கண்ணனைப்போல் ராகுல் புதிய அவதாரம் எடுப்பார் : கே.எஸ்.அழகிரி

Published On:

| By Prakash

”ராகுல் காந்தி கண்ணபிரானைப்போல் புதிய அவதாரம் எடுத்து அரசியலில் பயணிப்பார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி பாதயாத்திரையை தொடங்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தியின் பயணத் திட்டம் மற்றும் தகுந்த முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது.

அப்போது இதற்கான பயண திட்டம் வகுப்பது தொடர்பாகவும், என்னென்ன முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் அந்தக் கூட்டத்தில், ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, தமிழக காங்கிரசை வலுப்படுத்துவது தொடர்பாக ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்துவது, பாதயாத்திரையின் போது எந்தெந்த பகுதிகளில் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஆகஸ்ட் 19) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “வரும் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தனது நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தொடங்க இருக்கிறார்.

இது, காந்திய வழியில் நடைபெறும் பயணம். செப்டம்பர் 7ம் தேதி காலை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடம் சென்று அவரிடம் ஆசிபெறுகிறார்.

அதன்பிறகே ராகுல்காந்தி தனது நடைப்பயணத்தை தொடங்க இருக்கிறார். 149 நாட்கள் 3,600 கி.மீ தூரத்திற்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இனி, ராகுல் காந்தி கண்ணபிரானைப்போல் புதிய அவதாரம் எடுத்து அரசியலில் பயணிப்பார்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

ஹிட்லர் வென்ற கதை தெரியாதா? மோடி மீது ராகுல் விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel