மல்லிகார்ஜூன கார்கேவுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி மாற்றம் குறித்து பேசவில்லை என்று கே.எஸ்.அழகிரி இன்று (ஆகஸ்ட் 18) தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக 2019-ஆம் ஆண்டு முதல் கே.எஸ்.அழகிரி செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தசூழலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பெங்களூருவில் இன்று சந்தித்தார். அவருடன் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 15 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘தமிழக காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள மல்லிகார்ஜூன கார்கேவிற்கு அழைப்பு விடுத்தோம். அந்த தேதியில் வேலைகள் இருப்பதால் வேறு யாரையாவது அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். பின்னர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து சிறிது நேரம் விவாதித்தோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறோம். அண்ணாமலை கார் பயணம் செய்கிறார். நடைபயணம் செய்யவில்லை. ராகுல் காந்தி செய்தது தான் நடைபயணம். அவர் எங்கும் காரில் செல்லவில்லை. தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தங்களது கடையை விரிக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்றவரிடம்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றம் குறித்து மல்லிகார்ஜூன கார்கேவிடம் விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தலைவர் பதவி மாற்றம் குறித்து பேசவில்லை. என்னுடன் வந்தவர்கள் என்னுடைய ஆதரவாளர்கள் என்ற வரிசையில் வரவில்லை. அவர்கள் எல்லோரும் எனது நண்பர்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
“வண்டிய ஓரமா நிறுத்த மாட்டியா?” – வியாபாரியை கன்னத்தில் அறைந்த திமுக பிரமுகர்!
முதல்முறை டாஸ்மாக் வருபவர்களுக்கு கவுன்சிலிங்: அமைச்சர் முத்துசாமி