தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகத் தமிழ்நாட்டில் இருந்து குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸில் இருந்து விலகிக் கடந்த 2 வருட காலமாக குஷ்பு பாஜகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். தேசிய பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
இது குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சியிடம் பேசிய குஷ்பு, “என் மீது நம்பிக்கை வைத்து இது போன்ற ஒரு பொறுப்பை எனக்கு அளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரதமர் மோடி, இந்திய அரசாங்கம் மற்றும் தேசிய மகளிர் வாரியத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். என்னை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமித்தவுடன் எனக்கு போன் செய்து வாழ்த்துக் கூறினார். மாநில தலைவராக மட்டுமல்லாது, எனக்கு சகோதரனாகவும் ஆதரவாக இருந்திருக்கிறார்.
இந்த பொறுப்பு கட்சி சார்ந்த பொறுப்பு கிடையாது. தேசத்திற்கான பொறுப்பு. பெண்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுப்பேன்” என்றார்
குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு பாஜக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
“தேசிய பாஜகவின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு பாஜக சார்பில் வாழ்த்துக்கள்.
இது அவருடைய இடைவிடாத முயற்சி மற்றும் பெண்களின் உரிமை போராட்டத்திற்காகக் கிடைத்த அங்கீகாரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு நடிகை குஷ்பு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காகப் பிரதமருக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றி. உங்கள் தலைமையின் கீழ் பெண்களுக்கான சமூகத்தை பாதுகாக்கவும் வளர்க்கவும் கடுமையாகப் பாடுபடுவேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
“வாக்குச்சாவடியிலேயே திமுக பணம் கொடுக்கிறது”: தொடர் புகார்களை அனுப்பும் அதிமுக!
ஆதார் ஏற்க மறுப்பு : தேர்தல் அலுவலர் பேட்டி!