சனாதனம் குறித்த பாடப்பகுதியை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தைப் பற்றி பேசியிருந்தது தேசிய அளவில் பேசு பொருளானது.
உதயநிதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தொடர்ந்து சனாதனத்திற்கு எதிரான கருத்துகளை பேசிக் கொண்டு தான் இருப்பேன்” என்று உறுதியாக கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடநூலில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
தமிழக அரசின் 12ம் வகுப்பு ‘அறிவியலும் இந்திய பண்பாடும்’ எனும் பாட புத்தகத்தில் சனாதனம் என்றால் என்ன? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்து மதம் என்பதை சனாதனம் என்று கூறுவாரும் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சனாதனம் என்றால், அழிவில்லாத அறம் என்று பொருள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தமிழோடு விளையாடு என்ற தமிழ் மொழி விளையாட்டு நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (செப்டம்பர் 26) தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சனாதனத்தை கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் பாடநூலில் சனாதனம் இடம்பெற்றிருக்கிறது. இதனை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், “கடந்த ஆட்சி காலத்தில் 2018ஆம் ஆண்டு கொண்டு வந்த பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவதால் அடுத்தாண்டு பாடப்புத்தங்கங்கள் மாற்றியமைக்கப்படும். இவ்விவகாரம் குறித்து ஆராய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு முதல்வரை பொறுத்தவரை அறிவியல் சார்ந்த பாடத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு தான் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறோம்.
பாடப்புத்தகங்கள் மாற்றியமைப்பதற்கான கமிட்டி அறிக்கையை வைத்து அதற்கான முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மோனிஷா
திறமையான நீதிபதிகளை இழந்து வருகிறோம்: உச்சநீதிமன்றம்
இரவில் தூங்குவதற்கு முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?