோயிலிருந்து வெற்றி பெற வேண்டுமானால் மனித குலத்தின் ஒரே குரலில் இயங்க வேண்டும்” என்றார்.

பிரிட்டனில் ஜெரிமி கோர்பினும், அமெரிக்காவில் பெர்னி சாண்டர்ஸும் முன் வைத்த சோஷலிச பொருளாதாரக் கொள்கைகள் இப்போது மிக அவசியமென பொதுப்புத்தியில் உறைக்கத் தொடங்கியுள்ளது.

உதாரணமாக சமீபத்தில் தோற்றுப்போன பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி, அனைவருக்கும் பிராட் பேண்ட் இலவசமாக வழங்கப்படும் எனத் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபோது பல கேலிக் குரல்கள் எழுந்தன. ஆனால், தொற்று நோயின் பின்னணியில், சில மொபைல் நிறுவனங்கள் என்ஹெச்எஸ் பணியாளர்களுக்கு இலவசமாக டேட்டாவை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

எல்லாப் பொருளாதார சவால்களையும் சந்தையே தீர்மானிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி – தொற்று நோயின் பின்புலத்தில் – மிகப்பெரிய நிவாரணத் தொகையைச் சிறு தொழில்முனைவோர்களுக்கு அறிவித்துள்ளது. ஆனால், சுய வேலைவாய்ப்பில் (Self-employed) இருப்போருக்கு இந்த அரசாங்கம் எந்த விதமான நிவாரணமும் வழங்கவில்லை.

அதே நேரத்தில் கொரோனா தொற்றில் முதலீட்டியம் மிகப் பெரிய லாபம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. உதாரணமாக கொரோனா தொற்றின் விளைவாக அமேசானின் அதிபர் ஜெஃப் பெசோஸ் மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்டுகிறார் என்பது தெரியவந்துள்ளது. ஓர் ஆய்வின்படி ஒரு விநாடிக்கு ஜெஃப் 11,000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கிறார்.

தொற்றுவினால் ஏற்படும் பங்குச் சந்தையில் ஏற்படும் நிலையற்ற தன்மையை (Volatility) பயன்படுத்திக் கொண்டு லண்டன், வால் ஸ்ட்ரீட் பங்குதாரர்கள் மில்லியன் கணக்கில் பணம் சேர்க்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆனால், இத்தொற்றானது மேற்குலகின் முதலீட்டிய நம்பிக்கைகளை அசைத்துப் பார்த்துள்ளது என்றால் மிகையல்ல.

தனித்துவம், சந்தைப் பொருளாதாரம், முதலீட்டியம், ஜனநாயக அரசு குடிகளுக்கு ஆற்றும் முக்கியக் கடமைகள் என்ன – என்பது பற்றிய ஒரு விவாதத்தை இத்தொற்று மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது. குறிப்பாக, சாதாரண குடிமக்களின் வாழ்நிலையை நிலைநிறுத்துவதில் அரசுக்குள்ளான பொறுப்புகளை கொரோனா தொற்று முன்வைத்துள்ளது. ஆனால் நிலைமை அவ்வளவு எளிதல்ல…

மேலும் அடுத்த கடிதத்தில்…

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

letter from London about corona 1 - Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு]

https://minnambalam.com/political-news/special-column-murali-shanmugavelan/

https://minnambalam.com/political-news/orangutan-and-neo-colonialism-is-festive-advertising-murali-shanmugavelan/

https://minnambalam.com/political-news/dalit-murder-ruling-parties-have-a-role-murali-shanmugavelan/

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *