கார்த்திகேயன் சண்முகம்
“கலிஃபோர்னியாவில் வசிக்கும் சில இந்து அமெரிக்கர்களாவது… HAF-ன் நோக்கத்துடன் முரண்படக்கூடிய ஆர்வம் கொண்டிருக்கலாம். ஏனெனில், அவர்கள் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைத் தடுக்கும் / சரிசெய்யும் முயற்சிகளால் பயனடையக்கூடும்.” – கலிபோர்னிய சிவில் உரிமை ஆணையம்.
தமிழாக்கம்: அருள்மொழி
செப்டம்பர் 2022-ல், இந்து அமெரிக்கன் ஃபவுண்டேஷன் (HAF) கலிபோர்னியா சிவில் உரிமைத் துறைக்கு (CRD) எதிராக அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை விரைவில் வரவிருக்கிறது. அது கடைசி விசாரணையாகக்கூட இருக்கலாம். சிஸ்கோ வழக்கைப் போலல்லாமல், இந்த வழக்கு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் குறைந்த அளவிலான ஊடக கவனத்தையே பெற்றுள்ளது. ஏனெனில் இதுவரையிலான தீர்ப்புகள் அனைத்தும் இந்துத்துவவாதிகளுக்கு எதிராகவே அமைந்துவிட்டதால், அதுகுறித்த பொது கவன ஈர்ப்பைத் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கு Cisco வழக்கோடு தொடர்புடையது என்பது மட்டுமல்ல, சாதிப் பாகுபாடு குறித்த வழக்குகளைத் தொடர்ந்து நடத்த CRD-க்கு உள்ள சட்ட ரீதியான அதிகாரத்தையும் எதிர்த்து அறைகூவல் விடுக்கிறது.
ஜூன் 2020: சிஸ்கோ நிறுவனம், ஒரு தலித் ஊழியர் மீது சாதிப்பாகுபாடு காட்டியதாக CRD ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. அவ்வழக்கு பின்னர் கலிபோர்னிய மாகாணத்தின் சாண்டா கிளாரா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஜாதி அடிப்படையிலான பாகுபாடு, ஒரு வழக்காக நீதிமன்றத்துக்கு வருவது இதுவே முதல் முறை. இதற்கான முன்னோடி வழக்குகள் இல்லாத காரணத்தால் சாதி என்றால் என்னவென்று வரையறுக்கவேண்டிய நிலையில், இந்தியாவின் சாதி என்பது, பிறப்பின் அடிப்படையில் ஒருவரின் சமூக நிலையை நிர்ணயிக்கும் இந்து மதத்தின் கடுமையான படிநிலை அமைப்பாகும்… ஒருவர் பிறக்கும் சாதியை சாகும் வரை மாற்றவியலாது. இந்தப் படிநிலையின் அடிமட்டத்திலுள்ளோர் தலித் மக்கள் ஆவர். அவர்கள் பாரம்பரியமாக ‘தீண்டாமை’ நடைமுறைகளுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சட்ட மற்றும் சமூக விதிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தப் புகாரில், இந்து மதத்தை ஒட்டிய விளக்கமான இந்த ஒற்றைக் குறிப்பு, சாதி மற்றும் அதன் தோற்றம் பற்றிய முழுமையான பகுப்பாய்வை நோக்கமாகக் கொண்டதல்ல. இந்த வழக்கின் இடம், பொருள், ஏவல் கருதி, சாதி அமைப்பைப் பற்றிய மேற்குலகினரின் புரிதலுக்கான ஒரு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது. அதாவது, நடந்துள்ள சாதிப்பாகுபாட்டில், சாதி என்றால் என்னவென்று விளக்குவதே அதன் நோக்கமன்றி, சாதி இந்துமதத்தின் ஒரு பகுதியா என நிறுவுவது அவ்வழக்கின் நோக்கமல்ல.

ஜனவரி 2021: இந்து அமெரிக்கன் ஃபவுண்டேஷன் (HAF) சிஸ்கோ வழக்கில் மூன்று காரணங்களை முன்னிட்டு இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
1 – சாதியை இந்து மதத்துடன் இணைத்திருப்பதால், சட்டச் சிக்கல்களுக்கு பயந்து பெருநிறுவனங்கள் இந்துக்களை வேலையில் அமர்த்த மாட்டார்கள்.
2 – பணியாளர்கள் பிற சாதிகளைச்சேர்ந்த அதிகாரிகளிடமோ, சக ஊழியர்களுடன் பணி செய்யவோ மறுக்கக் கூடும்.
3 – நிறுவனங்கள் தெற்காசியாவைச் சேர்ந்த ஊழியர்களின் மதம் பற்றி விசாரிக்க வேண்டிய அழுத்தத்துக்கு ஆட்படக்கூடும். அதனால் மத நம்பிக்கைகளை வெளியிடச் சொல்வதன் மூலம், பணியாளர்களின் மத சுதந்திரம் மீறப்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்காவில் உள்ள “அனைத்து இந்துக்களின்” சார்பாகவும், HAF இந்த வழக்கில் தலையிடுவதாக அறிவித்துக்கொண்டது. ஆனால், நீதிமன்றத்தில் அவர்களின் வாதம் உண்மை, பிறரை காயப்படுத்தாமல் இருத்தல், இரக்கம், சமத்துவம், பெருந்தன்மை, ஒப்புமையுடன் இறைமையைப் போற்றுதல் என்பது போன்ற தத்துவங்களை முன்னிட்டு இருந்ததே தவிர, இவ்வழக்கின் சாட்சியங்களின் அடிப்படையில் இருக்கவில்லை.
மார்ச் 2021: Cisco நிறுவனம் நீதிமன்றத்துக்கு வெளியே, பாதிக்கப்பட்டவருடன் நேரடியாக நடுவர் மன்றம் மூலம் தீர்த்துக்கொள்ளவும், CRD-யை இவ்வழக்கிலிருந்து நீக்க வேண்டும் எனவும் மேல்முறையீடு செய்ததால், அவ்வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டது. எனவே HAF-ன் இடையீட்டு மனுவும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இங்கே முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய செய்தி, இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர் இந்தப் புகாரைப் பதிவு செய்யவில்லை என்பதே. பாதிக்கப்பட்டவர் சார்பாக CRD இவ்வழக்கைப் பதிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 2022: மேல்முறையீட்டு நீதிமன்றம் சிஸ்கோவின் நடுவர் மன்றக் கோரிக்கையை நிராகரித்து, CRD-க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. எனவே விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
செப்டம்பர் 2022: HAF, CRD-க்கு எதிராக அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில், அதே அடிப்படையில் ஒரு புதிய வழக்கைத் தாக்கல் செய்தது.
ஏப்ரல் 2023: வழக்கு பணியிடப் பாகுபாடு தொடர்பானது என்பதால், அதை உறுதி செய்வது, சிஸ்கோ நிறுவனத்தின் பொறுப்பு என்னும் அடிப்படையில், இவ்வழக்கில் இணைக்கப்பட்டிருந்த தனிநபர்களான சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்ல ஆகியோரை விடுவித்தது.
ஆகஸ்ட் 2023: கிட்டத்தட்ட ஓராண்டு விசாரணைக்குப் பின் ஃபெடரல் நீதிமன்றம், HAF-ன் இந்தப் புகாரைத் தள்ளுபடி செய்தது. அத்தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு அடிப்படைக் காரணங்கள் இவை:
1 – HAF, அமெரிக்காவில் உள்ள அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, இதனால் தானே முன்வந்து இவ்வழக்கில் பிணைத்துக்கொள்வதற்கான அடிப்படைகள் போதாது.
2 – சிஸ்கோவில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதைத் தடுக்கவோ அல்லது சுமையாக்கவோ செய்யாது.
எனினும், HAF தன்னை இவ்வழக்கில் பிணைத்துக்கொள்ள வேறு ஏதேனும் நியாயமான காரணங்கள் இருப்பின், புகாரை அதனடிப்படையில் திருத்திக்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்தது.
ஃபெடரல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கின் முதல் சுற்றின் படுதோல்விக்குப் பிறகும், HAF சாண்டா கிளாரா உயர் நீதிமன்றத்தில் சிஸ்கோ வழக்கில் தொடர்ந்து தலையிட்டது. இதன் விளைவாக ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு விசாரணைகள் நடக்கின்றன
நாளை தொடரும் …
கார்திகேயன் சண்முகம் அவர்களின் இக்கட்டுரை, தி வயர் தளத்தில், நவம்பர். 17,
2024 அன்று பதிப்பிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை டூ பினாங்கு தீவிற்கு இன்று முதல் நேரடி விமான சேவை!
நம்பிக்கை என்றால் உண்மையில் என்ன?
டாப் 10 நியூஸ் : குவைத் செல்லும் பிரதமர் மோடி முதல் பூமிக்கு அருகில் 2 சிறுகோள்கள் வரை!
கராத்தே படிச்சிருப்பாங்க போல… பஸ்சில் குடிகாரர் சில்மிஷம்: கன்னத்தில் 26 முறை அறைந்த பெண்!
பெண் வழக்கறிஞருக்கு ஆபாசமான பதில்… மீண்டும் கைதான ரங்கராஜன் நரசிம்மன்
‘என்ன தகப்பா, இதெல்லாம்; அவரை மன்னியுங்கள்’- தந்தை குறித்து அஸ்வின்