மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக 161 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66, பகுஜன் சமாஜ் 2, பாரத் ஆதிவாசி கட்சி 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆட்சியமைக்க 116 தொகுதிகளில் பெரும்பான்மை தேவைப்படும் நிலையில், பாஜக கூடுதலாக 45 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. மாநிலத்தில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி லாட்லி பெஹ்னா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு கீழ் பெறும் 21 முதல் 60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,250 உதவித்தொகையாக வழங்கப்பட்டது. 2.7 கோடி பெண் வாக்காளர்கள் உள்ள மத்திய பிரதேசத்தில், இந்த திட்டத்தின் முலம் 1.2 கோடி பெண்கள் பயனடைந்தனர். மகளிர் மத்தியில் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மகளிர் உதவி தொகை ரூ.3000-ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகான் அறிவிப்பு வெளியிட்டார். மகளிர் வாக்குகளை குறிவைக்கும் நோக்கில் துவங்கப்பட்ட இந்த திட்டமானது, பாஜக வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது.
மத்தியபிரதேசத்தில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த வெற்றிக்கு லாட்லி பெஹ்னா யோஜனா திட்டம் தான் முதன்மையான காரணம் என்று சிவ்ராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான தொகுதிகளை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். இந்த வெற்றிக்கு லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது தான் முழுமையான காரணம். பாஜகவின் டபுள் என்ஜின் அரசு மத்திய அரசு திட்டங்களை மாநிலத்தில் தொடர்ந்து நிறைவேற்றும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூன்று மாநிலத்தில் வெற்றி உறுதி… ராகுல், உதயநிதியை தாக்கும் பாஜகவினர்!
ராஜஸ்தான்: தோல்வியை நோக்கி காங்கிரஸ்… கொண்டாடும் பாஜக!