12 மணி நேர வேலை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தனியார் தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி தமிழக சட்டமன்றத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தநிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் பங்கேற்ற கூட்டத்தில் 12 மணி நேர வேலை சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே 12 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து சிஐடியூ மாநில தலைவர் கனகராஜ் கூறும்போது, “12 மணி நேர சட்டதிருத்தத்தை தமிழக அரசு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் கைவிட வேண்டும் என்று தமிழக அரசிடம் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.
நாளை தமிழக அரசு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளனர். சட்டத்திருத்ததை நிறைவேற்றுவதற்கு முன்பாக எங்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.
சட்டத்தை நிறைவேற்றிய பிறகு விளக்கம் கொடுப்பதற்காக எங்களை அழைப்பதில் எந்த பொருளுமில்லை. இருப்பினும் இந்த கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு எங்களது கருத்துகளை தெரிவிப்போம்.
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரு மனு தயாரித்து கையெழுத்திட்டு சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று மாநில அரசிடம் வழங்க உள்ளோம்.
ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்க ஆலைகளிலும் வாயிற்கூட்டங்கள் நடத்தப்படும். 27 ஆம் தேதி அனைத்து ஆலைகளுக்கும் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்படும்.
28 ஆம் தேதி உணவு புறக்கணிப்பு போராட்டம். மே 4, 5 ஆகிய தினங்களில் இரு சக்கர வாகனங்களில் சென்று பிரச்சாரம் செய்யும் போராட்டம் நடைபெறும்.
மே 9-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொழிற்பேட்டை வாயில்களிலும் போராட்டம் நடைபெறும்.
மே 12 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். தமிழக அரசு இந்த சட்டத்தை திரும்பப்பெற்றால் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “12 மணி நேர வேலை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் யாரும் எதிர்பாராத முடிவை எடுப்பார்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
விக்ரம் வேதா சீரியலுக்கு சிக்கலா?
மைதானத்தில் ஜெர்சியை மாற்றிய பாண்டியா பிரதர்ஸ்!