சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் பேசியுள்ளோம் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நடப்பாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆனால் ஆளுநரின் உரையால் சட்டமன்ற கூட்டத்தொடரில் சர்ச்சை கிளம்பியது.
அதுமட்டுமின்றி வழக்கத்தை மீறி தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார்.
ஆளுநரின் இந்த செயல் பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், ஆளுநர் விவகாரம் தொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆ. ராசா, என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் இன்று (ஜனவரி 12) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி. ஆர். பாலு , “குடியரசுத் தலைவரை நாங்கள் நேரில் சந்தித்தோம். தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கினார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9-ஆம் தேதி, அவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது பற்றி எடுத்துக் கூறினோம்.
ஆளுநர் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பு எழுந்து சென்றார். அவருடைய செயல் அனைத்து தேச மக்களையும் அவமதிக்கும் செயல். இதைத் தான் நாங்கள் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளார்.
அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. முதலமைச்சர் சட்டத்துறை அமைச்சரிடம் கடிதத்தை வழங்கினார்.
சட்டத்துறை அமைச்சர் அந்த கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதை வாசித்துவிட்டு குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார்.
அவர் என்ன முடிவெடுப்பார் என்பதை நாம் கணிக்க முடியாது. ஆளுநரை நியமிப்பதே உள்துறையும், குடியரசுத் தலைவரும்தான்.
அதனால் எப்படி நியாயம் கிடைக்கும் என்று நீங்கள் எழுப்பும் ஊகங்கள் அடிப்படையிலான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது.
அரசியலில் சில நெளிவு சுழிவுகள் உள்ளன. அதன்படி கவனமாகத் தான் முடிவு எடுக்கப்பட வேண்டும். எனவே, குடியரசுத் தலைவரின் முடிவு என்னவாக இருக்கும் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது.
ஆனால், நாங்கள் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் இருந்த சில பத்திகளை அவர் தவிர்த்தது, தேசிய கீதத்தைப் புறக்கணித்தது குறித்துப் பேசியுள்ளோம்.
ஆளுநருக்கு தமிழ்நாட்டில் சனாதன கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு திராவிட நாடு. பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உருவாக்கிய தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்திற்கு மாறான கொள்கையைத் திணிக்க முடியாது” என்று பேசினார்.
மோனிஷா
அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கிறார் முதல்வர் – சேகர்பாபு