Leaders of the nda alliance stage with Modi
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2022 ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய என் மண் என் மக்கள் பயணம் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி திருப்பூரில் நிறைவடைகிறது.
இந்த பயணத்தின் துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அதேபோல இந்த பயணத்தின் 200வது தொகுதியை அடையும்போது சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா கலந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நடை பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்று பாஜக வட்டாரங்களில் கிட்டத்தட்ட உறுதிபடச் சொல்கிறார்கள்.
நடை பயண துவக்க விழாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதில் கலந்து கொள்ளாமல் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை அனுப்பி வைத்தார்.
அதன்பிறகு அண்ணாமலையின் நடைபயணம் சென்ற எந்த பகுதியிலும் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தடை விதித்தார் எடப்பாடி.
நடை பயணத்தின் இடையிலேயே அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தை முற்றி செப்டம்பர் 18ஆம் தேதி பாஜக கூட்டணி முறிந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். அதன் பிறகு அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதன் பிறகு நடந்த பொதுக்குழு கூட்டம் ஆகியவற்றிலும் பாஜகவுடன் உறவு இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அதிமுக.
இந்த நிலையில் வருகிற 18-ஆம் தேதி நடை பயணம் நிறைவு விழாவில் மோடி கலந்து கொள்ளும்போது பாஜக தலைமையிலான கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுத்து கூட்டணி தலைவர்களை மேடை ஏற்ற வேண்டும் என்பதில் அண்ணாமலை வேகமாக இருக்கிறார். முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐ ஜே கே உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அதிமுக தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத நிலையில் புதிய பாரதம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் மட்டுமே இப்போது வரை அதிமுக கூட்டணியில் இருக்கின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகளையும் புதிதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரையும் மோடியுடன் நடைபயண நிறைவு விழா மேடையில் ஒருங்கிணைப்பது என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறார் அண்ணாமலை.
இதற்காக அண்ணாமலை ஒவ்வொரு தலைவரிடமும் பேசி அவர்களை நேரில் சந்திப்பதற்கான நேரம் கேட்டு வருகிறார். பிரதமர் மோடி வருவதற்கு முன்பு பாஜகவின் தேசிய தலைவர் நட்டா சென்னை வருகிறார். அவர் வரும்போது தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதிச் செய்வது என்றும் மோடி தமிழகம் வரும் போது அவர் தலைமையில் தமிழக தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களை மேடை ஏற்றுவது என்பதிலும் அண்ணாமலை வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
– வேந்தன், வணங்காமுடி
9 நாளில் பொதுத்தேர்தல்… இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை : பாகிஸ்தானில் பதற்றம்!
எடப்பாடியை சந்தித்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் : நடந்தது என்ன?
Leaders of the nda alliance stage with Modi