டிஜிட்டல் திண்ணை:  தலைவர் பஞ்சம்… ஸ்டாலினை தாக்குகிறாரா திருமா?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும், ஃபேஸ்புக் மெசஞ்சர் சில வீடியோக்களை அனுப்பி வைத்தது. அவற்றை சீன் செய்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

 “விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தபோதும்  தோழமை சுட்டுதல் என்ற அடிப்படையில் அவ்வப்போது தனது கருத்துகளை கூட்டணிக் கட்சித் தலைமையான திமுகவிடம் எடுத்துரைப்பார். அது சர்ச்சையும் ஆகும், சலசலப்பும் ஆகும்.

அந்த அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக கொடுத்த இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் திமுகவினரே நின்று வென்றதை ஸ்டாலினுக்கு சுட்டிக் காட்டி ட்விட் போட்டார் திருமா. அதையடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக  கூட்டணிக் கட்சிகளின் இடங்களில் நின்று வென்ற திமுகவினர் ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து பார்க்க வேண்டும் என்று உத்தரவு போட்டார் ஸ்டாலின்.

கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட்ஸுக்குப் பிறகு மோடிக்கும் ஸ்டாலினுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவின. இந்த செஸ் கெமிஸ்ட்ரி அரசியலிலும் தொடருமா என்று கூட பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் பாஜகவுடன் திமுக குறைந்தபட்ச சமரசம் கூட செய்துகொள்ளக் கூடாது என்று  வெளிப்படையாக வலியுறுத்தினார் திருமா.  கடந்த ஆகஸ்டு மாதம் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், ‘சகோதரர் திருமாவளவன் சொல்லியபடி பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம் கூட  கிடையாது’ என்று உறுதியளித்தார். 

கூட்டணியில் இருக்கும்போதும் திமுகவிடம் உரிமையாக வாதாடி அதற்கு தோழமை சுட்டுதல் என்று பெயரும் சூட்டியவர் திருமாவளவன். அந்த அடிப்படையில்தான் ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் ஒரு சினிமா விழாவில் பேசிய திருமாவளவன், ‘சினிமா உலகம் கார்ப்பரேட்டிடம் சிக்கியிருக்கிறது.  ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்? நான் யாரையும் எதிர்த்துப் பேசவில்லை, இதை சொல்ல வேண்டிய சமூகப் பொறுப்பு எனக்கு இருக்கிறது’ என்று பேசினார்.  இதையடுத்து பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ‘திருமாவளவனுக்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் என்ற பெயரைச் சொல்ல பயமா?’ என்று கேட்டிருந்தார்.

இந்த வரிசையில் ஜனவரி 8 ஆம் தேதி முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை கொண்டாடிய தனது மணி விழாவில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், ‘ நாட்டிலே சோற்றுப் பஞ்சமா தலைமைப் பஞ்சமா என்றால் தலைமைப் பஞ்சம்தான், தலைவர் பஞ்சம்தான் இருக்கிறது.   உண்மையில் மக்களை  நேசிக்கிற,  வழிநடத்துகிற,  தொண்டு செய்கிற, மக்களை  மீட்கிற,  மக்களை அரவணைக்கிற தலைமை இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை’ என்று பேசியிருக்கிறார். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இருக்கிற திருமாவளவன் மக்களை நேசிக்கிற மக்களை மீட்கிற தலைவர் இல்லை, தலைமை இல்லை என்று பேசியது திமுகவினர் மத்தியில் சலசலப்பாகியுள்ளது.

திமுக கூட்டணியில் சமீப நாட்களாக வருத்தத்தோடுதான் இருக்கிறார் திருமா என்கிறார்கள் அவரைச் சுற்றியுள்ளவர்கள். கடந்த டிசம்பர் இறுதியில் புத்தாண்டு பொதுக்குழுவை கூட்டியது பாமக. அதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, ‘வரும் சித்திரை பௌர்ணமி விழாவை மாமல்லபுரத்தில் நடத்துவோம்’ என்று பேசியிருக்கிறார். இதற்காக அரசிடம் அனுமதி வாங்கும் படலங்களையும் பாமக தொடங்கிவிட்டது.  அதேபொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ், ‘விடியலுக்காக காத்திருக்கிறோம்’ என்று சொல்லி முடித்தார். விடியல் என்றால் திமுகவா என்று பொதுக்குழுவிலேயே பாமகவினர் மத்தியில் பேச்சுகள் எழுந்தன.

மேலும் பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் திமுக அரசிடம் இணக்கமாகவே இருக்கின்றனர்.

இந்த நிலையில் பாஜகவோடு குறைந்தபட்ச சமரசம் இல்லை என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின் பாமகவோடு குறைந்தபட்ச சமரசம் செய்ய தயராகிவிட்டாரோ என்ற விவாதம் திருமாவளவன் முகாமில் எழுந்திருக்கிறது. இந்த உரையாடல்களின் தொடர்ச்சியாகத்தான் திருமாவிடம் இருந்து   இப்படிப்பட்ட சில கருத்துகள் புறப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் சிறுத்தைகள் முகாமில்.

மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரிசர்வ் தொகுதியில் நிற்காமல் பொதுத் தொகுதியில் நின்று வென்று சாதியை கடந்த தலைவராக பரிமளிக்க வேண்டும் என்று விரும்புகிறார் திருமாவளவன். அதை தனது திமுக நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறார். இதை திமுக ஏற்குமா என்பது தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியவரும்.

இந்த பின்னணியில்தான் திருமாவளவன்  திரையரங்குகள் ஒரு நபர் கையில் என்றும் தலைவர் பஞ்சம் என்றும் பஞ்ச் டயலாக்குகள் பேச ஆரம்பித்திருக்கிறார்” என்ற மெசேஜை செண்ட் செய்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வாரிசுக்காக விஜய் ரசிகர்கள் செய்த விநோத செயல்!

மக்கள் ஐ.டி. தேவையா? – விஜயகாந்த் கேள்வி!

+1
1
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.