பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு குறித்து ஆபாசமாக பேசிய திமுக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் மன்னிப்பை தன்னால் ஏற்க முடியாது என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை ஆர்.கே.நகரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, கெளதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை ஆபாசமாக பேசினார்.
அவர் பேசும்போது மேடையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்கார்ந்திருந்தார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் சைதை சாதிக் பேசியதற்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆண்கள் பெண்களை அவதூறாக பேசும்போது, அவர்களது வளர்க்கப்பட்ட விதத்தை காட்டுகிறது.
இந்த ஆண்கள் பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் தங்களை கலைஞரை பின் தொடர்பவர்கள் என்று கூறி கொள்கிறார்கள்.
இது தான் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இயங்கும் திராவிட மாடலா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி , “ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இதை யார் செய்தாலும், அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
இதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். எனது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் , எனது கட்சியான திமுகவிற்கும் இது ஒருபோதும் ஏற்புடையது அல்ல” என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
சைதை சாதிக் தனது ட்விட்டர் பதிவில், “நான் மேடையில் பேசிய பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது இருப்பினும் மரியாதைக்குரிய நடிகை குஷ்பு அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இன்று (அக்டோபர் 29) ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள குஷ்பு, என்னைப் பற்றி அவதூறாக பேசியவரின் மன்னிப்பை நான் ஏற்க தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “அவர்கள் என்ன அவமானப்படுத்தவில்லை. தங்கள் குடும்ப பெண்களை அவமானப்படுத்துகிறார்கள். என்னைப் பற்றி அவதூறாக பேசியவரின் மன்னிப்பை நான் ஏற்க தயாராக இல்லை.
எனக்காக குரல் கொடுத்த கனிமொழி அவர்களை நான் பாராட்டுகிறேன். அவர் பெண்களையும் அவர்களின் பேச்சு சுதந்திரத்தையும் ஆதரிப்பதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன்.
மற்ற பெண்களை பற்றி வேறு யாரும் இதுபோன்ற கருத்துக்களை கூறாமல் இருக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்காக குரல் கொடுப்பார் என காத்திருக்கிறேன். தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் ஒரு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்