பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகியதற்கு என்ன காரணம் என்று விசாரிப்போம் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகுவதாக இன்று (அக்டோபர் 23) அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், அழகப்பன் என்பவர் தனது சொத்துக்களை ஏமாற்றி விட்டதாகவும், அவருக்கு பாஜகவின் முக்கிய தலைவர் ஆதரவாக இருப்பதாலும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எல்.முருகன், “நானும் இப்போது தான் செய்தியில் பார்த்தேன். கட்சியில் நிறையே பேர் வருகிறார்கள். அவர்களும் கட்சிக்காக தங்களுடைய நேரத்தை கொடுத்திருக்கிறார்கள்.
கவுதமியும் கட்சிக்காக நிறைய தடவை பிரச்சாரங்கள் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு பாராட்டக்கூடியது. ஆனால் என்ன காரணத்திற்காக வெளியே சென்றுள்ளார்கள் என்பது குறித்து விசாரிப்போம்.
ராஜபாளையம் தொகுதியில் சீட் கொடுக்கவில்லை என்று கடிதத்தில் சொல்லியுள்ளார். நமது கூட்டணியில் பல தொகுதிகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதாக இருந்தது. நான் கூட ராசிபுரம் அல்லது அவிநாசியில் போட்டியிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கூட்டணி காரணமாக தாராபுரத்தில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அது போல பல தொகுதிகளை கூட்டணி பேச்சுவார்த்தையில் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதில் அந்த ஒரு தொகுதியும் கூட்டணிக் கட்சிக்காக விட்டுக் கொடுத்த தொகுதிதான்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா