அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் சாதி குறித்த சட்டப் போராட்டம்! பாகம் 2.

Published On:

| By Minnambalam

கார்த்திகேயன் சண்முகம்

தமிழாக்கம்: அருள்மொழி

ஃபெடரல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கின் முதல் சுற்றின் படுதோல்விக்குப் பிறகும், HAF சாண்டா கிளாரா உயர் நீதிமன்றத்தில் சிஸ்கோ வழக்கில் தொடர்ந்து தலையிட்டது. இதன் விளைவாக ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு விசாரணைகள் நடக்கின்றன

1 – மாநில நீதிமன்றத்தில் CRD சாதிப்பாகுபாடு தொடர்பான வழக்குகளை நடத்தக்கூடாது என HAF தொடர்ந்த வழக்கு.

2 – உயர்நீதிமன்றத்தில் நடக்கும் Cisco வழக்கில், HAF தானே முன்வந்து இடையீடு செய்யக்கோரிய வழக்கு.

செப்டம்பர் 2023: HAF, முதல் திருத்தப்பட்ட புகாரைப் (FAC) பதிவு செய்தது. CRD மீது நேரடியாக வழக்குத் தொடுப்பதற்குப் பதிலாக, HAF-ஐச் சார்ந்த மற்றும் சாராத சிலர், பெயர் வெளியிட விரும்பாத சில நபர்கள் மற்றும் முன்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு பிரதிவாதிகள் ஆகிய அனைவரும் இணைந்து இந்த திருத்தப்பட்ட புகாரைப் பதிவு செய்தனர்.

ஜனவரி 2024: சாண்டா கிளாரா (மாநில) நீதிமன்றம் HAF-ன் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.  

“HAF-ன் புகாரில் சொல்லப்பட்டிருப்பது போல, CRD எந்தவொரு தனிமனிதரையும் தனது மத நம்பிக்கைகளுக்கு எதிரான செயல்களைச் செய்யும்படி வற்புறுத்தியதாகவோ, அல்லது அவர்களின் மத சுதந்திரத்தைத் தடுத்ததாகவோ சொல்ல எந்தவொரு ஆதாரமும் இல்லை” எனத் தெளிவாக தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், “சிஸ்கோவில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுப்பதே வழக்கின் முக்கிய நோக்கமாகும். இப்படிப்பட்ட வழக்கு, ஜாதி அமைப்பை இந்து மதத்துடன் தொடர்புபடுத்தியது தவறாகவே இருந்தாலும், அது எப்படி இந்துக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கும் என்பதை காண முடியவில்லை” எனவும் கண்டிப்புடன் கூறியுள்ளது.

மே 2024: ஃபெடரல் நீதிமன்றத்தில் உள்ள திருத்தப்பட்ட புகாரில், CRD வாதிகள் உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல் புனைப்பெயர்களைப் பயன்படுத்துவதை எதிர்த்து முறையீடு செய்தது. அந்த வகையான பயன்பாட்டுக்கான சட்ட நியாயங்கள் எதுவுமில்லை என வாதிட்டது.

ஆகஸ்ட் 2024: நீதிமன்றம் புனைப்பெயர்களில் தொடர வாதிகளின் கோரிக்கையை மறுத்து, CRD-க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, 2024 ஆகஸ்டில் இரண்டாவது திருத்தப்பட்ட புகாரை (SAC) HAF தாக்கல் செய்தது. இதில் இரண்டு வாதிகளின் உண்மையான பெயர்களைச் சேர்த்தும், மூன்றாவதாக புனைப்பெயரில் இருந்த வாதியின் பெயரைப் பட்டியலில் இருந்து நீக்கியும் இருந்தது.

முதல் மற்றும் இரண்டாவது திருத்தப்பட்ட புகார்களில் சிறிய வேறுபாடுகள் மட்டுமே இருந்தபோதிலும், இரண்டிலும் உள்ள முக்கிய வாதங்களையும் எதிர்வாதங்களையும் சுருக்கமாக மதிப்பாய்வு செய்வோம்.

மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்ற போர்வையில், சிஸ்கோ வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை தடுக்க HAF எவ்வாறு ஏமாற்று வாதங்களை முன்வைக்கிறது என்பதையும் இங்கே காண்போம்.

திருத்தப்பட்ட புகார், முதல் புகாரிலிருந்த அதே வாதங்களைத்தான் மீண்டும் முன்வைக்கிறது. இந்துக்கள் தங்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்த நிர்பந்திக்கப்படலாம் என்றும், இது அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிரிவில் வருவதால், அது இந்துக்களின் வேலைவாய்ப்புகளை பாதிக்கக்கூடும். மேலும், இவ்வழக்கு இந்து மதத்தையும் சாதியையும் இணைப்பதால், ஊழியர்கள் பிற சாதிகளைச் சேர்ந்த நபர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கக்கூடும் எனவும், இதனால் முதலாளிகளுக்கு பணியிடச்சுமை அதிகரிக்கிறது எனவும் வாதங்களை முன்வைக்கிறது. சிஸ்கோ வழக்கின் விளைவாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நற்பெயருக்கு பங்கம், பதற்றம், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக CRD கீழ்கண்ட வாதங்களை முன்வைக்கிறது.

1 – சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைத் தடுப்பதும் நிவர்த்தி செய்வதும், அமெரிக்கர்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் பணியைச் செயல்படுத்துவதற்கான தனது அரசியலமைப்பின் கடமைக்கு உட்பட்டது.

2 – வாய்ப்பு மறுக்கப்படுதல், நற்பெயருக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் உளவியல் ரீதியான தாக்கங்கள் ஆகியவை ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகின்றன. வழக்காடு மன்றத்தில் நிற்பதற்குத் தேவையான தூலமான பாதிப்புகள் காட்டப்படவில்லை.

3 – மனிதவளம் திசை திருப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிறுவுமளவுக்கான பாதிப்புகளை நிறுவன ரீதியாக HAF சந்திக்கவில்லை.

இறுதியாக, சுதந்திரமாக செயல்படுதல், நிறுவனமயமாதல், சம பாதுகாப்பு, உரிய செயல்முறைக்கான உரிமை போன்ற உரிமைகளைப் பாவிக்கத் தடங்கலாக இருந்ததென்பது பொதுவான குற்றச்சாட்டே தவிர, அவற்றை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

“CRD  யாரையும் அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு விரோதமான செயல்களைச் செய்யும்படி வற்புறுத்தியது அல்லது அவர்களின் மதத்தைப் பின்பற்றுவதைத் தடுத்தது என்பதைக் காட்டும் எந்தத் தரவுகளையும் HAF-ன் புகார் சமர்ப்பிக்கவில்லை. CRD-ன் அமலாக்க நடவடிக்கையின் நோக்கமானது, சிஸ்கோவில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதே ஆகும். இது, அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதைத் தடுக்கவோ அல்லது சுமையாக்கவோ செய்யாது.”

14 ஆண்டுகளுக்கு முன், டிசம்பர் 2014-ல் இந்து மதத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற கருத்தில் தனது கொள்கை ஆவணம் ஒன்றை HAF வெளியிட்டது. அதில் “இந்து சமுதாயத்தில் ஜாதி எழுச்சி பெற்றது என்பதையும், சில இந்து நூல்கள் மற்றும் மரபுகள் பிறப்பின் அடிப்படையிலான படிநிலை மற்றும் சாதிய சார்புகளை நியாயப்படுத்துகின்றன என்பதையும், அதைக் குறைக்க இந்து சமூகத்திலிருந்து கணிசமான முயற்சிகள் இருந்தபோதிலும் அது நிலைத்திருக்கிறது என்பதையும் இந்துக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஆவணம் பெரும்பான்மை இந்துக்களிடமிருந்து வலுவான எதிர்ப்பைச் சந்தித்தது. அவர்கள், HAF தனது மத சுதந்திரம் மற்றும் உணர்வுகளை மீறுவதாக வாதிட்டதோடல்லாமல், இந்து மதத்தைப் பற்றிப் பேச HAF-க்கு என்ன அதிகாரம் உள்ளது என்கிற கேள்வியையும் எழுப்பினர். அனைத்து ஸ்மிருதிகளும் இந்து மதத்தின் ஒருங்கிணைந்த பகுதி எனவும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், HAF தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதற்கு பதிலாக, தனது இணைய தளத்திலிருந்து அந்த ஆவணத்தை அகற்றிவிட்டது.

இப்போது, CRD சாதியப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், HAF இந்து மதத்திற்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என முதலைக் கண்ணீர் வடிக்கிறது. HAF முதலில் வெளியிட்ட கொள்கை ஆவணத்தின்படி பார்த்தால், அது CRD இன் முயற்சிகளுக்கு எதிராக இருந்திருக்காது, ஆதரவு நிலைப்பாடு எடுக்கவேண்டி இருந்திருக்கும்.

Cisco வழக்கில் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்ட ரீதியான நிவாரணத்தை ஒடுக்கப்பட்டவர்கள் பெற்றுவிடக் கூடாது என்கிற HAF-ன் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதன் மூலமாக, இந்துத்துவவாதிகள் எப்படி ஒடுக்கப்பட்டவர்கள், சட்டரீதியான பாதுகாப்பைப் பெற்றுவிடாமல் தங்களின் பிடியிலேயே வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்பதை அறியலாம். சாதி மறுப்பை தங்களுக்கு எதிரான பாகுபாடுபோலச் சித்தரிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை, அவர்கள் SB-403-ஐ (சாதிப்பாகுபாட்டுக்கு எதிரான சட்டரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்ட முன்மொழிவு) எதிர்த்ததில் இருந்தே புரிந்துகொள்ளலாம்.

சிஸ்கோ வழக்கில் “சாதிப் பாகுபாடு தடை செய்யப்படவில்லை” என வாதிட்டபோதிலும், HAF,  SB-403 தெற்காசிய மக்களை மத வெறியர்களாகவும், கடத்தல்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் சித்தரிப்பதாக பொய்ப் பிரச்சாரம் செய்தனர். அப்படி சொன்ன பக்கங்களை காரியம் முடிந்த பிறகு தங்கள் இணைய தளத்திலிருந்து நீக்கியும் விட்டனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது… இந்துத்துவவாதிகள் வழக்கு வரும்போது “சாதி பாதுகாக்கப்பட்ட பிரிவு இல்லை, அதனால் தங்களை தண்டிக்க முடியாது” என்று வாதிடுவதும், அதே நேரம் அதனை பாதுகாக்கப்பட்ட சட்டப்பிரிவாக ஆக்க முன்மொழிவுகள் (SB-403) கொண்டுவரப்படும்போது தன்னிடமுள்ள மொத்த பலத்தையும் பயன்படுத்தி அதை முறியடிப்பதையும் திட்டமிட்டுச் செய்கின்றனர்.

HAF-ன் தொடர்ச்சியான, சந்தர்ப்பவாத இரட்டை நிலைப்பாட்டை இன்னும் பல்வேறு உதாரணங்கள் மூலம் காணலாம் ……..

நாளை தொடரும்

பாகம் 1

கார்திகேயன் சண்முகம் அவர்களின் இக்கட்டுரை, தி வயர் தளத்தில், நவம்பர். 17, 2024 அன்று பதிப்பிக்கப்பட்டது.



செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share