நெல்லையை தொடர்ந்து கும்பகோணம்… திண்டுக்கல் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி!

Published On:

| By Kavi

நெல்லையை தொடர்ந்து கும்பகோணத்தில் நடந்தஅதிமுக கள ஆய்வுக் கூட்டத்திலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் கட்சி செயல்பாடுகள் குறித்து கவனிக்க கள ஆய்வு குழு ஒன்றினை நியமித்தார்.

அதன்படி மாவட்டம் தோறும் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 22) நெல்லையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, முன்னாள் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுடன், மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா குழுவினர் திடீரென மோதலில் ஈடுபட்டதால் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் கள ஆய்வு கூட்டம் போர்க்களமானது.

இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டு கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, “நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை மறந்துவிட்டு நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால்தான் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. உரிமைகளை மீட்டெடுத்த அதிமுக தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கும்பக்கோணத்தில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்திலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் தங்கமணி, காமராஜ், மனோகரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

கும்பகோணம் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாரதிமோகன் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேச எழுந்த போது, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அம்பிகாபதி முதலில் உறுப்பினர்களின் குறைகளை கேளுங்கள்… கள ஆய்வு என்று கூறிவிட்டு தலைவர்கள் மட்டும் பேசுகிறீர்கள். தொண்டர்களை பேச விடுவதில்லை. அப்போதுதான் என்ன நடக்கிறது என்று தெரியும் என்று மேடையில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  மேடையில் ஏறி வாக்குவாதம் செய்த அவரை அங்கிருந்தவர்கள் கீழே இறங்கச் செய்தனர்.   மேடையில் இருந்தவர்களுக்கும் கீழே இருந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தநிலையில் அம்பிகாபதியை திண்டுக்கல் சீனிவாசன் சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால் அவர் சமாதானமாகாத நிலையில் மற்றவர்கள் அம்பிகாபதியை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அதன்பிறகு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகளுக்குள் நடந்த இந்த மோதல் போக்கு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்வுகள் கட்சி தலைமையை அதிருப்தியடைய வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அதானியை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழி இல்லையா? 1997 ஒப்பந்தம் சொல்வது என்ன?

கிண்டி மருத்துவரை தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel