ஓபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திர நாத்தின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை மலை கிராமம் உள்ளது. கேரள வனப்பகுதியை ஓட்டி இந்த கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தின் மேற்கு பகுதியில் தமிழக வனப்பகுதியான சொர்க்கம் காடுகளை சுற்றி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ப.ரவீந்திரநாத்துக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்த விவசாய நிலங்களை சுற்றி நான்கு புறமும் சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி ரவீந்திர நாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளதாகவும்,
இதுபற்றி தகவல் அறிந்து தேனி கோட்டத்திற்கு உட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் அச்சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது,
உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரன் என்பவரை தாக்கிவிட்டு சிறுத்தை
காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வனத்திற்குள் 27ஆம் தேதி தப்பி ஓடியதாக கூறப்பட்ட சிறுத்தை 28 ஆம் தேதி உயிரிழந்துவிட்டது என்றும்,
அதனை கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்த பின் உடனடியாக எரிக்கப்பட்டுவிட்டது’ எனவும் வனத்துறை தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்ததுடன் வனத்துறையினரின் நடவடிக்கையில் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் தற்காலிகமாக “ஆட்டுக்கிடை” அமைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் தான் 28ஆம் தேதி சிறுத்தையை கொன்றதாக கூறி அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து ரிமாண்ட் செய்யும் வரை வனத்துறையினர் அவரது குடும்பத்தினரிடம் கூட தகவல் தெரிவிக்கவில்லை என கால்நடை வளர்ப்பு சங்கம் குற்றம் சாட்டுகிறது.
கால்நடை வளர்ப்பு சங்கத்தின் சார்பாக சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று (அக்டோபர் 1) ரவீந்திர நாத்தின் தோட்டம் அமைந்துள்ள சொர்க்கம் காட்டுப்பகுதிக்கு நேரில் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்வேலி, சிறுத்தை எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில், தோட்டத்தின் உரிமையாளர் அமைத்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிர் இழந்துள்ளதாகவும்,
அதனை மறைப்பதற்காகவே ஓபிஸ் குடும்பத்தினருடன் வனத்துறையினரும் கூட்டு சேர்ந்து நாடகமாடி வருகின்றனர் என்றும்,
இந்த விவகாரத்தில் வனத்துறையினர் கைது செய்ய வேண்டுமென்றால் தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத்தை தான் கைது செய்திருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தனர்.
“வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூரிலிருந்து ஆட்டுக்கிடை அமைத்திருந்த விவசாயியை 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தாக்கி சித்திரவதை செய்து, அவர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
அலெக்ஸ் பாண்டியனை கைது செய்ததை கூட அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் வெளியே கசியாமல் ரகசியமாக வைக்க அனைத்து வேலைகளையும் செய்து வந்துள்ளனர்” என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்துள்ள விவசாய சங்கத்தினர், இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவ்விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபின், தங்கவேல் மற்றும் ராஜவேல் என்னும் இரு நபர்களை, ரவீந்திரநாத்துடைய தோட்டத்தின் மேலாளர்கள் எனக்கூறி வனத்துறையினர் இன்று (அக்டோபர் 2) அதிகாலை கைது செய்துள்ளனர்.
பொதுவாக புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் இறந்தால், அது குறித்து ஊடகங்களுக்கு முறையான செய்தி குறிப்பு அனுப்பும் வனத்துறையினர், இச்சம்பவத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வினோத் அருளப்பன்
2024ல் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வரலாம்: டிடிவி தினகரன்
ஓசி டிக்கெட் விவகாரம் : போராட்டம் அறிவித்த எஸ்.பி.வேலுமணி