ஒட்டுமொத்த நாகா சமூகத்தையும் நாய் கறி உண்பவர்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முத்திரை குத்துவது அவர்களது கலாச்சாரத்தை கேவலப்படுத்துவதாகும் என்று நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியபோது “நமது வரிப்பணத்தில் சாப்பிட்டுக் கொண்டு நமது தலையிலேயே கை வைக்கிறார் ஆளுநர்.
இந்த ஆட்சிக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்றே செயல்படுகிறார். நமது மசோதாக்களுக்கு எல்லாம் கையெழுத்துப் போடமாட்டேன் என்கிறார்.
நாகாலாந்தில் இவரை ஊரை விட்டே விரட்டி அடித்தார்கள். ஏன் விரட்டி அடித்தார்கள்? தப்பாக நினைத்துவிடக் கூடாது. நாகாலாந்தில் நாய்க்கறி சாப்பிடுவார்கள். அவர்களுக்கே இவ்வளவு சொரணை வந்து இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டினார்கள் என்றால், உப்பு போட்டு சோறு சாப்பிடுகிற தமிழர்களுக்கு எந்தளவுக்குச் சொரணை இருக்கும்” என்று கூறியிருந்தார்.
https://t.co/KEpTNspeEX pic.twitter.com/0JcIRh9tHK
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 5, 2023
ஆர்.எஸ்.பாரதி பேசியதை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்திருந்தது.
அதில், “நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தைக் காயப்படுத்தக் கூடாது என பாரதியை வலியுறுத்துகிறேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகா மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகா மக்கள் பற்றி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இழிவாக பேசியதை பார்த்து நான் மிகுந்த மன வேதனையும் வருத்தமும் அடைகிறேன். ஒட்டுமொத்த நாகா சமூகத்தையும் நாய் கறி உண்பவர்கள் என்று முத்திரை குத்துவது அவர்களது கலாச்சாரத்தை கேவலப்படுத்துவதாகும். நாகாலாந்து தனித்துவமான பாரம்பரிய கலாச்சார அமைப்பை கொண்டது. இங்குள்ள ஒவ்வொரு பழங்குடியின மக்களுக்கும் தனிப்பட்ட கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் ஒரே மாதிரியாக கருதி அவர்களின் உணவு விருப்பத்தை அவமரியாதை செய்வது அடையாளத்தை சிதைப்பதற்கு வழிவகுக்கும்.
உணவு பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதேசமயம் உணவு பழக்கத்தை குணத்துடன் வரையறுக்க வேண்டாம். எனவே உணவு விருப்பத்தின் அடிப்படையில் யாரையும் அவமதிக்க வேண்டாம். ஒரு நபரின் கலாச்சாரம், நெறிமுறைகள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பை அவர்கள் உணவுடன் ஒப்பிட வேண்டாம்.
நாகர்கள் கண்ணியமான மற்றும் ஆழமான கலாச்சாரம் கொண்ட மக்கள் என்பதை நான் மரியாதையுடன் மீண்டும் வலியுறுத்துகிறேன். நாகாலாந்தில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோல தமிழகத்தில் உள்ள நாகர்களுடம் அமைதியான சூழலில் படித்து வேலை செய்கின்றனர். இரு மாநிலங்களிலும் ஒருவரை ஒருவர் பரஸ்பர மரியாதையுடன் நடத்துகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி நாகாலாந்தில் இருந்து துரத்தப்பட்டார் என்ற உண்மைக்கு புறம்பான கருத்தை ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். நான் சந்தித்த பெரும்பாலான நாகாக்கள் ஆளுநர் ரவி மீதான தங்கள் அபிமானத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர். நாகாலாந்து ஆளுநர் என்ற முறையில் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை நான் கண்டிக்கிறேன். தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாகாலாந்து மக்கள் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘அவங்க வாழட்டும் விடுங்க…’- பிக் பாஸ் பிரதீப் வேண்டுகோள்!
அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!
‘உணவு பழக்கம் ஒருவரின் தனிப்பட்ட பழக்கம்…–” – ஆளுனர் ஐயா அவர்களே, அன்னிக்கு மாட்டுக்கறி வச்சிருந்தானு பல பேரை அடிச்சு கொன்னாய்ங்களெ, அப்ப இது மாதிரி உங்களுங்க யாராச்சும் இப்படி சொல்லியிருந்தா