கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டதை அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வையோடு தான் பார்க்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (ஆகஸ்ட் 19) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “கலைஞருக்கு மட்டும் நாணயம் வெளியிடவில்லை. டாக்டர் அம்பேத்கர், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்டோருக்கும் நாணயம் வெளியிட்டுள்ளோம்.
அவர்கள் செய்த சேவைக்காக மத்திய அரசு நாணயம் வெளியிடுகிறது. கலைஞர் நாணய வெளியீட்டு நிகழ்ச்சியை தமிழக அரசு ஏற்பாடு செய்தார்கள், மத்திய அரசு சார்பில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம்.
மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என அற்ப சந்தோஷத்திற்காக திமுக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். இவர்கள் ஒன்றிய அரசு என்று கூறுவதால், நாங்கள் ஒன்றும் குறைந்துபோவதில்லை. இன்னும் அவர்கள் சொல்ல சொல்ல நாங்கள் வளர்ந்துகொண்டு தான் செல்வோம். அதனால் இதுபோன்ற சின்ன சின்ன அரசியல் செய்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான அரசியல் செய்வதற்கு திமுக முன்வர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, திமுக – பாஜக மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், “இந்த நிகழ்ச்சியை அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வையோடு தான் நாம் பார்க்க வேண்டும். தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இதில் அரசியலுக்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மருமகனை டாப் ஹீரோவாக்க களமிறங்கும் அர்ஜூன்… ஏழுமலை 2 பாராக்!
இரண்டு மாவட்டங்களில் கனமழை அலர்ட்: வானிலை மையம் வார்னிங்!