மகாத்மா காந்தி இடம்பெற்றிருக்கும் ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் என்பதுதான் தற்போதைய அரசியல்வாதிகளின் பேச்சாக உள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுகளில் நம் தேசப் பிதா காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது. தற்போது அவருடைய புகைப்படம் மட்டுமே இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பலரும் ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,
“ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள் இடம்பெற்றால், ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவர்களின் அருளாசி கிடைக்கும்.
கடவுள் லட்சுமியைச் செல்வத்தின் கடவுளாகக் கருதுகிறோம். விநாயகர் வினை தீர்க்கும் கடவுளாகக் கருதப்படுகிறார்.
எனவே, இருவரின் படங்களும் புதிய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகள் அவசியம். அவற்றுடன் சேர்த்து, தேவி, தேவர்களின் ஆசீர்வாதமும் நமக்கு அவசியம்”
என்று கூறிய அவர், இதுகுறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதப்போவதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி, இன்று (அக்டோபர் 28) பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “130 கோடி மக்கள், இந்திய நாணயத்தின் ஒரு புறம் காந்தியின் படமும், மறுபுறமும் விநாயகர் மற்றும் லட்சுமியின் படமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இந்த விவகாரத்தில் பொதுமக்களிடம் அமோக ஆதரவு உள்ளது. மக்கள் மத்தியில் அபரிமிதமான உற்சாகம் உள்ளது. இதை உடனே செயல்படுத்த வேண்டும் என அனைவரின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுடைய கருத்துக்கும் கடிதத்துக்கும் பின்னால், குஜராத் சட்டமன்றத் தேர்தல் இருக்கிறது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.
டெல்லி, பஞ்சாப்பைப் போன்று குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது ஆம் ஆத்மி.
அந்த மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால், பல வாக்குறுதிகளையும் அள்ளி தெளித்துவருகிறார்.
இந்த நிலையில்தான் அவர், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும் என்கிற புதிய கோட்பாட்டை கையில் எடுத்திருக்கிறார். இதில், இந்துத்வா அரசியலும் அடங்கியிருக்கிறது.
இதனை பயன்படுத்தித்தான் பாஜகவை வீழ்த்த கெஜ்ரிவால் வியூகம் அமைத்து வருகிறார். ஒருகாலத்தில், பாஜக இந்துத்வா அரசியல் செய்கிறது எனச் சொல்லி வந்த அதே அரவிந்த் கெஜ்ரிவால்தான் இன்று குஜராத் தேர்தலுக்காக இந்துத்வாவை கையில் எடுத்திருக்கிறார்.
ஒருவேளை, பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவுடன் ரூபாய் நோட்டுகளில் சாமி படங்களோ அல்லது வேறு தலைவர்களின் படங்களோ இடம்பெறுமானால், அதற்கு மூலக்காரணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் இருப்பார்.
கோவை கார் வெடிப்பில் 109 பொருட்கள் பறிமுதல்: என்.ஐ.ஏ எப்ஐஆரில் தகவல்!
பிரக்னன்சி கிட்: ரசிகர்களை குழப்பிய நடிகைகள்!