காங்கிரஸ் மூத்த தலைவர் முனைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதைத் தமிழக முதல்வர் ஸ்டாலின்,78-ஆவது சுதந்திர தினமான இன்று வழங்கினார்.
2021-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ விருதை உருவாக்கவும், விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி இந்தாண்டுக்கான விருதாளராகத் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் இளம் வயதிலேயே தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொண்டவர். அதுமட்டுமல்லாமல், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபொரம் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.
‘தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளின் காலடியைத் தேடி’, ‘உலகம் சுற்றும் குமரி’ போன்ற 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இதன் காரணமாக இந்தாண்டிற்கான தகைசால் தமிழர் விருது குமரி அனந்தனுக்கு இன்று வழங்கப்பட்டது. இந்த விருதுடன், அவருக்கு ரூ.10 லட்சம் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது.
இதற்கு முன் இவ்விருதினை, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தலைவர் சங்கரைய்யா, சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் : புதிய திட்டங்களை அறிவித்த ஸ்டாலின்