திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமாகியிருக்கும் நிலையில், இது தொடர்பாக பேசிய நடிகர் கார்த்திக்கிற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் மெய்யழகன் படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. தெலுங்கில் இந்த படம் சத்தியம் சுந்தரம் எனும் பெயரில் வெளியாகவுள்ள நிலையில் இந்த விளம்பர நிகழ்ச்சியில், சிறுத்தை படத்தில் கார்த்தி பேசும், ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ எனும் வசனத்தை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி திரையிட்டு காட்டினார்.
அதோடு தற்போது லட்டுவை பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு நடிகர் கார்த்தி இங்கு லட்டு பற்றி பேச வேண்டாம். அது தற்போது சென்சிடிவ் டாபிக்காக உள்ளது. லட்டு வேண்டாம் தவிர்த்து விடுவோமே என்று சிரித்துக் கொண்டே கூற அங்கிருந்தவர்களும் கார்த்தியுடன் சேர்ந்து சிரித்தனர்.
இந்த நிலையில் துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று (செப்டம்பர் 24) காலை விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரர் சுவாமி கோவிலில் 11 நாள் தீட்சை விரதத்தை மேற்கொள்ள வந்தார்.
அப்போது பவன் கல்யாணிடம், கார்த்தி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பவன் கல்யாண், “திருப்பதியில் லட்டு பற்றி சினிமா நிகழ்ச்சியில் கிண்டல் செய்வீர்களா?. இது உணர்ச்சிவசமிக்க விஷயம். ஒரு போதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகர்கள் மீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். எனினும் சனாதன தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை ஒரு முறைக்கு 100 முறை யோசித்துப் பேச வேண்டும்” என்று கோபமாக கூறினார்.
இப்படி கார்த்தி பேசியதும் அதற்கு பவன் கல்யாண் பதில் அளித்ததும் இணையத்தில் வைரலான நிலையில், வருத்தம் தெரிவித்து கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பவன் கல்யாணை டேக் செய்து, “எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் வருத்தம் தெரிவித்துகொள்கிறேன். வெங்கடேச பெருமாளின் தீவிர பக்தன் என்ற முறையில் நான் எப்போதும் நம் மரபுகளை பின்பற்றுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘லப்பர் பந்து’
முடா முறைகேடு: சித்தராமையாவுக்கு சிக்கல்… விசாரணையை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு!