Edappadi K. Palaniswami eps criticize dmk government over the suspicious death of the kallakurichi school girl

போன வாரம் ராயப்பேட்டை…இந்தவாரம் கள்ளக்குறிச்சி: திமுக அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு!

அரசியல்

கள்ளக்குறிச்சி அருகே நடந்த கலவரத்திற்கு திமுக அரசின் செயலற்ற மெத்தனப்போக்கே காரணம் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தலை ஒட்டி சென்னை தலைமை செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 18) வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் திமுக அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக விமர்சித்தார்.

“13-ம் தேதியே மாணவி இறந்துள்ளார். 13ம் தேதி முதல் 16-ம் தேதி வரை மாணவியின் பெற்றோர் தொலைக்காட்சி வழியாக பேட்டி அளித்து வருகின்றனர். கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதை எல்லாம் உளவுத்துறை மூலம் தகவல் சேகரித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறையை தவிர்த்திருக்கலாம்” என இபிஎஸ் கூறினார்.

மேலும், “ உளவுத்துறை செயலற்றுவிட்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவியை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பள்ளி நிர்வாகிகளை முன்கூட்டியே கைது செய்து முறையாக விசாரணை நடத்தி இருந்தால் வன்முறையை தவிர்த்திருக்கலாம். மாணவியின் பெற்றோர் எதிர்பார்த்ததும் அதைதான்” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஜூலை 11-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் குறித்து பேசிய அவர், ”அதிமுக அலுவலகத்திற்குள் சமூக விரோதிகள் நுழையவுள்ளதாக கிடைத்த தகவலின்படி ராயப்பேட்டை காவல் நிலையம், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். ஆனால், புகாரளித்தும் பாதுகாப்பு அளிக்காமல், ரவுடிகளுக்கும் குண்டர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து அதிமுக அலுவலகத்தில் நுழைய விட்டு வேடிக்கை பார்த்த அரசாங்கம் இது” என விமர்சித்தார்.

-அப்துல் ராபிக் பகுருதீன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0