அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – கே.எஸ்.அழகிரி

Published On:

| By Selvam

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்து போடாதது ஏன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லையில் இன்று (நவம்பர் 4) செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, “ஒவ்வொரு கட்சிக்கும் தொழிலாளர் அணி, விவசாய அணி, கொள்கை பிரச்சார அணி, ஐடி அணி என பல பிரிவுகள் உள்ளது. அதேபோல பாஜகவில் ஐடி மற்றும் இடி அணிகள் உள்ளன. அந்த கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்கிறார்கள். இது ஒரு பொறுப்பற்ற செயல். ராஜஸ்தான், தமிழகம், கேரளா போன்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் சோதனை செய்வது அரசாட்சி எவ்வளவு தோல்வி அடைந்திருக்கிறது என்பதற்கு உதாரணம். இந்தியாவில் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு இவர்கள் செல்லாதது ஏன்?

செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து என்ன கைப்பற்றினார்கள்? டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைக்கிறார்கள். இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடத்துகின்ற மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. தமிழகத்தில் இந்தியா கூட்டணியை திமுக வலிமையாக நடைமுறைப்படுத்துகிறது என்பதற்காக விசாரணை அமைப்புகள் மூலம் தொந்தரவு கொடுக்கிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்வதற்காக ஆளுநருக்கு தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது. இதுவரை ஆளுநர் கோப்புகளுக்கு கையெழுத்து போடாதது ஏன்?

நீட் தேர்வால் எந்த பலனும் இல்லை. நீட் தேர்வு கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்சி அடிப்படையில் கேட்கப்படுகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தான் நீட் தேர்வு பயன்படுகிறது” என்றார்.

தொடர்ந்து அவரிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, “இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உத்தரபிரதேச மாநிலத்தை விட பல மடங்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

முதல்வர் ஸ்டாலினுக்கு என்னாச்சு?: வெளியான மருத்துவ அறிக்கை!

வேக கட்டுப்பாடு: அபராத நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel