தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடந்தது.
இன்று(ஜனவரி 11) சட்டமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்த உடன், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பேச முற்பட்டார்.
அப்போது சபாநாயகர் நேரமில்லா நேரத்தில் கடைபிடிக்கக்கூடிய மரபுகளை கடைப்பிடிக்கவேண்டும். பேசுவதற்கு முன்பாகவே அனுமதி பெறவேண்டும் என்று கூறினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய அனுமதியை கொடுங்கள், அப்போதுதான் அவர்களது ஆட்சிக்காலத்தில் சட்டம், ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை ஆதாரத்துடன் நான் சொல்கிறேன் என்றார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, ஆளுங்கட்சியிடம் இருந்து சிக்னல் வந்தால் மட்டுமே சபாநாயகர் பேச அனுமதிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், இவ்வாறு சபாநாயகரை குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது. இது மரபு அல்ல என்று பேசினார்.
தொடர்ச்சியாக பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக நிர்வாகிகளால், பெண் காவலர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எப்படி இருந்தது என்பது பற்றிய பட்டியல் என்னிடம் உள்ளது.
சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. ஆதாரத்துடன் பேசவேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணம், தேவர் ஜெயந்தி விழாவில் மதுரையில் வெடிகுண்டு வீசி 4 பேர் சாவு, சிவகங்கை திருப்பாச்சி உதவி ஆய்வாளர் படுகொலை, கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் மீது துப்பாக்கிச்சூடு,
கூடங்குளம் போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடி, பொள்ளாச்சி சம்பவம், வன்னியர் சங்க மாநாட்டில் 1000 வாகனங்கள் சேதம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த வன்முறை, சாத்தான்குளம் லாக்கப் மரணம் போன்ற அத்தனையும் அதிமுக ஆட்சியில் நடந்தவை தான்.
இந்த ஆட்சியைப் பொறுத்தவரை யாராக இருந்தாலும், அரசியல் பார்க்காமல், கட்சி பார்க்காமல் உடனுடக்குடன் நடவடிக்கை எடுக்கும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு இதுவே என் பதில் என்று முதலமைச்சர் கூறினார்.
கலை.ரா
சுபஸ்ரீ மரணம்: ஈஷா மையம் விளக்கம்!
“புனிதர்களால், ரிஷிகளால் உருவாக்கப்பட்டது இந்தியா” – ஆளுநர் பேச்சு!