மாநில தலைவராக இருப்பவரை எதிர்த்து மற்ற அனைத்து முன்னாள் தலைவர்களும் ஒன்றிணைவது என்பது தமிழக காங்கிரசில் வழக்கமாக நடக்கக் கூடியதுதான். ஆனால் கே.எஸ். அழகிரி மாநிலத் தலைவராக வந்ததில் இருந்து இதற்கு மாறாக அனைத்து முன்னாள் மாநில தலைவர்களோடும் இணக்கமாகத்தான் இருந்தார்.
கடந்த சில நாட்களாக சத்தியமூர்த்தி பவனிலும், காங்கிரஸிலும் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது அழகிரிக்கு எதிராக மற்ற அனைத்து முன்னாள் தலைவர்களும் ஒருங்கிணைந்துவிட்டதையே காட்டுகிறது.
இன்று (நவம்பர் 20) தமிழக காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர்கள் டெல்லி சென்றிருக்கிறார்கள். நாளை காலை அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க இருப்பதாகவும் மாநிலத் தலைவர் அழகிரியை பற்றி புகார் செய்யப் போவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
என்ன நடந்தது?
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்ட காங்கிரஸாருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டிப் பூசலில் உருட்டுக் கட்டை தாக்குதலால் ரத்தக் காயம் ஏற்பட்டது. அதற்கு மறுநாள் சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அதில் முதல் நாள் நடந்த கோஷ்டிப் பூசலுக்குக் காரணம் காங்கிரஸ் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன் தான் என்று அழகிரி நேரடியாகவே குற்றம் சாட்டி அவரை நீக்கக் கோரி தீர்மானம் இயற்றுமாறு மாவட்டத் தலைவர்களிடம் கூறினார். அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதற்குப் பிறகு அன்று இரவு சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ். அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது சிறிது நேரத்திலேயே இளங்கோவன் புறப்பட்டுச் சென்றார். அதன் பின் திருநாவுக்கரசரும் புறப்பட்டுச் சென்றார். அதன் பின் தங்கபாலுவிடம் பேசிய அழகிரி, ‘முன்னாள் தலைவர்களின் வாரிசுகளுக்கும் அவர்கள் சொன்னவர்களுக்கும் நான் எம்.,எல்,.ஏ, சீட் எம்பி சீட் வாங்கிக் கொடுத்தேன்.
ஆனா எனக்கு ராஜ்யசபா கிடைக்க வாய்ப்பு வந்தப்ப யாரும் உதவலை’ என்று ஒரு முன்னாள் தலைவர்களை தாக்கி ஓர் குறிப்பிட்ட வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் அழகிரி. இதைக் கேட்டு அதிர்ந்த தங்கபாலு, ‘அப்படியெல்லாம் சொல்லாதீங்க. இதுமாதிரி நீங்க பேசுவீங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை’ என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார் தங்கபாலு.
மறுநாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் ஆலோசித்தனர். அழகிரியைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று நவம்பர் 19 ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்காக முன்னாள் மாநிலத் தலைவர்களையும் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையையும் அழகிரி அழைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் யாரும் அழகிரியோடு செல்லவில்லை.

அழகிரி அங்கு வந்து சென்ற தகவல் அறிந்ததும் அதன் பின்னர்தான்… செல்வப் பெருந்தகை காரை ஓட்ட அவரது காரில் முன் இருக்கையில் முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, பின் இருக்கையில் திருநாவுக்கரசர், தங்கபாலு, இளங்கோவன் ஆகியோர் அமர்ந்து அழகிரி வந்து சென்ற அதே வால்டாக்ஸ் ரோடு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அந்த கார் பயணத்தின் போதே அவர்கள் முக்கிய ஆலோசனையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். “கே.எஸ். அழகிரி மாநில தலைவரானதில் இருந்து நாம் அவருக்கு ஆதரவாகவே இருந்து வருகிறோம்.
ஆனால் அழகிரியின் நிலைப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டன. அவருக்கு எதிராக நாம் அகில இந்திய காங்கிரஸ் தலைவரை சந்தித்து முறையிடுவோம்” என்று அந்த ஆலோசனையில் முடிவு செய்தார்கள்.
அதையடுத்து இன்று (நவம்பர் 20) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்வப் பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்கள் டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள். ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்ட பொருளாளர் ரூபி மனோகரனும் டெல்லி சென்றுள்ளார்.

இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் மாநில இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. செல்வப் பெருந்தகை, தங்கபாலு, இளங்கோவன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் டெல்லி சென்றதால் இலக்கிய அணி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு, இலக்கிய அணி நிகழ்வு என்று நேற்றும் இன்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மற்ற முன்னாள் மாநில தலைவர்கள் அழகிரியை புறக்கணித்து வருகிறார்கள். இது தொடரும் என்றே தெரிகிறது.
இதற்கிடையே அழகிரி ஆதரவாளர்களிடம் பேசியபோது, “முன்னாள் மாநிலத் தலைவர்களை மதிப்பதிலும் அவர்களோடு இணைந்து செயல்படுவதிலும் அழகிரி இதற்கு முன் இருந்த மாநிலத் தலைவர்களை விட மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.
ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் ஒன்று கூடியிருப்பதாக தெரிகிறது. ராகுல் காந்தியின், கார்கேவின் நம்பிக்கையை அழகிரி பெற்றிருக்கிறார். இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க மாநில காங்கிரஸ் தலைவரோடு செல்லாமல் தனியாக சென்றதன் மூலம் அவர்கள் இந்திரா காந்தியைதான் அவமதித்திருக்கிறார்கள். டெல்லியில் இதையெல்லாம் எடை போட்டுப் பார்ப்பார்கள். அதனால் அழகிரிக்கு எந்த சிக்கலும் இல்லை” என்கிறார்கள்.
–ஆரா
தொழிலதிபர் விஜய்யை பார்த்து வியந்த பாஜக முதல்வர்
நியூசிலாந்தை வென்ற இந்தியா- 4 விக்கெட் வீழ்த்திய ஹூடா