தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு தனது பேச்சுக்காக அதிமுக பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மந்தைவெளியில் அதிமுக சார்பில் செப்டம்பர் 19 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான குமரகுரு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து ஆபாசமாக பேசினார்.
குமரகுரு பேச்சை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட எஸ்.பியிடம் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்க திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் புகார் அளித்தார். அதனடிப்படையில் குமரகுரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தன்னுடைய பேச்சில் தவறு இருப்பதை உணர்ந்த குமரகுரு “செப்டம்பர் 19 ஆம் தேதி நான் பொதுக்கூட்டத்தில் வாய் தவறுதலாக சில வார்த்தைகளை பேசிவிட்டேன். அதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
குமரகுரு தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதால் போராட்டங்களை நிறுத்தி வைப்பதாக கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அக்டோபர் 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
காவல்துறை தரப்பில், குமரகுருவுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என்று கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குமரகுரு தரப்பில், “கள்ளக்குறிச்சி அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினையும் அவரது மகன் உதயநிதியையும் ஆபாசமாக பேசியதாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு. அதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,
“முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாகப் பேசிய குமரகுரு மாவட்ட காவல்துறையிடம் மற்றொரு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்க வேண்டும். அந்த பொதுக்கூட்டத்தில் தான் பேசியது தொடர்பான நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் ஜாமீன் மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதற்கு குமரகுரு வருத்தம் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு, “நடந்து முடிந்த அண்ணா நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் நான் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசியபோது தவறான ஒரு வார்த்தை வந்துவிட்டது. அதற்காக சமூக வலைதளம் மூலமாக வருத்தம் தெரிவித்தேன்.
அதுதொடர்பான செய்தி அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வந்தது. இந்த கூட்டத்தின் வாயிலாக அன்றைய தினம் நான் பேசிய வார்த்தைகளுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த காலத்திலும் அதிமுக நிர்வாகிகள் கொள்கை பிடிப்போடும் யாருடைய மனதும் புண்படும் வகையிலும் பேசமாட்டார்கள் . மற்றவர்கள் பற்றி தரக்குறைவாக பேசுகிற இயக்கம் அதிமுக அல்ல” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: காய்கறி சப்பாத்தி
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ரசிகர் மன்றங்கள் வேண்டாம்: ஜெகபதி பாபு முடிவு!