மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய நிபுணர் குழு அனுமதி வழங்கியதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு 234 அடி உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் இருந்து கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருந்தது.
மேலும் இதற்காக மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.
அதோடு பேனா நினைவுச் சின்னத்திற்கான சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழுவிடம் சமர்ப்பித்திருந்ததது.
இந்நிலையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு அனுமதி வழங்கி உள்ளது.
பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல்.
சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.
மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனை எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மக்கள் விரோத – சூழலியல் விரோத திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், ”கடலுக்குள் பேனா வைத்துப் பாருங்கள். ஒரு நாள் நான் வந்து உடைப்பேன்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம்: திருப்பூர் துரைசாமி
பேனா நினைவுச் சின்னம்… தவறான முன்னுதாரணம்: பூவுலகின் நண்பர்கள் எதிர்ப்பு!