ஆகஸ்ட் மாதத்திற்கு என்டிஏ ஆட்சி கவிழும் என்று பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பேசியிருப்பது தேசிய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து 370 இடங்களும், என்டிஏ கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி கூறி வந்தார். ஆனால், பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகித்த பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்றார்.
இந்தநிலையில்,ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவன நாள் இன்று (ஜூலை 5) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது பேசிய லாலு பிரசாத் யாதவ்,
“2024 மக்களவை தேர்தலில் தேஜஸ்வி யாதவின் கடுமையான உழைப்பின் காரணமாக, நான்கு இடங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அவரின் கடுமையான உழைப்பின் காரணமாக தான், நாம் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலிலும் தேஜஸ்வி யாதவ் தான் கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுப்பார்” என்றார்.
தொடர்ந்து பேசிய லாலு பிரசாத் யாதவ், “இந்த நேரத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அனைவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம். என்டிஏ அரசு மிகவும் வீக்காக இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த ஆட்சி கவிழும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்!