லியோ சிறப்பு காட்சி… நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுப்படணும்: அமைச்சர் ரகுபதி

Published On:

| By Monisha

leo special show

லியோ சிறப்பு காட்சி விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (அக்டோபர் 17) தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் 19 ஆம் தேதி லியோ உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லியோ படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகள் வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசிடம் கேட்டிருந்தது. அதன்படி வரும் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை அனைத்து காட்சிகளையும் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டியோஸ், காலை 9 மணி முதல் இரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க முடியாது. எனவே அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுத்து வழக்கு விசாரணையை மாலை 4 மணிக்கு உயர்நீதிமன்றம்  ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

“திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி என்றால் ஒரு நாளுக்கு 5 காட்சி. அந்த சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை. காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள். 4 மணிக்கு திரையிடலாம் என்று நீதிமன்றம் சொன்னால் திரையிட வேண்டியது தான். நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் 6 காட்சிகள் என்று சிறப்பு காட்சிகள் கொடுக்கப்படுகிறது. அந்த 6 காட்சிகளுக்கு 18 மணி நேரம் வேண்டும். ஆனால் 3 மணி நேர படமாக இருந்தால் கூடுதல் நேரமும் தேவைப்படும். 6 காட்சிகள் ஸ்பெஷல் ஷோ கொடுக்கப்படுகிற போது முன்கூட்டியே ஆரம்பிக்க வேண்டும். ஆனால் 5 காட்சிகள் ஸ்பெஷல் ஷோ என்கிற போது 9 மணி முதல் 1.30 மணி வரை 15 மணி நேரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

எங்களை பொறுத்தவரை 6 காட்சிகள் வேறு, 5 காட்சிகள் வேறு. 6 காட்சிகள் கொடுக்கின்ற போது தான் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு என்ற பிரச்சனைகள் வருமே தவிர 5 காட்சிகள் என்பது 9 மணியில் இருந்து 1.30 மணிக்குள் முடித்து விடலாம்.

இதை தவிர்த்து கூடுதலாக காட்சிகள் கேட்கப்படுகின்ற போது தான் அதனை எப்படி கொடுப்பது என்று நிர்ணயிக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து 9 மணிக்கு திரையிடுவதை முன்கூட்டியே திரையிட அனுமதி கேட்கிறார்கள் என்று செய்தியாளர் கேட்டதற்கு, “9 மணி காட்சி என்றாலும் ரசிகர்கள் தான் அதிகளவு சென்று பார்க்க போகிறார்கள். எங்களை பொறுத்தவரை மாற்றுக் கருத்து கிடையாது. இது அரசாங்கம் எடுக்கும் முடிவு தானே தவிர, நாங்கள் என்றைக்குமே சினிமாவில் தடைகளைப் போட்டு திரையுலகத்தோடு எந்த விதமான எதிர்ப்பையும் பெற்று கொள்பவர்கள் கிடையாது.

திரையுலகம் எங்களுடைய நட்பு உலகம். எனவே திரையுலகத்தோடு நாங்கள் நெருங்கிய நட்பாக தான் இருப்போமே தவிர, அவர்களுடைய விரோதத்தை சம்பாதித்து கொள்ள எங்களுடைய தலைவர் விரும்பவே மாட்டார்” என்று தெரிவித்தார்.

கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “அவர்கள் அன்றைக்கு என்ன பாடுபடுத்தினார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் எப்போதும் நினைத்ததை போறபோக்கில் பேசிவிட்டு செல்வார்.

திரைத்துறையை முடக்க இந்த அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை. அவர்களையெல்லாம் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறோம், ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நலிந்த தயாரிப்பாளர்களின் படங்களை வெளியிடுவதற்கு இந்த அரசு எடுத்த முயற்சிகளை போல வேறு எந்த அரசும் எடுத்ததில்லை.

இன்றைக்கு திரையுலகம் செழிப்போடு இருக்கிறது என்றால் அது திமுகவின் மிகப்பெரிய சாதனை” என்று தெரிவித்தார் அமைச்சர் ரகுபதி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

AUS vs SL ODI World cup 2023: முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா

இரவோடு இரவாக லியோ டிக்கெட்டை விற்று முடித்த பிவிஆர்!

ஒரு பாலினத் திருமணம்- நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

விடுதலை 2 கெட்டப்: தயங்கிய விஜய் சேதுபதி… உற்சாகம் கொடுத்த வெற்றிமாறன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel