சட்டப்பேரவையை இன்று (அக்டோபர் 17) அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தது குறித்து சபாநாயகர் மு.அப்பாவு விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (அக்டோபர் 17) தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார்.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில், முக்கியப் பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த மழைக்கால கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் அடுத்த இரு நாட்களுக்கு (அக்டோபர் 18 மற்றும் 19) நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று (அக்டோபர் 17) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் மு.அப்பாவு,
“நாளை காலை (அக்டோபர் 18) 10 மணிக்கு சட்டமன்றக் கூட்டம் தொடங்கும்.
அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சட்டமன்றக் கூட்டம் முழுமையாக நடைபெறும்.
அதில், 2022-23ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான வரவு செலவு திட்டத்தினை தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்ய இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கான அறிக்கை, சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட இருக்கிறது.
அடுத்து, அக்டோபர் 19ம் தேதி, கூடுதல் செலவினத்துக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம், வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
தேவைப்பட்டால் ஏதேனும் அரசின் சட்ட முன் வடிவுகள் தரப்படுமாயின், அதுவும் ஆய்வு செய்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
ஆறுமுகசாமி மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோரின் அறிக்கைகள் நாளை (அக்டோபர் 18) சட்டமன்றத்தில் வைக்கப்படும். இன்று, (அக்டோபர் 17) அதிமுகவின் 51வது ஆண்டு தொடக்க விழா கூட்டம் நடைபெறுகிறது என எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தகவல் வந்தது. அதனடிப்படையில் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் கலந்துகொள்ளவில்லை என நான் நினைக்கிறேன்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
சட்டப்பேரவை கூட்டம்: எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பு!
மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்: சட்டப்பேரவை ஒத்திவைப்பு!