இடப்பக்கம் சாய்ந்த இலங்கை… புரட்சி நாயகன் AKD… யார் இந்த அனுர குமார திசாநாயக்க?
தமிழ்நாட்டு அரசியலில் மூன்றெழுத்து மந்திரம் என்பது எப்போதும் ஓங்கி ஒலித்துள்ளது. வெற்றி வாகை சூடியுள்ளது. பேரறிஞர் அண்ணாவில் தொடங்கி தற்போது அரசியலில் களம் புகுந்துள்ள விஜய் வரை இந்த மூன்றெழுத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது என்பதை வரலாறு வழிநெடுகிலும் நமக்கு காட்டியுள்ளது.
அதே முன்றெழுத்து தான் தற்போது இலங்கை முழுவதும் பலமாக ஒலித்து கொண்டிருக்கிறது. ஆம் ஏ.கே.டி என்ற ‘அனுர குமார திசாநாயக்க’ பெயர் தான் உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள்களில் இலங்கையின் புதிய அதிபராக வெற்றி வாகை சூடி தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.
சாதாரண கூலித் தொழிலாளியின் மகனாக பிறந்த ஒருவர், இன்று இரண்டரை கோடி மக்களின் நம்பிக்கையை ஒரு சேர பெற்றது எப்படி? மக்களின் நம்பிக்கைக்குரிய புரட்சி நாயகனாக உருவெடுத்து நாட்டின் அதிபரானது எப்படி? யார் இந்த ஏ.கே.டி என்ற அனுர குமார திசாநாயக்க?
எளிய குடும்பத்தில் பிறந்தவர்!
தலைநகர் கொழும்பில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இலங்கையின் வடமத்திய மாகாணமான அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம என்ற ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர் தான் அனுர குமார திசாநாயக்க. அவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி, தாயார் இல்லத்தரசி.
வறுமை வாட்டினாலும், கல்வியால் தனது மகனை ஒளிர செய்ய வேண்டும் என்று பெற்றோர் இருவரும் சபதம் ஏற்றனர். அதன்படி தம்புதேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புதேகம மத்திய கல்லூரியில் ஏகேடி கல்வியைப் பெற்றார். கல்லூரியில் சிறந்த மாணவராக விளங்கிய அவர், Kelaniya பல்கலைக்கழக நுழைவு தேர்வில் முதல் மாணவராக தேர்வானார்.
அரசியலில் நிலையான வளர்ச்சி!
இதற்கிடையே தனது மாணவர் பருவத்தில் கல்வியுடன் அரசியல் பாதையிலும் தனது கவனத்தை கூர் தீட்டினார்.
இலங்கையில் சமூக நீதி மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்த மார்க்சிஸ்ட் கொள்கைகளை கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) கட்சியில் 1987ஆம் ஆண்டு இணைந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று மாணவர் அரசிலை அவர் தீவிரப்படுத்தினார்.
அதன்பின்னர் முழு நேர அரசியலில் இறங்கிய ஏகேடி, 1995ல், சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக ஆனார். தொடர்ந்து 1998ஆம் ஆண்டு ஜேவிபியின் முடிவெடுக்கும் அமைப்பான பொலிட்பீரோவில் நியமிக்கப்பட்டார்.
இவ்வாறு அரசியலில் தன்னை மெருகூட்டிக்கொண்டே வந்த அவர், 2000 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தொடர்ந்து ஜேவிபியின் தேசியப் பட்டியலில் இருந்து எம்பியாக தேர்வானார்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில், ஜே.வி.பி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) ஒரு அங்கமாகப் போட்டியிட்டது. இந்த கூட்டணி 39 இடங்களை கைப்பற்றியது.
குருநாகல் மாவட்டத்திலிருந்து அப்போது வெற்றி பெற்ற ஏகேடி, சுதந்திர கட்சி -ஜே.வி.பி கூட்டணி அரசாங்கத்தில் விவசாய, கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் ஒரு வருடம் கழித்து 2005ஆம் ஆண்டு அவரும் ஏனைய ஜே.வி.பி. அமைச்சர்களும் சுனாமி நிவாரண ஒருங்கிணைப்புக்காக அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உண்டான கூட்டு உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வி!
அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வென்ற அவர், ஜே.வி.பி. கட்சியில் படிபடியாக உயர்ந்து, கட்சியின் தலைமைத்துவத்தில் ஒரு முக்கிய புள்ளியாக உருவெடுத்தார்.
2014ஆம் ஆண்டில் சோமவன்ச அமரசிங்க மறைவுக்கு பிறகு ஜே.வி.பியின் தலைவரானார். தொடர்ந்து 2019ல் ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு, 3.1% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
ஒரு கட்சியின் தலைவருக்கு இந்த தோல்வி மிகப்பெரிய சரிவை உண்டாக்கும். ஆனால் காலம் அவர் பக்கம் திரும்பியது. வெற்றிக்கான வாசல் 2022ஆண்டு மெல்ல திறந்தது.
புரட்சி நாயகனாக உருவெடுத்த தருணம்!
ஆம், மிக மோசமான பொருளாதார நெருக்கடி, அதிகமான வரிச்சுமை, உச்சம் தொட்ட விலைவாசி, பண மதிப்பு வீழ்ச்சி என நாற்புறமும் சூழ்ந்த நெருக்கடியால் குட்டி தீவு சிக்குண்டது.
வலி தாங்க முடியாத மக்கள் அப்போது ஆட்சியில் இருந்த கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக கொதித்தெழுந்தனர். நாடெங்கும் மக்கள் போராட்டம் வெடித்தது. தலைநகர் கொழும்புவில் கலவரம் தாண்டவமாடியது. ராஜபக்சே குடும்பம் வெளிநாட்டுக்கு தப்பியோடியது.
இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஏகேடி மக்களின் குரலாக வீதியில் ஒலித்தார். அது மக்களால் ஏற்றுக்கொண்ட தலைவனின் குரலாக நாடு முழுவதும் எதிரொலித்தது. இளைஞர்களின் இலக்கற்ற போராட்டத்தை அனைத்து மக்களின் புரட்சி போராட்டமாக மாற்றினார். ஆம் இப்படி தான் ஜே.வி.பியில் இருந்து ஏகேடியின் குரல் மக்கள் காதுகளில் ஒரு புரட்சி நாயகனின் குரலாக கேட்க தொடங்கியது.
இதற்கிடையே நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்சியை எப்படியோ சமாளித்துவிட்டாலும், ரணில் ஆட்சியில் மிக மோசமாக பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை.
இத்தகைய கடுமையான நேரத்தில் தான் நாட்டின் பாரம்பரிய அரசியல் கட்டமைப்புகளால் ஏமாற்றமடைந்த வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் மாற்றத்திற்கான குரலாக அனுர குமார திசாநாயக்க தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஏகேடி கொள்கைகள் என்ன?
மக்களிடம் வாக்கு கேட்டு சென்ற ஏகேடி, பல தசாப்தங்களாக இலங்கை அரசியலை பீடித்துள்ள “ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தின் சுழற்சியை மாற்ற அழைப்பு விடுத்தார். பொருளாதார நெருக்கடியின் மூல காரணங்களைத் தீர்க்க முந்தைய தலைவர்கள் தவறிவிட்டவை என்னென்ன என்பதை பட்டியலிட்டார்.
மேலும் பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 9வது பிரிவில் எந்தத் திருத்தங்களும் இருக்காது என்று ஏகேடி பௌத்த பிக்குகள் மத்தியில் உறுதியளித்தார். இலங்கையின் கல்வி முறை, பொது சுகாதார சேவைகளில் முக்கிய மாற்றம் கொண்டு வர உள்ளதாகவும் அறிவித்தார். இவை அந்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் வாக்கினை ஈர்த்தது என்பதை நம்பலாம்.
மேலும் ஊழல் எதிர்ப்பு.. நேர்மையான அரசாங்கம் என்ற தனது கொள்கையால் முன்னேறிய வகுப்பைச் சார்ந்த மக்களைக் கடந்து, எளிய மக்களின் நம்பிக்கை நாயகனாகவும் தன்னை மாற்றினார் ஏகேடி.
அதே வேளையில், இந்தியாவில் இருந்து வந்த தமிழ் வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களை “இந்திய விரிவாக்கவாதத்தின் கருவி” என்று குற்றஞ்சாட்டும் திசாநாயக்காவின் ஜேவிபி கட்சி, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையே அதிக வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் வர்த்தகம் தொடர்பான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தையும் (CEPA) எதிர்க்கிறது.
மேலும் நீண்டக் கோரிக்கையாக உள்ள கச்சத்தீவு தீவை இந்தியாவுக்குத் திரும்பக் கொடுக்கும் எந்தவொரு முயற்சியையும் எந்த சூழ்நிலையிலும் வெற்றிபெற அனுமதிக்க முடியாது என்று ஏகேடி உறுதிபட கூறியுள்ளார். இதன்மூலம் இந்தியா மீதான ஜேவிபியின் நிலைபாட்டையும் நம்மால் அறிய முடியும்.
இந்த சூழ்நிலையில் தான் செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது.
சுயேட்சையாக தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி சார்பில் அநுர குமார திஸாநாயக்க ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நமல் ராஜபக்சே, ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் என மொத்தம் 38 பேர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையில் ட்விஸ்ட்!
வாக்குப்பதிவை தொடர்ந்து நேற்று இரவு முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க செப்டம்பர் 22 காலை வரை 50 சதவீத வாக்குகள் முன்னிலையில் இருந்தார். ஆனால் பிற்பகலில் சமகி ஜன பலவேகய கட்சி சார்பில் போட்டியிட்ட் சஜித் பிரேமதாச சிறிது சிறிதாக முன்னேறி வந்தார்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், இறுதியாக அனுர குமார திசாநாயக்க 39.45% வாக்குகள் பெற்று முதலிடமும், சஜித் பிரேமதாச 34.32% வாக்கு சதவிகிதத்துடன் இரண்டாவது இடமும், ரணில் விக்ரமசிங்கே 17.25% வாக்கு சதவிகிதத்துடன் மூன்றாவது இடமும் பெற்றனர்.
இலங்கை அதிபர் தேர்தலை பொறுத்தவரை, 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
கைகொடுத்த விருப்ப வாக்குகள்!
ஆனால் பெரும் திருப்பமாக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது வாக்கு எண்ணிக்கை எனப்படும் வாக்காளர்களின் விருப்ப வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின.
அதன்படி தற்போதைய அதிபர் ரணில், நமல் ராஜபக்சே மற்றும் அரியநேந்திரன் உட்பட மற்ற 36 வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு, முதல் இரண்டு இடங்களை பிடித்த அநுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.
விருப்ப வாக்கு எண்ணிக்கையில் அநுர மற்றும் சஜித் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் மொத்தம் 5,634,915 வாக்குகளுடன் (42.31%) தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கடைசி வரை போராடிய சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் (32.76%) இரண்டாவது இடம் பிடித்தார்
இதன்மூலம் இலங்கையில் முதன்முறையாக இடதுசாரி கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவரான அனுரா குமார திசாநாயக இலங்கையின் புதிய அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 23 அன்று பதவியேற்க உள்ளார்.
கிழக்கின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கையில் இந்த புரட்சி நாயகன் ஏகேடி தலைமையிலான ஆட்சி மக்களின் வாழ்வில் ஏற்றம் கொண்டு வருமா அல்லது கண்ணீர் துளியாய் மாறுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இசிஐ திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார்!
118 ஏக்கர் பரப்பளவில்… பசுமை பூங்கவாக மாறும் சென்னை கிண்டி ரேஸ் கிளப்!