தன்னை அசிங்கமாக பேசிய திமுக பேச்சாளர் மீது தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர்களில் ஒருவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சட்டமன்றத்தில் தி.மு.க. கொடுத்த உரையில் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி படித்தார்.
இதற்காக அவரை ஒருமையிலும், தகாத வார்த்தைகளாலும் மேடையில் பேசினார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், கட்சியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 17) இரவு சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
அப்போது செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதி வழங்காத ஆளுநரையும், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவையும் தரக்குறைவாக, இழிவாக பேசியிருக்கிறார்.
அவரது பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குஷ்பு சென்னையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், ”கைத்தட்டலுக்காக பெண்களை அசிங்கமாக பேசுகிறார்கள். யார் பெண்களை பற்றி அவதூறாக பேசினாலும் அது அவர்களுடைய தாய் தந்தையை அவதூறாக பேசுவதற்கு சமம்.
உங்கள் வீட்டில் உள்ள அம்மாவை பற்றி இவ்வுளவு கேவலமாக பேசுவீர்களா? அவர்கள் பாஷையில் என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் அப்படி பேசி என் வளர்ப்பை அசிங்கப்படுத்த விரும்பவில்லை.
ஸ்டாலின் அவர்களே உங்கள் கட்சியில் அத்தனை பேரிடமும் நான் சொல்கிறேன். குஷ்பூவை சீண்டி பார்க்காதீர்கள். ஸ்டாலின் கண்ணை பார்த்து பேசக்கூடிய தைரியம் எனக்கு உள்ளது. குஷ்பூ பதில் கொடுத்தால் உங்களால் தாங்க முடியாது.
இது போன்ற பேச்சாளர்களை கதவுக்கு பின்னால் பார்த்துவிட்டு ஸ்டாலின் ரசிக்கிறார். தொடக்கத்தில் இவரை சஸ்பெண்ட் செய்த நிலையில் பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்.
கலைஞர் இருக்கும் போது இருந்த திமுக இப்போது இல்லை இது. ஸ்டாலின் தலைமையில் இருக்கும் திமுகவில் பெண்களை இழிவாக பேச தீனி போட்டு வளர்க்கப்படுகிறார்கள். இதுதான் அவர்களின் திராவிட மாடல்.
தேசிய மகளிர் ஆணையம் மூலமாக தாமாக முன் வந்து திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், என்னிடம் போனில் தொடர்பு கொண்டு, எனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எந்த ஆணுக்கும் பெண்களை பற்றி அவதூறாக பேச உரிமை கிடையாது. பெண்களை இழிவாக பேசக்கூடிய நிலை எல்லா கட்சியிலும் உள்ளது.
எல்லா ஆம்பளைங்களிடமும் நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான். பெண்ணை அவதூறாக பேச உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது.
அசிங்கமாக பேசும் ஆண்களை உட்கார்ந்து அடிப்பேன். அந்த தைரியம் எனக்கு இருக்கு. யாரை நம்பியும் நான் தமிழ்நாட்டுக்கு வரல. என்னை சீண்டி பார்க்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணை இழிவாக பேசினாலும் நான் சும்மாக இருக்கமாட்டேன்.
கடந்த முறை மன்னிப்பு கேட்டதால் அப்படியே விட்டுவிட்டேன். வேற இடமாக இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பேன். செருப்பால் அடிக்கும் தைரியம் எனக்கு உள்ளது” என்று ஆவேசமாக பேசியுள்ளார் குஷ்பு.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தோனேசியா ஓபன்: முதல் தங்கம் வென்று இந்திய ஜோடி சாதனை!
நிலநடுக்கத்தின் போது விஜய் என்ன செய்தார்?: தயாரிப்பாளர் விளக்கம்!