டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை காவல்துறையை மட்டுமல்ல… அவருக்கு அறிமுகமான அறிமுகமாகாத பல்வேறு தரப்பினரையும் உலுக்கி எடுத்துள்ளது. விஜயகுமாருக்கு நெருக்கமானவர்கள் பலரும் தங்களுக்கும் அவருக்குமான நினைவுகளை சமூக தளங்களில் பகிர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
டிஐஜி விஜயகுமாரின் கடைசி பொழுதுகள், கடைசி நிமிடங்கள் என்னவாக இருந்தன என்று கோவை காவல்துறை வட்டாரத்தில் முழுமையாக விசாரித்தோம்.
முதல் நாள் மாலை கொண்டாட்டம்
ஜூலை 6 ஆம் தேதி மாலை… கோவையில் இருக்கும் டிஐஜி விஜயகுமாரின் வீடு கலகலப்பாகத்தான் இருந்தது. விஜயகுமார் வெளியே புறப்பட வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார். அன்றுதான், கோவை மாநகர டி.சி. சந்தீஷினின் ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள். அதனால் ஒரு ஹோட்டலில் கொண்டாட்டம் வைத்திருந்தார் அவர். டிஐஜி என்ற முறையில் விஜயகுமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அழைப்பு கொடுத்திருந்தார் டி.சி. அன்று இரவு சற்று தாமதமாகவே வீட்டுக்கு வந்த டி.ஐ.ஜி. விஜயகுமாருக்காக மனைவியும் மகளும் காத்திருந்தனர்.
அன்று இரவு 8.45 மணிக்குதான் தன்னுடைய மனைவி, மகள் சகிதம் புறப்பட்டு பர்த் டே கொண்டாட்டத்துக்கு சென்றார். அங்கே இவரைப் பார்த்ததும் மற்ற அதிகாரிகள், காவல்துறையினருக்கெல்லாம் மகிழ்ச்சி. பலரும் வந்து கை கொடுத்தனர். குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு குடும்பத்தினரோடு விருந்து சாப்பிட்டுவிட்டு இரவு 9.30 மணிக்கு வீட்டுக்குப் புறப்பட்டார் டிஐஜி.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டம்தான் தன் அப்பாவோடு தான் கலந்துகொள்ளும் இறுதி கொண்டாட்டம் என்று பாவம் அந்த மகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது மனைவிக்கும் தன் கணவரின் கடைசி நிகழ்ச்சி இதுதான் என்று புரிந்திருக்கவில்லை. பொதுவாகவே தன் குடும்பத்தோடு கலகலப்பாகத்தான் பேசிக் கொண்டிருப்பார் விஜயகுமார். ஆனால் திடீரென மூட் அவுட் ஆகிவிடுவார். பின் கொஞ்ச நேரம் அப்படியேதான் இருப்பார். அவரது மனைவிக்கும், மகளுக்கும் இது பழகிப் போய்விட்டது.
அன்றும் அப்படித்தான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பர்களோடு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தவர் திடீரென புறப்பட்டுவிட்டார். போலீஸ் அதிகாரிகளுக்கு வீட்டில் குடும்பத்தினரோடு அமர்ந்து சாப்பிடும் நேரம் அவ்வப்போதுதான் வாய்க்கும். பார்ட்டியிலேயே விருந்து சாப்பிட்டுவிட்டதால் அன்று மூவரும் அமர்ந்து வீட்டில் உண்ணும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. காரில் புறப்பட்டு வீட்டுக்கு வந்ததும் மனைவி, மகளிடம் ”நீங்க போய் படுங்க” என்று சொல்லிவிட்டார்.
இரவே துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்தார்
கோவை டிஜிஜி முகாம் அலுவலகம் அது. செல்போனில் கொஞ்ச நேரம் ஏதேதோ பார்த்துக் கொண்டிருந்தவர் தனது பாதுகாவலரான கன் மேன் ரவிச்சந்திரனை அழைத்தார். ரவிச்சந்திரன் ஈரோடு மாவட்ட ஆயுதப் படையைச் சேர்ந்தவர். அவரிடம் ‘சாப்ட்டியா?’ என்று கேட்டவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை… திடீரென தனது கன் மேனிடம் இருந்து பிஸ்டலை வாங்கினார். சில நிமிடங்கள் துப்பாக்கியை தன் இரு கைகளிலும் வைத்துக் கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு திடீரென, ‘இந்தா’ என்று துப்பாக்கியை கன் மேனிடமே கொடுத்துவிட்டு தனது அறைக்குப் போய்விட்டார்.
வாட்ஸ் அப்பில் அனுப்பிய காலை வணக்க மெசேஜ்
ஜூலை 7 ஆம் தேதி கோவையின் பொழுது மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது. காலை 5.30க்கே எழுந்துவிட்ட டிஐஜி விஜயகுமார் ரெஃப்ரெஷ் செய்துகொண்ட பிறகு தனது அறையில் இருந்து கீழே வந்திருக்கிறார். கீழேதான் டிஐஜி விஜயகுமாரின் தனி பாதுகாவலரான ரவிச்சந்திரன் இருக்கிறார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் டெய்லி சிச்சுவேஷன் ரிப்போர்ட் என்கிற டி.எஸ்.ஆர். குறிப்புகளை டிஐஜி பார்வையிடுவார். அதுபோல அன்றைக்கும் வழக்கத்தை விட சீக்கிரமாகவே அந்த ரிப்போர்ட்டைப் பார்த்தார். அதன் பின் தனது செல்போனை எடுத்தார் டிஐஜி விஜயகுமார்.
அவரது நட்பு வட்டத்தில் இருக்கிற அனைவருக்கும் தினமும் காலையில் டிஐஜி விஜயகுமார் காலை வணக்கத்தோடு ஒரு மெசேஜ் அனுப்புவார். அது தத்துவமாகவோ ஆன்மீகமாகவோ இருக்கும். அப்படித்தான ஜூலை 7 ஆம் தேதி காலை 6.44 மணிக்கு தனது வாட்ஸ் அப் க்ரூப்புக்கும் நண்பர்களுக்கும் ஆன்மீக மெசேஜை அனுப்பியிருக்கிறார். அவரது மெசேஜுக்கு ரிப்ளை மெசேஜ்கள் உடனடியாக வந்துகொண்டிருக்க… அவற்றை எல்லாம் பார்க்காமல் செல்போனை மூடி வைத்தார்.
அந்த நிமிடங்கள்…
பின் கன்மேன், டிரைவர் ஓய்வெடுக்கும் அறைக்குச் சென்றவர் கன் மேன் ரவிச்சந்திரனிடம், ‘வெப்பன் கொடுப்பா’ என்று கேட்டிருக்கிறார் டிஐஜி விஜயகுமார். இவ்வளவு காலை நேரத்தில் திடீரென ஏன் கேட்கிறார் என்று அறியாமல்… ரவிச்சந்திரன் தனது 9 எம்.எம். துப்பாக்கியை எடுத்து டிஐஜியிடம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கிக் கொண்டு வெளியே கார் நிற்கும் போர்டிகோ பகுதியை நோக்கிச் சென்றார் டிஐஜி. அப்போது சட்டை போடாமல் இருந்த கன் மேன் ரவிச்சந்திரன் அறையில் டி ஷர்ட்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே…. டூமில் என்ற சத்தம் கேட்டிருக்கிறது.
உடனடியாக கன் மேன் ரவிச்சந்திரன், டிரைவர் ஆகியோர் அறைக்குள் இருந்து வெளியே ஓடி வந்தனர். தலையில் சுட்டுக் கொண்டபடி போர்டிகோவிலே கிடந்திருக்கிறார் டிஐஜி விஜயக்குமார். கன்மேனும், ஓட்டுநரும் ’சார் சார்….’ என்று பெருங்குரலெடுத்து கதற கேம்ப் ஆபீசில் இருந்தவர்களும் மேலே வீட்டில் இருந்த டிஐஜி மனைவியும் பதறியபடியே ஓடி வந்தனர். அங்கு நின்ற போலீஸ் வாகனத்தில் டிஐஜியை தூக்கிக் கொண்டு கோவை மருத்துவக் கல்லூரிக்கு விரைந்தனர். அங்கே பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக சான்று கொடுத்துள்ளனர். அதற்குப் பிறகுதான் தமிழ்நாடே இந்த செய்தி அறிந்து அதிர்ந்தது.,
மாத்திரை சாப்பிட்டும் தூங்க மாட்டார்
டிஐஜி தற்கொலை ஏன் என பல கோணங்களிலும் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். ஜூலை 7 ஆம் தேதி காலை அங்கே இருந்த ஓட்டுநர், கன்மேன், வெயிட்டர், கேம்ப் ஆபீஸ் ஊழியர்கள் அனைவரிடமும் விசாரணை செய்தனர் அதிகாரிகள்.
“ராத்திரி எல்லாம் தூங்க மாட்டார் டிஐஜி. தூக்கமே வரமாட்டேங்குது என்று சொல்லிக் கொண்டிருப்பார். அப்புறம் மன அழுத்தத்தை குறைத்து தூக்கம் வர வைப்பதற்காக தினமும் இரண்டு மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஜூன் 1 ஆம் தேதி 60 மாத்திரை வாங்கிட்டு வந்து கொடுத்தோம். அதை முப்பது நாளில் சாப்பிடறதுக்கு பதிலாக 20 நாள்லயே சாப்பிட்டுட்டாரு. அப்படியும் தூக்கம் வரலைனு சொல்லிட்டிருந்தாரு.
அப்பா, அம்மா பாசம்
போன ஏப்ரல், மே மாசத்துல அவங்க அப்பா அம்மா தேனியிலருந்து வந்து இங்க தங்கியிருந்தாங்க. சின்ன வயசுல அப்பாவும் அம்மாவும் தன்னை வளர்த்ததை பத்தி அப்பப்ப எங்ககிட்ட சொல்லுவாரு. அப்பா அம்மா மேல ரொம்ப பாசமா இருப்பாரு. அதனாலயோ என்னவோ அவங்க வந்து இங்க தங்கியிருந்த அந்த நாள்ல நல்ல தெளிவா இருந்தாரு. கொஞ்சமாச்சும் தூங்கினதா சொன்னாரு. கொஞ்ச நாள்ல அவங்க ஊருக்கு போனதும் சென்னையில இருந்த மேடமும், சாரோட மகளும் இங்க வந்துட்டாங்க. பாப்பாவை டாக்டருக்கு படிக்க வைக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தார். காலேஜ் கூட முடிவாயிடுச்சுனு சொன்னாரு. எந்த காலேஜ்னு எங்ககிட்ட சொல்லலை” என்று சொல்லியிருக்கிறார்கள்.
நான்கு நாட்களுக்கு முன் வந்த டாக்டர்
மேலும்… “நான்கு நாட்களுக்கு முன்புகூட கோவை டாக்டர் ஒருவரை ஆபீசுக்கு அழைத்து தூக்கமே வரலைனு சொல்லி ஆலோசனை கேட்டாரு. அப்ப. ‘ ரெகுலர் டாக்டர் எழுதிக்கொடுத்த மாத்திரையை விட்டுட்டேன் சரியாக தூக்கம் வரலை’னு டாக்டர்கிட்ட கேட்டாரு. அப்ப டிஐஜி, ‘இல்லாதது இருக்குற மாதிரியும் இருக்குறது இல்லாதது மாதிரியும் ஃபீலிங் இருக்கு டாக்டர்’னு சொன்னாரு. அந்த புது டாக்டரும் மாத்திரை எழுதிக் கொடுத்துட்டுப் போனாரு. ஆனா அந்த மாத்திரை சாப்பிட்ட பிறகுதான் அந்த ஃபீலிங் ரொம்ப அதிகமா இருக்குனு சொல்லிக்கிட்டிருந்தாரு” என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் கேம்ப் ஆபீஸ் ஊழியர்கள்.
இதையடுத்து சமீபத்தில் டிஐஜி விஜயகுமாரை பரிசோதனை செய்து மாத்திரைகள் கொடுத்த அந்த கோவை டாக்டரையும், சென்னை டாக்டர் ஆனந்த பாலாவையும் விசாரித்துள்ளனர் போலீஸார்.
போலீசாரிடம் டாக்டர் ஆனந்த் பாலா, “டிஐஜி விஜயகுமார் மன அழுத்தத்துக்காக கடந்த நான்கு வருஷமா மாத்திரை எடுத்துக்கிட்டு வர்றாரு. இல்லாதது ஒண்ணு இருப்பது மாதிரியும், இருக்கிறது இல்லாதது மாதிரியும் ஃபீல் பண்ணியிருக்காரு. நான் கொடுத்த மாத்திரையை தவிர வேற என்ன மாத்திரை இடையில சாப்பிட்டாருனு எனக்கு தெரியவில்லை” என்று சொல்லியிருக்கிறார். மிகச் சில நாட்களுக்கு முன் டிஐஜி விஜயகுமாரை பார்த்து ஆலோசித்த கோவை டாக்டரை தற்போது தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
டிஐஜி மனைவி கீதா மற்றும் குடும்பத்தாரிடமும் போலீஸார் விசாரித்துள்ளனர். “டிப்ரஷன்லதான் இருந்தாரு. ஆனால் ஆரம்பத்துல மாத்திரை சரியா எடுத்துக்க மாட்டாரு. அப்புறம்தான் ஒழுங்கா மாத்திரை எடுத்துக்க ஆரம்பிச்சாரு. அதிகமாக கோபப்படுவாரு” என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஐ.ஜியின் அட்வைஸ்
டிஐஜி விஜயகுமாரின் டிப்ரஷன் அவரது குடும்பத்தில் மட்டுமல்ல டிபார்ட்மென்ட்டிலும் பலரும் அறிந்ததாகவே இருக்கிறது. சமீபத்தில் ஒரு நாள் கோவை ஐ.ஜி. சுதாகர் டிஐஜியை நேரில் அழைத்து, ‘என்ன உங்களுக்கு பிரச்சினை… நல்லா ரெஸ்ட் எடுங்க. நல்லா தூங்குங்க’ என்றெல்லாம் சொல்லியுள்ளார்.
ஒழுங்காக தூங்காததால் இப்போது நிரந்தரமாகவே உறங்கிவிட்டார் டிஐஜி விஜயகுமார்.
விஜயகுமார் உடலை அவரது சொந்த ஊரான தேனி ரத்னா நகருக்கு எடுத்துச் சென்றபோது உறவினர்கள், ஊர்க்கார்கள் மட்டுமல்ல… காவலர் முதல் டிஜிபி வரையில் அஞ்சலி செலுத்தினார்கள். கேரளா, ஆந்திர, கர்நாடக மற்றும் தமிழகத்திலிருந்து ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் திரண்டு வந்துவிட்டனர். விஜயக்குமார் வீட்டிலிருந்து பழைய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள சுடுகாடு வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் மற்றும் மக்கள் ஊர்வலமாக சென்றனர்.
’மனுசனுக்கு பணம், பவர் இருந்து என்னய்யா பிரயோஜனம்? நிம்மதி வேணும்யா’ என்று குரல்கள் விஜயகுமாரின் இறுதி ஊர்வலத்தில் கேட்டன.
–வணங்காமுடி
+1
+1
+1
1
+1
2
+1
+1
+1