தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை என்று உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியமைக்க திட்டமிட்டது சிவசேனா.
ஆனால், சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக ஏற்காததால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் மூத்த அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே, திடீரென உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இந்துத்துவா கொள்கைகளை உத்தவ் தாக்கரே விட்டுக்கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார். 35 சிவசேனா எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்த ஷிண்டே முதல்வராக பதவியேற்றார்.
இதனால் யார் உண்மையான சிவசேனா என இரு அணிகளுக்கும் பிரச்சினை எழுந்து வந்தது.
இந்த விவகாரத்தை இன்று விசாரித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும், அவர்களுக்கு வில் அம்பு சின்னமும் சொந்தம் என அதிரடியாக அறிவித்தது.
இது மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடப் போவதாக தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, அதுவரை பொறுமையாக இருங்கள் என்று தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில் இன்று(பிப்ரவரி 18) தாக்கரேயின் குடும்ப இல்லமான மாடோஸ்ரீக்கு வெளியே பலம் காட்டும் வகையில் கூடியிருந்த பெரும் கூட்டத்தினர் மத்தியில் பேசினார்.
“தேர்தல் கமிஷன், பிரதமர் மோடியின் அடிமை, இதற்கு முன் நடக்காத ஒன்றைச் செய்துள்ளனர். கட்சியின் சின்னம் “திருடப்பட்டுள்ளது”, “திருடனுக்கு” பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் முடிவினை ஏற்றுக்கொள்ளுங்கள். இதனால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்று உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தேர்தல் ஆணையத்தின் முடிவு. இந்த முடிவினையும், புதிய சின்னத்தினையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
இழந்த பழைய சின்னத்தால் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாது. மக்கள் புதிய சின்னத்தினை ஏற்றுக்கொள்வார்கள்.
இந்திரா காந்தியும் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. முன்பு காங்கிரஸ் கட்சி பூட்டிய இரட்டைக் காளைகள் சின்னத்தை பயன்படுத்தி வந்தது.
பின்னர் அந்த சின்னத்தை இழந்து, புதிய சின்னமாக தற்போதிருக்கும் கை சின்னத்தை பெற்றது,மக்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.
அது போலவே மக்கள் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனாவின் இந்த புதிய சின்னத்தினை ஏற்றுக்கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கலை.ரா
“இந்த ஸ்லோகன்லாம் அரசியலுக்குத்தான் பொருந்தும்”: பழனிவேல் தியாகராஜன்
கொரோனா விடுமுறை : அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!