கோஷ்டி பூசல் காங்கிரஸ் கட்சிக்கு புதிதல்ல என்று அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (அக்டோபர் 15) தெரிவித்துள்ளார்.
திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் டெல்லி திரும்புவதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் விமான நிலையம் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “மகளிர் உரிமை மாநாடு இந்தியா கூட்டணியின் மாநாடு போல நடைபெற்றது. சென்னையில் இந்தியா கூட்டணி மாநாடு விரைவில் நடைபெறும். தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளுக்காக பிரியங்கா காந்தி அடிக்கடி தமிழ்நாடு வருவார்.
கோஷ்டி பூசலில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்று ஒன்று பேசுகிறவர்கள் நாளை மற்றொன்று பேசுவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அது புதிதுமல்ல. இதை பார்த்து தலைமை எந்த முடிவிற்கும் வர மாட்டார்கள்” என்றார்.
தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக அக்கட்சியினரே சொல்வதில்லை. ஒரு சில நண்பர்கள் அப்படி சொல்கிறார்கள். தமிழகத்தில் பாஜக எப்படி வளரும்? இங்கே முளை விடுவதற்கு கூட வாய்ப்பில்லை. யாராக இருந்தாலும் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது என்று சொல்வது விசித்திரமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
அதிகரிக்கும் என்கவுண்டர்: தடுத்து நிறுத்த மார்க்சிஸ்ட் தீர்மானம்!