திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் நிலத்தை கையகப்படுத்திதான் ஆகவேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
கோவையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு மருத்துவமனை கட்டடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இன்று (நவம்பர் 30) ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ வேலு, “கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறு தளங்களை கட்டுகின்ற புதியப் பணி நடைபெற்று வருகிறது.
2023 மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். கட்டுமான பணிகள் முடிந்து அடுத்த கட்ட பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது.தமிழக முதல்வரின் கரங்களால் இந்த கட்டிடம் திறக்கப்படும்” என்றார்.
மேலும் சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக பேசிய அவர், “நிலத்தை கையகப்படுத்துகிறோம், சாலை போடுகிறோம் என்றால் யாருக்காக, அரசாங்கத்துக்காகவா போடுகிறோம்? சாலையை அரசாங்கம் போடுகிறது. ஆனால் அதில் பயனாளியாக இருப்பது விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும்தான்.
புதிதாக சாலைகள் அமைப்பது எதற்காக? இரண்டு ஊர்களுக்கு இடையேயுள்ள குறுகலான சாலை, நீண்ட புறவழிச்சாலையாக இருந்தால் நகரப்பகுதிகளில் உள்ள நெரிசலை குறைக்கவே புதிய சாலைகளை அமைக்கிறோம்.
இப்படி அரசுத்திட்டங்களை நிறைவேற்ற நிலங்களை கையகப்படுத்திதான் ஆகவேண்டும். ஒருகாலத்தில் நிலத்தை கையகப்படுத்தியதால் தானே சாலைகள் அமைக்கப்பட்டது.
ஆனால் சில சமயங்களில் பிரச்னைகளைத் தெரிவிக்கும் விவசாயிகளைச் சமாதானப்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தி சாலைப் பணிகளை முடிக்க முயற்சிப்போம்” என்றார்.
அன்னூரில் விவசாயிகள் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த எ.வ.வேலு, அந்த துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
அமைச்சர் எ.வ. வேலு இன்று வடகோவை – மருதமலை சாலை மேம்பாட்டு பணி, கோவை ஜி.என்.மில்ஸ் அருகே நடைபெறும் உயர்மட்ட பால பணி, உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பால பணி உள்ளிட்ட பணிகளையும் பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.
கலை.ரா
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீண்டும் கனமழை?
தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சை:யார் இந்த நாடவ் லேபிட்