உதயசூரியன், பெரியார், வெற்றி… தமிழக அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்து இதோ!

Published On:

| By christopher

தை பிறக்கும் இத்திருநாளில் பொங்கல் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களுக்கு தங்களது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் – உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

செழிப்பையும், பெரும்வளத்தையும், முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்துவது கூட்டுழைப்பும் ஒற்றுமையுமே என்று அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இவ்வேளையில் சந்தோசமான, ஒளிமயமான சமத்துவ எதிர்காலத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம். என் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

உலகத் தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

“பொங்கல், மகரசங்கராந்தி, உத்தராயன், பௌஷ்பர்வ, லோரி ஆகிய விசேஷமான தினங்களில் உலகெங்கிலும் உள்ள நமது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நமது வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சியாகும். மேலும், கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன. இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.” –

விசிக தலைவர் திருமாவளவன்

தமிழினத்தின் பாரம்பரிய பண்பாட்டுப் பெருவிழாவாம் பொங்கல் திருவிழாவையொட்டி உலகமெங்கும் பரவி வாழும் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் திருநாளாய்ப் போற்றப்படும் இப்பெருநாள் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் நனிசிறந்த நன்னாளாகும். சாதி, மத அடையாளங்களைக் கடந்து அனைத்துத் தரப்பாரும் தமிழர்களாய் உணர்ந்து, ஒருங்கிணைந்து பொங்கலைக் கொண்டாடுவதற்கான சகோதரத்துவம் மலர வழிகாட்டும் உன்னத நாளாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இனிய பொங்கல் விழாவை பரந்த பார்வையோடு தமிழினத்தின் தலைநிமிர்வுக்காக தன் வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட மாமனிதர் தந்தை பெரியாரின் பெருவழியில், சமத்துவ இலக்கை எட்டுவதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் நமது பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களையும் அவற்றின் நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புகளையும் பாதுகாக்கும் மகத்தான பேரரண் பெரியார் என்பதை மீள் உறுதி செய்வோம். தன்மானத்தையும் தலைநிமிர்வையும் தமிழர்களுக்கு மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல்விழாவைக் கொண்டாடுவோம்.

தவெக தலைவர் விஜய்

பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள். 2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்! இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்

வரப்பை உயர்த்தினால் நீர் உயர்ந்து, நெல் செழித்து, வாழ்வு வளம் பெறும், நாடு நலம் பெறும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம், சிந்தனையின் தரத்தை உயர்த்துவோம். பொங்கல் திருநாளில் அன்பு பொங்கட்டும்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

“தமிழர்களின் பாரம்பரிய விழாவான திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில். தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இயற்கையையும். உழவுத் தொழில் செய்வோரையும் வணங்கும் இந்த விழா, வேளாண்மையின் மகத்துவத்தையும், தொழிலாளியின் பெருமையும் உணர்த்துகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கும் வாழ்க்கை முறையை பின்பற்றும் பொங்கல் திருநாளில், நமது உழைப்புக்குத் தக்க வெற்றியும், புகழும் கிடைக்க வேண்டும். இந்த இனிய பொங்கல் திருநாளில் உங்கள் வாழ்வில் செழிப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த நல்வாழ்வை கொண்டு வர அன்புடன் வாழ்த்துகிறேன்.

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தை சூழ்ந்திருக்கும் இருள் அகன்று, மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும். தை கொடுக்காததை தரணி கொடுக்காது என்பதே உண்மை. அதற்காக உழைக்க இந்த தைத்திருநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்களாகிய நாம் இயற்கையின் முன் உறுதியேற்றுக் கொள்வோம்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

புதிதாய் மலர்ந்திருக்கும் தமிழர்ப் புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மைகள் விளையட்டும்! கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக நம்மை ஆண்டு வரும் ஆட்சியாளர்களால் அன்னை தமிழ் நிலம் பாழ்படுத்தப்பட்டு, தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் தமிழினம் இப்புத்தாண்டில் மீட்சிப்பெற்று எழுச்சியுறட்டும். அதற்கான சிந்தனை மாற்றம் ஒவ்வொரு தமிழர் உள்ளத்திலும் உருவாகட்டும்!

வையம்போற்றும் ‘தை’ திருநாளில் தமிழர் வாழ்வு சிறக்கட்டும்! கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது – மத போதை, நிலவளச் சுரண்டல், கனிமவள கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பெண்ணடிமைத்தனம் இவைகளுக்கு எதிரான மாபெரும் அரசியல் புரட்சி இம்மண்ணில் பூக்கட்டும்!

தமிழ்மொழி மீட்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட, தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட, தமிழர்தம் கலை, இலக்கிய பண்பாடு, வரலாறு காத்திட, தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் தமிழ்த்தேசியப் புரட்சிப் பொங்கல்! உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்!

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோவை பீப் கடை விவகாரம்: பாஜக அலுவலகம் மீது வீசப்பட்ட மாட்டுக்கறி!

ஹெல்த் டிப்ஸ்: தினமும் இரவில் பால் குடிப்பது நல்லதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel