கும்பமேளா கூட்ட நெரிசலும் ஊடகங்களின் தோல்வியும்!

Published On:

| By Minnambalam Desk

பல உயிர்களைப் பலி கொண்ட சம்பவங்களை மூடி மறைக்க மோடி அரசு செய்யும் செப்பிடு வித்தைகளுக்குத் துணைபோகும் ஊடகங்கள் Kumbh Mela 2025 and Media Failure

பமீலா ஃபிலிபோஸ் Kumbh Mela 2025 and Media Failure

ஊடகப் பணி என்பது அதிகார மையங்களின் பிழைகளையும் பிரச்சினைகளையும் அம்பலப்படுத்துவது என்று இதழியல் கற்பிக்கும் கல்விக்கூடங்களில் ஒருகாலத்தில் கற்பித்தார்கள். “இதழியல் என்பது யாரோ அச்சில் பார்க்க விரும்பாத ஒன்றை அச்சிடுவது. மற்ற அனைத்தும் மக்கள் தொடர்புக்கான சங்கதிகள்தான்” என்ற ஜார்ஜ் ஆர்வெல்லின் கூற்றை மேற்கோள் காட்டுவார்கள்.

இன்று, ஊடகப் பணி என்பது அதிகார அமைப்புகள் எது வெளியே தெரியக் கூடாது என்று நினைக்கின்றனவோ அதை வெளியிடாமல் இருப்பது என்றும் இதை மீறுவது தேசத்துரோகம் என்றும் மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.

ஊடகங்களை அமைதிப்படுத்துவதற்காகக் காலங்காலமாகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் நன்கு அறியப்பட்டவை. பெருநிறுவனங்கள் ஊடக நிறுவனங்களைக் கைப்பற்றுதல், நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் செய்தியாளர்களை ஏமாற்றுதல், விளம்பரங்களை அள்ளிவிடுவதன் மூலம் பிரச்சினைக்குரிய செய்திகளைத் தவிர்க்கச்செய்தல், புலனாய்வு இதழியலை முடக்க ஊடகவியலாளர்கள்மீது வழக்குத் தொடுத்தல், செய்தி சேகரிப்பையே சட்டவிரோதமாக்கும் வகையில் சட்டங்களை இயற்றுதல் எனப் பலவாறாக இது வடிவம் எடுத்துள்ளது.

இவை அனைத்தும் எல்லோருக்கும் தெரிந்தவைதான். நரேந்திர மோடி அரசாங்கமும் அதன் நிறுவனங்களும் ஊடகங்களை மௌனமாக்குவதற்குப் புதிய, அதிநவீன வழிகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றைப் புரிந்துகொள்ள, ஜனவரி 29 அதிகாலையில் பிரயாக்ராஜிலும், பிப்ரவரி 15 இரவு புதுதில்லி ரயில் நிலையத்திலும் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களை நாம் கவனிக்க வேண்டும். Kumbh Mela 2025 and Media Failure

அரசு விரும்பாத செய்திகள் விரைவில் மாயமாகும்! Kumbh Mela 2025 and Media Failure

ஜனவரி 29 அன்று கும்பமேளா சங்கமத்தின்போது பிரயாக்ராஜில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குச் சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜனவரி 30 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ‘கூட்ட நெரிசலைக் கண்டு கலங்காமல் 7.6 கோடி மக்கள் புனித நீராடினார்கள்’ என்ற தலைப்புடன் ஒரு செய்தி வெளியானது. Kumbh Mela 2025 and Media Failure

நெரிசலால் ஏற்பட்ட மாபெரும் குழப்பத்திற்கும் உயிரிழப்புகளால் ஏற்பட்ட சோகத்திற்கும் மத்தியில் கும்பமேளாவிற்காக உருவாக்கப்பட்டிருந்த மனநிலையைக் காப்பாற்றும் நோக்கில் இந்தச் செய்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் பக்தர்கள் அஞ்சிவிடவில்லை என்றும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் புனித நீராடினார்கள் என்றும் அந்தச் செய்தி கூறியது “… கூட்ட நெரிசல் பற்றிய செய்தியாலும், சோகத்தைத் தொடர்ந்து மாற்றுப் பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டதாலும் யாத்ரீகர்கள் தடைபடவில்லை. அவர்கள் நீராடுவதற்காக நீண்ட தூரம் நடந்தனர். மேளா பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்” என்றது அந்தச் செய்தி.

“நெரிசல் பற்றிய செய்தியால் கூட்டம் தடைபடவில்லை” என்று எதை வைத்து அந்தச் செய்தியாளர் கூறினார் என்பதற்கான எந்தத் தடயமும் அந்த செய்தியில் இல்லை.

பல உயிர்களைப் பலி கொண்ட இந்தச் சம்பவத்துக்குச் சில நாட்களுக்குப் பிறகு, என்டிடிவி, ‘118 உறுப்பினர்களைக் கொண்ட வெளிநாட்டினர் குழு மகா கும்பமேளாவில் நீராடுகிறது’ போன்ற தலைப்புச் செய்திகளை வெளியிட்டது. Kumbh Mela 2025 and Media Failure

இந்தியா டுடே, இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் கும்பமேளாவைக் குலைப்பதற்கான சதி ஏதும் இருக்குமா என ஆராய்ந்து பார்த்தது. பூட்டான் மன்னர் ஜிக்மே வாங்சுக், முதலமைச்சர் ஆதித்யநாத்துடன் நீராடுவது குறித்த பிடிஐஇன் செய்தி அறிக்கை, பல சேனல்களிலும் செய்தித்தாள்களிலும் வெளியானது.

ஜனவரி 29 அன்று நிகழ்ந்த பெரும் சோகத்தை மக்கள் நினைவுகளிலிருந்து அகற்றி, எல்லாம் இயல்பாக இருக்கின்றன என்று உலகிற்குச் சொல்லும் விதத்தில் இந்தச் செய்திகள் வெளியாயின.

உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்லுதல்!

ஜனவரி 29 அன்று பிரயாக்ராஜில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்றுவரை நமக்குத் தெரியவில்லை. உத்தரப் பிரதேசக் காவல் துறை வழங்கிய “30 பேர் இறந்தனர், 60 பேர் காயமடைந்தனர்” என்ற புள்ளிவிவரங்களைத்தான் பிரதான ஊடகங்கள் பயன்படுத்தின.

அதிகாரத்துடன் தொடர்பற்ற பத்திரிகையாளர்கள், காவல் துறை சொல்வதைப் போல இரண்டு மடங்கு மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்று மதிப்பிடுகிறார்கள். கண்டுபிடிக்க முடியாதவர்களின் எண்ணிக்கையும் யாருக்கும் தெரியாது. முறையான தடயவியல் பரிசோதனை நடத்தப்படுவதற்கு முன்பே, சிதைந்த மனித உறுப்புகளையும் இறந்தவர்களின் தனிப்பட்ட உடமைகளையும் எடுத்துச் செல்ல புல்டோசர்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் பேரழிவிற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை முறையாகக் கண்டறிந்து சொல்ல முடியவில்லை.

பிரயாக்ராஜையடுத்து மற்றொரு கூட்ட நெரிசல் பற்றிய செய்தி வந்தது. இது ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், இங்கேயும் உடனடியாக எல்லாவற்றையும் பூசி மெழுகி ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. Kumbh Mela 2025 and Media Failure

செய்தியாளர்களுக்கு முட்டுக்கட்டை போடுதல்!

பிரயாக்ராஜ் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு புதுதில்லி ரயில் நிலைய நெரிசல் ஏற்பட்டுப் பலர் இறந்தார்கள். பிரயாக்ராஜ் நிகழ்வுகளிலிருந்து மோடி அரசாங்கம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டதுபோல் தோன்றியது. உடனடியாகக் களத்தில் இறங்கிச் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, நடந்தது என்னவென்பதை ஊடகங்களின் கவனத்திலிருந்து மறைக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டது. லோக் நாயக் ஜெய பிரகாஷ் மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டபோது, ​​மஞ்சள் நிற போலீஸ் தடுப்பு வேலிகள் விரைவாக அமைக்கப்பட்டன. உள்ளே செல்ல முயன்ற ஊடகவியலாளர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

துணிச்சலான செய்தியாளரான சௌம்யா ராஜ் பிப்ரவரி 16, அதிகாலை 1.20 மணிக்கு சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் இப்படி எழுதினார்: “காயமடைந்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட LNJP மருத்துவமனைக்குள் ஊடகங்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எதை மறைக்க முயற்சிக்கிறது? களத்திலிருந்து @smaurya_journo. #NewDelhiRailwaystation”.

ரயில்வே காவல்துறையினரும் செய்திகளை மறைக்கத் துணிந்தனர். MoliticsIndia என்னும் ஊடகத்தைச் சேர்ந்த சௌம்யா ராஜின் அனுபவம், காவல் துறையினரின் முரட்டுத்தனமான தணிக்கைக்குச் சான்றாகும். கூட்ட நெரிசல் பற்றிக் கேள்விப்பட்டவுடன் சௌம்யா, ரயில் நிலையத்தை அடைந்து அங்குள்ள மக்களை நேர்காணல் செய்யத் தொடங்கினார். சிறிது நேரத்திலேயே, போலீசார் விரைந்து வந்து அவரது சாதனத்தைப் பறித்து, அவரது பதிவுகளை நீக்குமாறு கூறினார்கள். சௌம்யா எந்த அழுத்தத்திற்கும் மசியவில்லை. அப்படிச் செய்யாவிட்டால் தங்கள் வேலைக்கே ஆபத்து வந்துவிடும் என்று காவலர்கள் கெஞ்சினார்கள். சௌம்யா ராஜ் இதற்கும் நெகிழ்ந்துவிடவில்லை. தான் பதிவுசெய்த உரையாடல்களை முழுமையாக வெளியிட்டார்.

அதிகாலை வேளையில், பஜ்ரங் தளக் கட்சியினர் காவித் தலைப்பாகைகளுடன் மருத்துவமனையைச் சுற்றிலும் காணப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவவும், இரத்த தானம் செய்யவும் அங்கு வந்திருப்பதாக அவர்கள் கூறினார்கள். ஊடக செய்திகளைத் தடுப்பதும் அவர்களின் பொறுப்புகளில் ஒன்று என்பது தெளிவாகத் தெரிந்தது.

அந்த நிகழ்வைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் அனுபவத்தைப் பற்றி பிப்ரவரி 21 அன்று தி இந்து நாளிதழில் அலிஷா தத்தா ஒரு கட்டுரை எழுதினார். வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி இந்த சம்பவம் ஒரு “வதந்தி” என்று முதலில் கூறியது. தில்லியின் லெப்டினன்ட் கவர்னர் முதலில் வெளியிட்ட தனது அறிக்கையைப் பிறகு மறைத்தது. ரயில்வே அமைச்சர் சமூக ஊடகங்களில் நிலைமை “கட்டுப்பாட்டில் உள்ளது” என்று பதிவிட்டது ஆகியவற்றை அலிஷா தத்தா சுட்டிக்காட்டியிருந்தார்.

இவற்றினால்தான் அடுத்த நாள் காலையில் பல ஊடகங்களால் உண்மைகளைத் தெரிவிக்க முடியாமல் போனது என்றார் அவர். பிப்ரவரி 16 அன்று வெளியான தலைப்புச் செய்திகள் உண்மைகளை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு இருந்த தயக்கத்தை வெளிப்படுத்தின. ‘கும்பமேளாவின் கடும் நெரிசல் காரணமாக டெல்லி ரயில் நிலையத்தில் குழப்பம்’ என்று ஏசியன் ஏஜ் பத்திரிகையின் தலைப்பு கூறியது.

மக்களின் கோபத்தைத் தணிக்க அவசர நடவடிக்கைகள்!

ரயில் நிலைய நெரிசலுக்குப் பிறகு, பெரிய அளவிலான இறப்புகளையும் காயங்களையும் விளைவித்த சம்பவங்களை நிர்வகிப்பதில் மோடி அரசு எத்தகைய தலையீடுகளைச் செய்கிறது என்பதும் இதில் வெளிப்பட்டது. பிணக்கூராய்வுகள் நடத்தப்பட்ட வேகத்தைப் பற்றி அலிஷா தத்தா குறிப்பிடுகிறார். மக்கள் காணாமல் போன தங்கள் உறவினர்களைத் தேடிக்கொண்டிருந்தபோதும் சில பிணக்கூராய்வுகள் முடிக்கப்பட்டன. கூட்ட நெரிசல் குறித்த அனைத்து ஆதாரங்களும் அகற்றப்பட்டன. Kumbh Mela 2025 and Media Failure

அதே நேரத்தில், உறவினர்கள் ஊடகங்களுடன் பேச விடாமல் தடுக்கப்பட்டார்கள். தனது மகளை இழந்த ஒருவர், தனது அனுபவங்களைக் காவல் துறையிடம் கூறுவதை அலிஷா கவனித்தார். அவர் சொல்லி முடித்தவுடன், தனது மகளின் உடலைப் பார்க்கப் பிணவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிணக்கூராய்வு முடிந்து உடல் ஒப்படைக்கப்பட்டது. அந்த நபருக்கு ஒரு மணிநேரத்திற்குள் ரூ.10 லட்சம் ரொக்கமாக இழப்பீடு வழங்கப்பட்டது. மறுநாள் காலையில் அலிஷா தத்தா திரும்பிச் சென்றபோது, ​​உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். நம்ப முடியாத வேகத்துடனும் திறமையாகவும் இவை எல்லாம் நடந்து முடிந்தன.

இந்திய அரசு தொடர்ந்து தனது தந்திரோபாயங்களை மேம்படுத்திவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான 36 வீடியோக்களை அகற்றச் சொல்லி ரயில்வே நிர்வாகம் எக்ஸ் தளத்திடம் கேட்டுக்கொண்டது. எக்ஸ் தளத்தில் வீடியோக்களைப் பதிவுசெய்திருந்த பலருக்கு எதிராகக் காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதைவிடவும் அப்பட்டமான அடக்குமுறை வேறு என்ன இருக்க முடியும்?

இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, ஊடகவியலாளர்கள் மேலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். ஏற்கெனவே பலர் அவ்வாறு செய்துவருகிறார்கள். அதிகாரப்பூர்வமாக வரும் அறிக்கைகளுக்கும் நிர்வாகத் தரப்பினரின் கதையாடல்களுக்கும் விழிப்புடன் இருக்கும் குடிமக்களிடமிருந்தும் ஊடகவியலாளர்களிடமிருந்தும் உடனடியாக மறுப்புகள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

ரயில்வே அமைச்சர் பிப்ரவரி 15 அன்று இரவு 11:52 மணிக்கு எக்ஸ் தளத்தில் “இதுவரை கண்டிராத அளவில் கூடிய திடீர்க் கூட்டத்தைச் சமாளிக்க 4 சிறப்பு ரயில்கள். இப்போது நெரிசல் குறைந்துவிட்டது” என்று பதிவிட்டபோது, அதுல் மோதானி என்னும் ​​பட்டயக் கணக்காளர் அதற்குப் பதிலளித்தார்: “திடீரென்று என்றால் என்ன? இந்தியாவில் மகா கும்பமேளா நடக்கிறது, அதற்கேற்ப உள்கட்டமைப்பையும் ரயில் சேவைகளையும் வழங்க ரயில்வே நிர்வாகம் தவறிவிட்டது என்று உங்களுக்குத் தெரியாதா? பொறுப்பைத் தட்டிக்கழிக்க வேண்டாம். டஜன் கணக்கில் உயிரிழப்பு நேர்ந்துள்ளது”

இதேபோல், சுயாதீன பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர் பொருத்தமான ஒரு கேள்வியை எழுப்பினார்: “உங்கள் அமைச்சகம் அதே ரயில் நிலையத்தில் உள்ள கவுண்டரில் டிக்கெட்டுகளை வழங்கியது. எத்தனை டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன என்பது அவர்களுக்குத் தெரியாதா? வழங்கப்பட்ட டிக்கெட்டுகளின் அடிப்படையில் உங்கள் அமைச்சகம் கூட்டத்தை மதிப்பிடவில்லையா? கூட்டத்தை நிர்வகிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?” Kumbh Mela 2025 and Media Failure

சரியான, நம்பகமான தகவல்கள் வேண்டும் என்று சாதாரண மக்களும் ஊடகங்களும் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் உரக்கக் குரல் எழுப்ப வேண்டும். அப்போதுதான் தகவல்களை முடக்கும் அரசாங்கத்தின் போக்கை எதிர்க்கவோ மாற்றவோ முடியும். Kumbh Mela 2025 and Media Failure

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தேவா Kumbh Mela 2025 and Media Failure

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share