பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்தித்து இருக்கிறார்.
ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் தமிழகத்தில் மாணவர்கள், படித்த இளைஞர்கள், அரசுப்பதவிகள் இருப்பவர்கள் என பலரும் உயிரை மாய்த்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.
எனவே இதை உடனடியாக தடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டை ஒழுங்கு படுத்தவும், கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி அவசரத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டு, அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து அது நிரந்தர சட்ட மசோதாவாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் நவம்பர் 27 ஆம் தேதியுடன் அவசர தடைச் சட்டம் காலாவதி ஆகிவிடும் என்ற சூழலில், ஆளுநர் நவம்பர் 24 ஆம் தேதி நிரந்தர சட்ட மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தமிழக அரசும் 24 மணி நேரத்துக்குள் விளக்கக் கடிதத்தை அனுப்பி வைத்தது. ஆனாலும் ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை.

சட்ட மசோதா குறித்து நேரில் விளக்கம் அளிக்கவும், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், அவரைச் சந்திக்கவும் ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை.
ஆனால் அதே சமயம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா. ஜ. க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்களை ஆளுநர் சந்தித்துப் பேசினார்.
ஏற்கனவே தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பா. ஜ. க ஏஜென்ட் போலவும், மாநில அரசுக்கு எதிராகவும் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்தநிலையில், ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதுடன், விளக்கம் கேட்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் மக்களின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயத்தில் ஆளுநர் மெத்தனமாக நடந்து கொள்வதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று (நவம்பர் 30) சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்திக்க ஆளுநர் ஆர். என். ரவி அவகாசம் வழங்கினார்.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர். என். ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
கலை.ரா
உலக எய்ட்ஸ் தினம்: கொட்டும் மழையில் விழிப்புணர்வு மாரத்தான்!
லைகர் பட சிக்கல்.. நொந்து போன பெண்களின் கனவுக் கண்ணன் விஜய் தேவரகொண்டா