இடதுசாரிகளும் இடஒதுக்கீட்டுக் கொள்கையும்

அரசியல் சிறப்புக் கட்டுரை

எஸ்.வி.ராஜதுரை

பொருளாதாரரீதியில் நலிவுற்ற முற்போக்கு சாதியினர் உள்ள பிரிவுக்கு இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மிக மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசிய தோழர் பாலகிருஷ்ணன், தனது கட்சி 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து இதை வலியுறுத்தி வந்ததாக பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

குறைந்தபட்சம் அந்த நலிவுற்றோர் என்பதற்கான வருமான வரம்பு ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சம் என்பதைக்கூட அவர் கேள்விக்குட்படுத்தவில்லை. மேலும், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு முறை சரியானதுதான் என்றாலும் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தை கருத்தில் கொண்டு முற்படுத்தப்பட்ட சாதியினரில் உள்ள நலிவுற்ற பகுதியினருக்கு இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை என்கிறார்.

மார்க்சிஸ்ட் என்று தன்னை கூறிக்கொள்ளும் தோழர் பாலகிருஷ்ணன், இந்தியாவில் சாதி அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டும்.

பொருளாதாரரீதியாக நலிவுற்றோர் என்பதைப் பார்ப்போமேயானால், அவர்கள் தலித் மக்களிடையேயும் பழங்குடி மக்களிடையேயும் இதர பிற்பட்ட வகுப்பினரிடையேயும்தான் மிக மிக அதிகமாக உள்ளனர் என்பது இந்தத் தோழருக்கு தெரியாதா?

Leftists and Reservation Policy

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு என்பது சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே என்று தெளிவாக சொல்லப்பட்டு இருப்பதும் முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டை தாண்டக்கூடாது என்பது சொல்லப்பட்டு இருப்பதும் தோழருக்கு தெரியாதா?

இப்போது அந்த 50 விழுக்காட்டில் இருந்துதான் தோழர் பாலகிருஷ்ணன் பச்சாதப்படும் உயர் சாதியை நிறை சேர்ந்த 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள ’ஏழைகளுக்கு’ அரசுப் பணிகளிலும் கல்விக்கூடங்களிலும் பிரித்துத் தரப்படும் என்பதும் இதன் காரணமாக ஏற்கெனவே இட ஒதுக்கீடு கோட்டாவை முழுமையாகப் பெற முடியாமல் இருந்த எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்பட்ட சமுதாயத்திற்கு பெரும் கேடு ஏற்படும் என்பதுமான அடிப்படை அறிவுகூட மார்க்சிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய ஒருவருக்குத் தெரியாதா?

சங் பரிவாரத்தின் திட்டம்

இந்தித் திணிப்புக்கு எதிராக அவரது கட்சியும் அக்கட்சியின் வெகுமக்கள் அமைப்புகளும் கருத்தரங்குகள், போராட்டங்கள் ஆகியவற்றை நடத்துகின்றன. மார்க்சிய இயங்கியலின் அடிப்படைகூட தெரியாதவர்கள் அக்கட்சியின் உயர்மட்ட (பொலிட் பீரோ) தலைவர்களாக இருப்பது வெட்கக்கேடு.

ஏனெனில் எந்த ஒரு முழுமையும் பகுதிகளால் ஆனது என்பதையும் அந்தப் பகுதிகளால் ஆனதே அந்த முழுமை என்பதையும் இவ்விரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதையும் மார்க்சிய இயங்கியல் கற்றுக்கொடுக்கிறது.

சங் பரிவாரத்தின் திட்டம் என்ற முழுமையின் ஒரு பகுதி இந்தித் திணிப்பு; இன்னொரு பகுதி ews இட ஒதுக்கீடு. அப்படி இருக்க சங்பரிவாரத்தின் ஒரு பகுதியான இந்தித் திணிப்பை எதிர்ப்பதும் மறுபுறம் இ.டபிள்யூ.எஸ் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதும் எவ்வகையில் மார்க்சியமாகும்.

மார்க்சியம் ஒருபுறம் இருக்க, இந்தியாவில் சமூகநீதி என்பது பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாக சாதி ஏற்றத்தாழ்வுகளையும் கருத்தில் கொண்டது என்ற ஆனா ஆவன்னா அறிவு கூட மார்க்சிஸ்ட் தலைவர்களுக்கு இல்லையா?

இது குறித்து ஆதவன் தீட்சண்யா, சாமுவேல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் சம்பத், தமிழரின், தமிழ் மொழியின், பண்பாட்டின் பெருமை பற்றி ஊரெங்கும் பறைசாற்றிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர்கூட பொதுவெளியில் தங்கள் வாயைத் திறக்காதது ஏன்?

‘கீழடி’ நாகரிகத்தை மறைப்பதும் மறுப்பதும் சங் பரிவாரத் திட்டம் என்ற முழுமையின் பகுதிதான்.

அந்தப் பகுதியை மட்டும் தனியாக எதிர்ப்பதும் முற்போக்கு சாதியினரிலுள்ள ‘நலிந்த பிரிவினருக்கான’ ( ஆண்டு வருமானம் 8 லட்சம் உடைய ‘ஏழைகள்’) இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதுமான சமூக அநீதிக் கொள்கையை ஆதரிப்பதுமான கண்மூடித்தனமான கொள்கைகளுக்குக் கட்டுப்படுவதும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லையா என்ற கேள்விக்கு சாதி ஒழிப்பு, சமூக நீதி பார்ப்பனிய எதிர்ப்பு என்று பேசிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

‘உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பு அவசரம் அவசரமாக மோடி அரசாங்கம், இந்த விழுக்காடு இ.டபிள்யூ.எஸ். திட்டத்தின் கீழ் உள்ள கோட்டாவை நிரப்பியது. இந்தக் கோட்டாவின் கீழ் பயனடந்த உயர் சாதியினரில் பார்ப்பனர்கள் எத்தனை பேர், பார்ப்பனரல்லா உயர்சாதியினர் எத்தனை பேர் என்ற கேள்வியையாவது சிபிஎம் கட்சியோ, சிபிஐ கட்சியோ எழுப்பியிருக்கிறதா? இல்லவே இல்லை.

அதேபோலவேதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பாண்டிச்சேரியில் 2015இல் நடந்த தனது 22ஆவது காங்கிரஸில் சாதி எதிர்ப்புப் பற்றிப் பேசிய அதேவேளை ’முற்பட்ட சாதியினரில் பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியது.

Leftists and Reservation Policy

2018இல் மாநிலங்கள் அவையில், அக்கட்சியின் அன்றைய தேசிய செயலாளரும், அக் கட்சியின் இன்றைய பொதுச் செயலாளருமான தோழர் டி.ராஜா – அம்பேத்கருக்கும் மார்க்ஸுக்கும் தொடரும் விவாதங்கள்’ பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் தோழர் – ‘ முற்பட்ட சாதியினரில் பொருளாதாரரீதியாக இட ஒதுக்கீடு’ என்பது அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது என்று வீராவேசமாகப் பேசினார்.

கடந்த 2022 செப்டம்பரில் விஜயவாடாவில் நடந்த அக்கட்சியின் 23வது காங்கிரஸில், அக்கட்சி மேற்சொன்ன ‘நலிந்த பிரிவினருக்கான’ இட ஒதுக்கீடு பற்றிய கொள்கையை மறு ஆய்வுக்குட்படுத்தி வேறு நிலைப்பாடு எடுத்துள்ளதா என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஒருவருக்கொருவர் ‘ஜென்மப் பகைவர்களாக’ இருக்கும் சிபிஎம், மேற்கு வங்க முதலமைச்சரின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியன ஒத்துப்போகின்றன என்றால் அதற்குக் காரணம் இந்த இரு கட்சிகளும் ‘பத்ரலோக்’ எனப்படும் உயர்சாதிக் கூட்டத்தின் தலைமையில் இருப்பவை.

காங்கிரஸ் வகுத்த பாதை:

உத்தரப்பிரதேசத்தில் பார்ப்பனர்களும் சத்திரிய, காயஸ்தர் என்ற பிரிவில் அடங்கும் உயர் சாதியினரும் கணிசமான அளவில் உள்ளதால் சமாஜ்வாடி கட்சியும் மாயாவதியின் கட்சியும் வாக்கு வங்கிகளைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்துள்ளன. இந்த விஷயத்தில் அவை யாவும் காங்கிரஸ் வகுத்த பாதையில்தான் செல்கின்றன.

பிஹாரில் மட்டுமே நிதிஷ் குமாரின் தலைமையிலுள்ள கூட்டணி அத்தீர்ப்பை எதிர்க்கிறது. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதும், நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் சேராமல், அதற்கு வெளியே இருந்து சில நிபந்தனைகளுடன் அதை ஆதரிக்கும் முக்கிய இடதுசாரி சக்தியான சிபிஐ (எம்-எல்) உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

பொருளாதாரரீதியான நிவாரணம் என்பதை இந்துக்களில் உள்ள உயர் சாதியினர் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுவதை அம்பேத்கரியர்களும் பெரியாரியர்களும் எதிர்ப்பதில்லை. இலவச அரிசி, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை அவர்கள் ஆதரிக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டினால் பயன் பெறும் உயர்சாதிகளைச் சேர்ந்த ’நலிந்த பிரிவினரின்’ எண்ணிக்கையைவிட இலவசங்களால் பயன்பெறும் இதேவகை ’நலிந்த பிரிவினரின்’ எண்ணிக்கை பன் மடங்கு அதிகம். இந்த ‘நலிந்த பிரிவினரில்’ மிகப் பெரும்பான்மையினர் அரசாங்க பணிகளுக்கோ, உயர் கல்விக்கோ தேவையான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள். ஆனால், எஸ்.சி., எஸ்.டி. இதர பிற்பட்ட சாதியினரைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு பத்தாம் வகுப்பு வரையிலான படிப்புகூட இல்லை.

Leftists and Reservation Policy

இட ஒதுக்கீடு என்பது பொருளாதார நிவாரணம் அல்ல என்பதை, மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலைப் பற்றி ஓயாது முழங்கிக்கொண்டிருக்கும் சிபிஐ, சிபிஎம் போன்ற இடதுசாரிக் கட்சிகள் உணராதது நமக்கு வியப்புத் தருவதில்லை. ஏனெனில் ‘வர்க்க அடையாளத்தை நீக்குதல்’ என்பதைவிடக் கடினமானது, ‘ ’சாதி அடையாளத்தை (மனப்பான்மையை) நீக்குதல்’ என்பதாகும்.

அண்மையில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஒரு தலித் தோழரின் மகனின் திருமண அழைப்பைப் பார்த்தேன். நல்ல நேரம் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, ‘ மங்களகரமான வேளை’யில் நடைபெறவிருக்கும் அந்தத் திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்க சிபிஎம் கட்சி தோழர்கள், இலக்கியப் படைப்பாளிகள் உள்ளிட்ட டஜன்கணக்கான மனிதர்களை அழைத்திருக்கிறார் அவர்.

அண்ணல் அம்பேத்கரைப் பற்றியும் தந்தை பெரியாரைப் பற்றியும் புகழ்ந்து கொண்டிருப்பவர்தான் இந்தத் தோழர். அவர் மிக நல்ல மனிதர். ஆனால், இந்து சனாதன தர்மத்திலிருந்தும் வருண அமைப்பிலிலிருந்தும் ஒதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள தலித்தான இவர், ஏன் தன் சமூகத்தினரை இழிவாகக் கருதும் சடங்கு சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்கிறார் என்றால் அது அவரது கட்சி தலைமையிலுள்ள கோளாறுதான்.

பெரியார் பட்டறை:

இறை நம்பிக்கை வேறு, மூட நம்பிக்கை வேறு என அவரது கட்சி அவருக்குக் கற்றுத் தந்திருக்க வேண்டும். தலித்துகள் உள்ளிட்ட பார்ப்பனரல்லாத சாதிகள் மிக அண்மைக்காலம் வரை தங்களுக்கே உரித்த சடங்குகளை, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.

இவற்றை நன்கு ஆராய்ந்து பார்தோமேயானால், அவை அவர்களின் அன்றாட, இயல்பான வாழ்க்கை முறைகளுடன், உழைப்பு முறையுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன என்பது தெரியும். ஆனால், அவர்களும்கூட அண்மைக்காலமாக பார்ப்பனப் புரோகிதர்களைக் கொண்டு சடங்கு சம்பிரதாயங்களை செய்வது பெருமைக்குரியதாகக் கருதத் தொடங்கிவிட்டனர்.

இந்தத் திருமண சடங்கு சம்பிரதாயங்கள் உழைக்கும் மக்களான தலித்துகள், பழங்குடி மக்கள், இதர பிற்பட்ட சமூகத்தினர் ஆகியோரை என்றென்றும் பார்ப்பனருக்கு அடிமைகளாக வைத்திருக்கும் ஏற்பாடு என்பதை பெரியார் பட்டறையில் பயின்றதாகச் சொல்லிக் கொள்பவர்கள் மட்டுமல்லாது இடதுசாரிகளும் எடுத்துச் சொல்லத் தவறிவிட்டனர்.

இத்தகைய இரட்டை நிலைப்பாடு, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பலரிடமும் உள்ளது.

அது சிபிஐ எம் –எல் ஆதரவாளர்களாக உள்ள சில அறிவுஜீவிகளிடமும்கூட இந்த நோய் தொற்றியுள்ளதை நாம் பார்க்கிறோம். சங் பரிவாரத்தின் இருப்புக்கும் அதன் வளர்ச்சிக்கும் உரமாக இருப்பதே இந்த நிலைப்பாடு.

கட்டுரையாளர் குறிப்பு:

Leftists and Reservation Policy SV Rajadurai

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

மோடியும் சங் பரிவாரமும் வழங்கும் ‘இலவச’ மரணங்கள்!

சாதி ஆணவமும் ஆணாதிக்க மனப்பான்மையும்!

அடுத்தடுத்து 5 அதிரடி சதங்கள்… யார் இந்த ஜெகஜால ஜெகதீசன்?

+1
0
+1
0
+1
0
+1
11
+1
0
+1
0
+1
1

2 thoughts on “இடதுசாரிகளும் இடஒதுக்கீட்டுக் கொள்கையும்

 1. சங்பரிவாரத்தின் இருப்புக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் காரணமான இந்து மத சடங்கு சம்பிரதாய குப்பைகளை தூக்கி எரிவோம்.

 2. இடதுசாரிகளும் இடஒதுக்கீடு கொள்கையும்
  தோழர் ராஜதுரை

  எடுத்த எடுப்பிலெயே சிபி எம் மீதி குற்றப்பத்திரிக்கை வாசிப்பது என்கிற அடிப்படையில் உள்ளது இக்கட்டுரை
  சரியான புரிதல் இடஒதுக்கீடு சம்பந்தமாக சி பி எம் கட்சிக்கு இருந்ததினால் தான் மாநில பட்டியலில் வரும் பிற்படுத்தபட்ட சாதிகள், ஒன்றியத்தில் உயர்சாதிகளாக உள்ளது அவர்களின் ஒடுக்குதல் காலம்காலமாக இருப்பதாலும் பொது வரையறைலிருந்து பத்து சதம் கேட்பதில்லை என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லாமல் உயர் சாதி ஏழைகளுக்கு உதவும் வகையில் இருக்கவேண்டும் .
  அதுவும் மாநிலத்தில் உரிய ஆணையம் அமைத்து அதன் உண்மை தன்மையின் அடிப்படையில் 3 சதமானத்திற்குள் என்கிற புரிதலின் அடிப்படையில்இருக்கவேண்டும் என்கிற சரத்துகள் முன்வைத்தே சி பி எம் 90 காலகட்டத்தில் இருந்து கூறும் உயர்சாதி ஏழைகள் குறித்த கட்சியின் முடிவு அத்துடன் எட்டு லட்சம் என்பதும் ஏற்புடையது அல்ல என்பதையும் தோழர் கே பாலகிருஷ்ணன் பலமுறை விவாதங்கள் தொலைகாட்சி பேட்டிகள் மூலம் கூறியுள்ளார் அதையெல்லாம் கேக்கவும் படிக்கவும் தேவை ஏற்பட்டால் நேரில் கலந்துரையாடி தெளிவும் பெறலாம் அதவிட்டுட்டு ஒரு இடது சிந்தனை முன்னெடுக்கும் அரசியல் கட்சி சி பி எம் என்பதை தெரிந்தும் நினைத்த படி விமர்சிப்பது
  மீன் வாசத்தையும் பெருச்சாளி நாற்றத்தையும் ஒப்பிடுவது போல கருத்துகளை அள்ளி வீசி தங்களின் கடந்தகால உழைப்பை அதன் உண்மை தன்மையை கேள்விக்குள்ளாக்கவேண்டியது இல்லை.

  (சாதி ஒழிக்க இட ஒதுக்கீடு மட்டுமே தீர்வல்ல
  சாதிக்குள் இருக்கும் வேலப்பிரிவினையும் அதை ஒழிக்க திராவிட மாடல் சிந்தித்ததா அதை பற்றிய தீர்மானங்கள் கட்டுரைகள் போராடங்கள் எதேனும் நடந்திருந்தால் எனக்கு அனுப்பிவைக்கலாம் அத்துடன் பஸ் சில் ரயிலில் இன்னும் பெருநகர கூட்ட நெரிசலில் சாதிகள் பார்க்கபடுகிறதா அத்துடன் சாதியகுலத்தொழில்கள் இன்றும் சாதிய பின் புலத்தில்தான் நடைபெறுகிறதா? என்பன போன்ற சமூகம் முன்னெடுக்கபட்ட விவரங்களை வரலாற்று பின் தொடர்ச்சியாக பொருள் முதல் வாத கண்ணோட்டத்தில் இன்றைய சாதியத்தின் இருப்பு உள்ளிட்ட விபரங்கள் தெரிந்தால் எனக்கு பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள் இது எனது தனிபட்டகருத்து )

Leave a Reply

Your email address will not be published.