சட்டம் ஒழுங்கு: காற்றோடு போனதா ஸ்டாலின் எச்சரிக்கை?

அரசியல்

2023 ஜனவரி 19 ஆம் தேதி சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு  பற்றிய ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

ஆய்வுக் கூட்டத்தில்  தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி,  டிஜிபி சைலேந்திர பாபு,    உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர், 9 மாநகர காவல்துறை ஆணையர்கள், நான்கு மண்டல ஐஜிக்கள் நேரடியாக  பங்கேற்றனர்.

டிஐஜிக்கள் மற்றும் 37 மாவட்ட எஸ். பி.க்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.

சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்த ஸ்டாலின்

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருவது தொழில் முதலீட்டை ஊக்குவிக்கிறது. எனவே தமிழ்நாட்டில் தொடர்ந்து தொழில் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும்.

மாவட்டங்களில் கொலைக் குற்றங்கள், ஆதாய கொலைகள், கூட்டுக் கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் போன்றவை நடந்திடாமல் தடுத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். 

சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் எந்த சக்தியையும் எக்காரணம் கொண்டு அனுமதிக்கக் கூடாது” என்று பொதுவாக பேசி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கையில் இருந்த புள்ளி விவரங்களைப் பார்த்து,

“தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் தான் அடிதடி  வழக்குகள், திருட்டுகள், ஆதாய கொலைகள், தீ வைப்பு சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன.  அனைத்தும் மூன்று மடங்குகள் அதிகரித்துள்ளன.  அந்த மாவட்ட  எஸ். பி.யின்  பணி மெச்சத் தகுந்தபடி இல்லை” என்று பேசினார்.

அப்போது தலைமைச் செயலாளர் இறையன்புவும் உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டியும் காணொளி வழியாக இணைந்திருந்த   கடலூர் எஸ்பி சக்தி கணேசனை பதில்  கூறுமாறு கேட்டனர்.

அதற்கு கடலூர் எஸ்.பி,  தைரியமான உடல்மொழியில் பதில்களை கூறியிருக்கிறார். இதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருப்தியே ஏற்படவில்லை. 

கடலூர் மாவட்டத்தின் கிடுகிடு குற்றங்கள்!

Law and Order what happened

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் ஒரு மாவட்டத்தைக் குறிப்பிட்டு அந்த எஸ்.பி.யின் பணி மெச்சத் தகுந்ததாக இல்லை என்று முதலமைச்சரே குறிப்பிடும் அளவுக்கு கடலூர் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் என்ன? விசாரித்தபோது அதிர்ச்சி புள்ளி விவரங்கள் கிடைத்தன.

“ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றச் சம்பவங்கள் எத்தனை நடைபெற்றுள்ளன என்ற பதிவு சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது.  2020 ஆம் ஆண்டு கொரோனாவால் முழு ஊரடங்கு தொடங்கியது. இது 2021 பாதி வரைக்கும் நீடித்தது.

எனவே 2019 ஆம் ஆண்டில் நடந்த குற்றச் சம்பவங்களும், 2022 ஆம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டை விட 2022 இல் மூன்று மடங்கு குற்றங்கள் அதிகரித்திருக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள்.

அதாவது  கடலூர் மாவட்டத்தில்  2019 இல் 1 ஆதாயக் கொலை நடந்துள்ளது. 2022-இல்  6 ஆதாயக் கொலைகள் நடைபெற்றுள்ளன.  இரவு நேரத் திருட்டுச் சம்பவங்கள் 2019 ஆம் ஆண்டு 87 சம்பவங்களும் 2022 இல் 212 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

திருட்டுச் சம்பவங்கள் 2019 ஆம் ஆண்டு 184 சம்பவங்கள் நடந்திருக்க  2022 இல் 286 ஆக அதிகரித்துள்ளன. கொலை முயற்சி வழக்குகள் 2019  இல் 70 ஆக இருந்தது, 2022 இல் 90 ஆக அதிகரித்துள்ளது.

காயம் ஏற்படுத்திய மோதல் வழக்குகள் 2019 ஆம் ஆண்டு 793 ஆக இருந்தன.  அதுவே 2022 இல் கிட்டத்தட்ட  மூன்று மடங்கு அதிகரித்து 2041  வழக்குகள் பதிவாகியுள்ளன. கலவர வழக்குகள் 2019 இல் 44  பதிவாகின.

ஆனால் 2022  ஆம் ஆண்டு 139 ஆக அதிகரித்துள்ளன. பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்  பாலியல் வன்புணர்வு  வழக்குகள் 2019 ஆம் ஆண்டு 15 பதிவாகியிருந்தன, 2022 இல் 26 வழக்குகள்  பதிவாகியுள்ளன.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல் வழக்குகள்   2019 இல் 23 ஆகவும்  2022 இல் 86 ஆகவும் உயர்ந்திருக்கின்றன.

தீ வைப்பு  சம்பவங்கள் 2019 இல்  5 இடங்களில் நடந்துள்ளன.  2022 இல் 19 இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஏமாற்றுதல் தொடர்பான வழக்குகள் கடலூர் மாவட்டத்தில் 2019 இல் 36 என பதிவாகியிருந்தன. ஆனால் 2022 இல் 109 ஆக உயர்ந்துவிட்டன.

இப்படி சமூக அமைதி,  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என ஒவ்வொரு குற்ற வகையிலும்  2019 ஐ விட   2022  இல் மிக அதிகமாக கடலூர் மாவட்டத்தில்  நடந்திருக்கின்றன.

அதனால்தான் கடலூர் மாவட்ட எஸ்.பி.யின் பணி மெச்சத் தகுந்ததாக இல்லை என்று முதலமைச்சரே தன் பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார்

யார் இந்த எஸ்.பி. சக்தி கணேசன்?

Law and Order what happened

முதலமைச்சர் ஸ்டாலினே தன் பேச்சில் அதிருப்தி தெரிவித்த  இந்த சக்தி கணேசன் யார், அவர் பின்னணி என்ன? கடலூர் மாவட்டத்தில் விசாரித்தோம்.

“2019 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய சக்தி கணேசன் அங்கிருந்து மாற்றலாகி கடலூர் மாவட்ட எஸ்பியாக வந்தார். கடலூர் மாவட்ட எஸ் பியாக பதவியேற்றதுமே  அவர் தங்கியுள்ள பிரதான பங்களா வளாகத்தில் இருந்த நீர் நில ஆதாரமான குளத்தை மூடினார்.

புராதனமான பாரம்பரியமிக்க எஸ்.பி.பங்களாவில் எந்த மாற்றங்களும் செய்யக் கூடாது என்பதை மீறி… அந்த குளத்தை மூடுவதற்கு  நூற்றுக்கும் மேற்பட்ட லோடுகள்  செம்மண் கொட்டினார். அந்த மண்ணையும் மாவட்டத்தில் இருக்கும் குவாரி உரிமையாளர்களிடமே சொல்லி கொட்டச் சொன்னார்.

’மண்ணை  இலவசமாக கொடுக்கிறோம். அதற்காக  டிப்பர், டீசல் செலவு மற்றும் ஒட்டுநர் செலவும் நாங்களே கொடுப்பதா?” என்று புலம்பினார்கள் குவாரி உரிமையாளர்கள்.

என்றாலும் எஸ்.பி. தயவு தேவை என்பதால் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல்  மண்ணைக் கொட்டி எஸ்பி. பங்களா வளாகத்தில் இருந்த குளத்தை மூடினார்கள்.

இந்த எஸ்.பி. சக்தி கணேசன் வித்தியாசமானவர்.  தன்  பங்களாவில் ஆறு உயர் ரக நாய்கள் வளர்த்து வந்தார், அந்த நாய்களை கடலூர் முதுநகர் காவல் நிலைய எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டு செந்தில்தான்  தினமும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அன்றாடம் பங்களாவுக்கு சென்று, நாய்களை வாக்கிங் அழைத்து சென்று பராமரிப்பு செய்து வருகிறார், அந்த நாய்களுக்கு தனி தனியாக ஷெட் போட்டு ஏர்கூலர் மற்றும் மின் விசிறிகள் போட்டுள்ளார். நாய்களுக்கு  சமைத்து போட என்று தனியாக ஒரு போலீஸை நியமித்தார்.

போலீஸார் மனம் வெந்து நொந்து விட்ட சாபத்தாலோ என்னவோ இப்போது இரண்டு நாய்கள்தான்  இருக்கின்றன. நூற்றுக்கணக்கான கோழிகளையும் வளர்த்து வந்தார் எஸ்.பி.  அந்த கோழிகளுக்கு நோய் ஏற்பட்டு அடுத்தடுத்து இறந்து போனது.

மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்க கண்டு பிடிக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று எம். எல். ஏ.க்கள் நிதியிலிருந்து சுமார் ஒன்றரை கோடி பெற்றார்.  ஆனால் அதன்படி முழுமையாக கேமராக்கள் பொருத்தப்படவில்லை.

Law and Order what happened

கடலூர் எஸ்.பி. அலுவலகத்துக்குப் பின் பக்கம் போலீஸ் கல்யாண மண்டபம் உள்ளது. போலீசாருக்காக இது கட்டப்பட்டது. போலீஸார் வீட்டு விசேஷங்களை இதில் செய்துகொள்ளலாம்.

இந்தத் திருமண மண்டபத்தில் சுமார் 28 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டதை  விழுப்புரம் டிஐஜி கண்டுபிடித்து விளக்கம் கேட்டுள்ளார். அதை மறைக்க ஏடிஎஸ்பி அசோக்குமார் மூலமாக போலி பில்கள் தயாரிக்கப்பட்டன. இதையும் எஸ்.பி. கண்டுகொள்ளவில்லை.

மேலும்,  சாலைகள் போடும் கான்ட்ராக்டர்களின்   லாரிகளை பத்து நாட்களாக  பிடித்து வைத்துக் கொண்டு வழக்கு எதுவும் போடாமல்  அவர்களிடம் ‘பேசிக் கொண்டிருந்தார்’ ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார். 

Law and Order what happened

இதற்கு பின்னால் எஸ்.பி. இருக்கிறார் என்ற தகவல் உயரதிகாரிகளுக்குத் தெரிந்து கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அந்த லாரிகளை விடுவித்தனர். இவ்வாறு சட்டம் ஒழுங்கு  புகார்களோடு  மேலும் பல புகார்களும் கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் மீது இருக்கின்றன” என்கிறார்கள் கடலூர் மாவட்ட போலீஸாரே.

காற்றோடு போனதா முதலமைச்சரின் எச்சரிக்கை?

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.  ஜனவரி 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில், ‘தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்குகிறது’ என்ற வரிகளை ஆளுநர் ஆர்.என்.ரவியே வாசிக்க மறுத்துவிட்டார்.

இப்படி சட்டம் ஒழுங்கு என்பது தமிழ்நாட்டின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிற நிலையில்… ”கடலூர் மாவட்டத்தின்  சட்டம் ஒழுங்கு பற்றி ஆய்வுக் கூட்டத்திலேயே முதலமைச்சர் அதிருப்தி தெரிவித்தும், அந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?  ஆய்வுக் கூட்டத்தில்  வெளிப்பட்ட முதல்வரின் எச்சரிக்கை  வார்த்தைகள் காற்றோடு போய்விட்டனவா?” என எழும் கேள்விகளுக்கு பதில் என்ன?   

வணங்காமுடி

ஆஸ்திரேலியா ஓபன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சானியா – போபண்ணா ஜோடி!

கமலுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

+1
1
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.