அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் சாதி குறித்த சட்டப் போராட்டம்! பாகம் 3.

Published On:

| By Minnambalam

கார்த்திகேயன் சண்முகம்

தமிழாக்கம்: அருள்மொழி

HAF-ன் தொடர்ச்சியான, சந்தர்ப்பவாத இரட்டை நிலைப்பாட்டை இன்னும் பல்வேறு உதாரணங்கள் மூலம் காணலாம்.

1 – HAF-ன் சமீர் கால்ரா, அமெரிக்காவில் வேலை செய்யும் இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள், தாங்கள் சாதி, மதம் பற்றிய “வெறுப்புணர்வைத் தூண்டும் கேள்விகளை” இந்தியரல்லாத சக ஊழியர்களிடமிருந்து எதிர்கொள்வதாகவும், இது அவர்களுக்கு மன உளைச்சலைத் தருவதாகவும் குற்றம் சாட்டுகிறார். கல்ராவின் இந்தக் குற்றச்சாட்டுகளை, பிற இந்திய ஊழியர்கள் இப்படியான கேள்விகளை எதிர்கொண்டதற்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஓரிடத்தில் பணிபுரியும்போது, நாடு, இனம், மதம், பண்பாடு குறித்த உரையாடல்களை மேற்கொள்வது இயல்பானதாகும். அத்தகைய உரையாடல்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அப்படியில்லாமல், இனவெறி அல்லது வெறுப்பு போன்ற கருத்துகள் வரும்பட்சத்தில், அவற்றைத் தீர்த்துவைக்க பணியிடம் சார்ந்த கொள்கைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. சிஸ்கோவின் மனிதவளத்துறை, தங்களது கொள்கைகளில் சாதி சார்ந்த பாதுகாப்பு வரையறுக்கப்படாததால், புரிதலில் ஏற்படக்கூடிய இடைவெளி பற்றித் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2 – HAF கலிபோர்னியாவில் உள்ள அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்கிறது. ஆனால், இந்து மதத்தின் பன்முகத்தன்மையைக் குறிப்பிட்டு, Cisco வழக்கில் சாதிப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவரும் இந்துதான் என்பதையும் சுட்டிக்காட்டி, HAF-ன் அனைத்து இந்துக்களுக்குமான சுய பிரதிநிதித்துவத்தை CRD கேள்விக்கு உட்படுத்துகிறது.

“குறைந்தபட்சம் கலிபோர்னியாவில் வசிக்கும் சில இந்து அமெரிக்கர்களாவது … HAF-ன் நோக்கத்துடன் ஒன்றாத திசையில் செல்லலாம். அவர்கள் இந்த சாதிப் பாகுபாடுகளைத் தடுக்கும் / சரிசெய்யும் முயற்சிகளால் பயனடையக்கூடும்” என CRD வாதிடுகிறது.

3 – HAF-ன் இணை நிறுவனரான மிஹிர் மேகானி, சாதி தொடர்பான கருத்துகள் தங்கள் மீது களங்கமேற்படுத்துவதாகவும், அதனால் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறுகிறார். ஆனால், ஒரு மருத்துவரான அவர், அமெரிக்க தேசிய நூலகப் பதிப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள, பொது சுகாதாரத்துறையின் கட்டுரையில் (National Library of Medicine) இடம்பெற்றுள்ள “சுகாதாரத் திட்டங்களை அணுகும் வசதி, சாதி அடிப்படையில் சிலருக்குக் கிடைப்பதில்லை” என்கிற கருத்தை கவனிக்கத் தவறிவிட்டார். மே 2021-ல் வெளிவந்த இந்தக் கட்டுரை, தெற்காசியாவில் நடைபெறும் சாதி ரீதியிலான ஒதுக்குதல் மற்றும் சுகாதாரம் சார்ந்த பாகுபாடு பற்றிய ஒரு முறையான ஆய்வு ஆகும். இந்த ஆய்வு தெற்காசியா முழுவதும் ஆரம்ப சுகாதாரம் சார்ந்த சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை விரிவான முறையில் ஆவணப்படுத்துகிறது.

இக்கட்டுரை, “இந்த [சாதி] அமைப்பு 4 படிநிலைகளைக் கொண்டது. ‘பிராமணர்கள்’ எனப்படும் பூசாரிகள்; ‘க்ஷத்திரியர்கள்’ எனப்படும் போர்த்தொழில் புரிவோர்; ‘வைசியர்கள்’ எனப்படும் வணிகர்கள் மற்றும் ‘சூத்திரர்கள்’ எனப்படும் வேலையாட்கள். இவர்கள் எல்லோருக்கும் கீழான நிலையில் அதிசூத்திரர்கள் எனப்படும் தலித் மக்கள் (தீண்டப்படாதோர்).
இந்து மதம் கடுமையான ஆணாதிக்க அடிப்படை கொண்ட மதம். இந்து பெரும்பான்மை சமூகத்தில் பாரம்பரியமாக பெண்களின் நிலை ஆண்களை விட கீழானதாகவே உள்ளது” எனக் குறிப்பிடுகிறது. இத்தகைய தகவல்களை, களங்கம் ஏற்படுத்துவதாகக் கருதுவதைவிட, இத்தகைய ஏறத்தாழ்வுகளைக் குறித்த புரிதலை ஏற்படுத்தி அதைக் களைவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.



ஏப்ரல் 2023-ல், CRD சுந்தர் மற்றும் ரமணா இருவரையும் சிஸ்கோ வழக்கில் இருந்து நீக்கியதோடல்லாமல், டிசம்பர் 2023-ல் இந்து மதத்துடன் சாதியை இணைக்கும் குறிப்புகளையும் நீக்கிவிட்டது. நீதிமன்றம் இவ்வாறு நியாயத்துடன் நடந்துகொண்டபோதிலும், வழக்கில் வாதிகளின் பாத்தியதையில் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஏனெனில், இப்போது நீக்கப்பட்டிருந்தாலும்கூட, வழக்கின் ஆரம்பத்தில் இந்து மதத்துடன் சாதியை தொடர்புபடுத்தியதன் காரணமாக, தங்கள் “ஆழ்ந்த மன உளைச்சலுக்கும், உளவியல் தாக்குதலுக்கும் உள்ளானதாகவும், தங்களது ஆன்மிக நிலை காயப்பட்டதாகவும்” வாதிகள் கூறுகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை? தங்களை இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அமெரிக்க பார்ப்பனர்களுக்காக தனிப்பட்ட திருமண தளம் உள்ளது, அங்கு பல பார்ப்பனர்கள் “விருப்பத்தின் பேரில்” சொந்த சாதிக்குள் பொருத்தம் பார்த்து சம்பந்தம் செய்து கொள்கின்றனர். இந்துக் கோயில்கள் உபநயனம் போன்ற விழாக்களை வெளிப்படையாக நடத்துகின்றன. பார்ப்பன சிறுவர்களுக்கு காயத்ரி மந்திரம் சொல்லி பூணூல் அணிவிக்கப்படும் சடங்குக்கு 251 டாலர்கள் மட்டுமே என இந்துக் கோயில்கள் தங்கள் இணையதளத்தில் விளம்பரப்படுத்துகின்றன. இதுபோன்ற சாதி அடிப்படையிலான மதச் சடங்குகள் வாதிகளுக்கும் HAF போன்ற அமைப்புகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தவில்லையா? அவர்கள் மீது வழக்கு போடுவதை விடுங்கள், இத்தகைய இணைய தளங்களையும் அவை நடத்தும் விழாக்களையும் ஏன் இவர்கள் ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை?

HAF-ன் இந்த வழக்கே சிஸ்கோ வழக்கை தடம்புரளச் செய்வதற்காக, மத சுதந்திரத்தை முகமூடியாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திருட்டுத்தனமான ஏமாற்று வித்தையாகும். மத சுதந்திரத்துக்கு பங்கம் வந்துவிட்டதாகப் பொதுவெளியில் கதறிக் கூச்சலிடுவது ஒரு புகைச்சலை ஏற்படுத்தி கவனத்தைத் திசை திருப்பி, சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதை தடுப்பதற்காகவே – சிஸ்கோ வழக்கிலும், அதற்கு அப்பாலும்.

அமெரிக்காவில் சாதிப்பாகுபாட்டுக்கு எதிரான சட்டரீதியான முயற்சிகள் நீதிமன்றத்தில் வழக்குகளை சந்திப்பது இது முதல்முறை அல்ல. இதற்கான முன்னுதாரணங்கள் பல உள்ளன.

அக்டோபர் 2022-ல், இரண்டு கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழக (CSU) பேராசிரியர்கள், பல்கலைக்கழகத்துக்கு எதிராக அதன் பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையில் சாதியைச் சேர்த்ததற்காக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர். அவர்கள் இந்தக் கொள்கை இந்து மதத்தை பின்பற்றுவோரை களங்கப்படுத்துகிறது என வாதிட்டனர். நவம்பர் 2023-ல் மத்திய நீதிமன்றம் அவ்வழக்கில் கூறப்பட்டுள்ள பாதிப்புகள் யூகமானவை எனவும் ஸ்தூலமான பாதிப்புகள் எதுவும் காணப்படவில்லை எனவும் தீர்ப்பளித்து அவ்வழக்கை தள்ளுபடி செய்தது. பிப்ரவரி 2023-ல், வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகர மன்றம், இனம், மதம், பாலினம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பட்டியலில் சாதியையும் ஓர் அங்கமாகச் சேர்க்கும் சட்டத்தை இயற்றியது. அதன்மீதான தாக்குதலாக மே 2023-ல் இது அமெரிக்க அரசியலமைப்பிற்கு எதிரானது என மேலே கூறப்பட்ட அதே அடிப்படைகளில் வழக்கு பதியப்பட்டது. ஆனால், மார்ச் 2024-ல், நீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லும் என உறுதி செய்தது. அத்தீர்ப்பில் பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்புகளை வலுப்படுத்துவதே அச்சட்டத்தின் நோக்கமே தவிர, மத சுதந்திரத்தை மீறுவது அல்ல எனவும் வலியுறுத்தியது.

மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சாதியால் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை அரசு பாதுகாத்துள்ளது. அமெரிக்காவில் சாதி என்பது உண்மையாக இருந்தாலும், வேலை செய்யும் இடங்கள் முதல் சமூக அமைப்புகள், குடியிருப்புகள், இணைபழகு தளங்கள், செயலிகள் (Dating sites, Apps) வரை பல்வேறு துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், சாதி இந்து அமைப்புகளும், அதுசார்ந்த தனிநபர்களும், அரசு வழங்க முன்வரும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பை முறியடிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். பல்கலைக்கழக, நகர மற்றும் பெருநிறுவன மட்டங்களில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அப்பால், பொதுவெளியில் ஒதுக்கப்படுதல், வாய்ப்புகளை மறுத்தல் என வெளிப்படும் சாதிப் பாகுபாட்டிலிருந்து ஒடுக்கப்பட்டவர்களை உண்மையிலேயே பாதுகாக்க நாடு முழுமைக்குமான ஒரு சட்டத்தால் மட்டுமே முடியும்.

இந்தப் பின்னணியில், CRD மீது HAF தொடுத்த வழக்கின் இந்த விசாரணை மிக முக்கியமானதாகும். அதில் ஒரே விதமான திரிபு வாதங்கள் மட்டுமே வைக்கப்படுவதால் அவ்வழக்கை இனியும் விசாரிக்க ஒன்றுமில்லை எனவும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காமல் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் CRD  கோரிக்கை வைத்து, அதை நீதிமன்றம் ஆலோசனைக்கும் எடுத்துக்கொண்டுள்ளது. இது Cisco சாதிப் பாகுபாட்டு வழக்கின் பாதையை தெளிவுபடுத்துவது மட்டுமல்லாமல், சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக நாடு தழுவிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு ஆதரவாக பொது சமூகத்தில் புரிதலை ஏற்படுத்தி, அதற்கான கருத்தியல் ரீதியான ஆதரவையும் அதிகரிக்கிறது.

பாகம் 1 / பாகம் 2

கார்திகேயன் சண்முகம் அவர்களின் இக்கட்டுரை, தி வயர் தளத்தில், நவம்பர். 17, 2024 அன்று பதிப்பிக்கப்பட்டது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share