ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மோடியோ, அண்ணாமலையோ பிரச்சாரத்திற்கு வந்தால் ஒட்டு கிடைக்காது என்றே எடப்பாடி பாஜகவிடம் இருந்து தள்ளியிருப்பதாக கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிமனையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது “இளங்கோவன் இந்த இடைத்தேர்தலை சந்திப்பதை தமிழக காங்கிரஸ் பெருமையாக கருதுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள தோழர்கள் திரண்டுவந்து பணியாற்றுகிறார்கள். எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.
எங்கள் கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் தேர்தல் என்று அறிவித்த உடனே அது காங்கிரஸ் நின்றஇடம் அவர்களே நிற்கவேண்டும் என்று சொல்லி அந்த தொகுதியை எங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள். இதுதான் கூட்டணியின் நட்புக்கு இலக்கணம்..
ஆனால் எதிரணியில் தமாகா போட்டியிட்ட தொகுதியை அவர்களுக்கு வழங்காமல் அநியாயமாக தொகுதியை பிடுங்கி அவர்களை சிறுமைப்படுத்தி உள்ளனர்.
எங்களுடைய வெற்றி ஒவ்வொரு நிமிடத்திலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மக்களிடம் பெரிய நம்பிக்கையையும் எழுச்சியையும் இளங்கோவன் வழங்கி இருக்கிறார்.
திமுக அமைச்சர்கள் மற்ற தோழமை கட்சி தோழர்கள் திரண்டு வந்து பணியாற்றி வருகிறார்கள். திருமகன் ஈவேரா சிறந்த முறையில் பணியாற்றி இருக்கிறார்.
ஏராளமான திட்டங்களை 18மாத காலத்தில் கொண்டு வந்திருக்கிறார். இந்த தொகுதிக்காக அவர் செயல்பட்டு இருக்கிறார்.
600கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார். இன்றுள்ள முதலமைச்சர்களில் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
தோழமை கட்சி போட்டியிடும் இடத்தில் இவ்வளவு கவனம் செலுத்துகிறார். அது பாராட்டுக்குரியது. அவருக்கும் திமுக விற்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் சிரமமான நிலையில் இருக்கிறது. எடப்பாடி பாஜகவிடம் இருந்து விலகி நின்று தேர்தலை சந்திப்பேன் என்று அறிவித்திருக்கிறார்.
அண்ணாமலை, மோடி தங்களோடு வந்தால் தொகுதி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டு சற்று விலகி இருக்குமாறு சொல்லி இருக்கிறார்.
தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் ஒன்றாகி விடுவார்கள். அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காக பாஜகவுடன் இல்லாதது போல் காட்டிக் கொள்கிறார்கள்.
இந்த நாடகத்தில் கொஞ்சம் கூட ரோஷம் இல்லாமல் பாஜகவும் சேர்ந்திருக்கிறது. இவ்வளவு வீரம் பேசிய அண்ணாமலை என்ன செய்யப் போகிறார்..
இதை ஒரு ஆக்கபூர்வமான தேர்தலாக நாங்கள் கருதுகிறோம் மக்களிடம் உரிமையாக வாக்கு கேட்டு வருகிறோம்.
இளங்கோவன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
கலைஞரின் பேனா சிலை குறித்த கேள்விக்கு, உலகம் முழுவதும் பணியாற்றிய தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் நினைவுச் சின்னங்கள் அமைப்பது வாடிக்கை.
தலைவர்கள் கிடைக்காதவர்கள் தலைவர்களை கடன் வாங்கி சிலை வைக்கிறார்கள். உதாரணமாக பாஜக பட்டேல் சிலையை வைத்துள்ளது.
கடலுக்குள்ளே இன்று பொருட்காட்சியை அமைக்கிறார்கள் பேனா சிலை வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று பதிலளித்தார்.
கலை.ரா
கொசுத்தொல்லை அதிகமா இருக்கா? – இந்த எண்ணுக்கு புகார் கொடுங்க!
காதலர் தினத்தில் கின்னஸ் சாதனை படைத்த காதல் ஜோடி!