ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று (மார்ச் 15) ஜாமீன் வழங்கியது.
2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். அப்போது ரயில்வே குரூப் டி பணிக்காக நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம் லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த நிலத்துக்கான அப்போதைய சந்தை மதிப்பு 4.39 கோடி ரூபாய். ஆனால் வெறும் 26 லட்சம் ரூபாய்க்கு லாலு வாங்கியதாகவும் சிபிஐ கூறியது.
இதுதொடர்பான வழக்கில் லாலு மற்றும் அவரது குடும்பத்திற்குச் சொந்தமான இடங்களில் கடந்த வாரம் சிபிஐயால் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ. 1 கோடி ரொக்கம், ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி உள்பட இவ்வழக்கில் தொடர்புடைய 14 பேர் மார்ச் 15ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
அதன்படி இன்று லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சமீபத்தில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் வீல் சேரில் நீதிமன்றத்துக்கு வருகைத் தந்தார்.
இவர்கள் காலை 10 மணியளவில் ரோஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்தனர். காலை 11 மணியளவில் சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன் குடும்பத்தினருடன் ஆஜரானார்கள். அப்போது சிபிஐ தரப்பில் ஜாமீன் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் பிணைத் தொகையாக ரூ.50,000 செலுத்த உத்தரவிட்ட நீதிபதி அனைவருக்கும் ஜாமீன் வழங்கி வழக்கு விசாரணையை மார்ச் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். லாலுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், இதனை அவரது கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
பிரியா
பரவும் காய்ச்சல்: தமிழ்நாட்டில் விடுமுறையா? – அமைச்சர் விளக்கம்!