திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் நடிகை குஷ்பூ புகார் அளித்திருக்கிறார்.
சென்னை ஆர்.கே.நகர். மேற்கு பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்,
பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசினார்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு குஷ்பு உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சைதை சாதிக் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தநிலையில் பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ இன்று(நவம்பர் 4) டெல்லி சென்று தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மாவை சந்தித்து சைதை சாதிக் மீது புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள், பெண்களை பற்றி ஒருபோதும் தவறாக பேசமாட்டார்கள்.
அப்படி தவறாக பேசினால் ரசிக்கவும் மாட்டார்கள். இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்.
சம்மந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார் என்று கூறினார்.
கலை.ரா
‘தமிழ் மான மறவர்’ – நெடுஞ்செழியனுக்கு முதல்வர் இரங்கல்
சரியும் தங்கம் விலை: நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!