அதிமுக பக்கம் சாயும் கிருஷ்ணசாமி: காரணம் என்ன?
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இன்று (மார்ச் 2) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து புதிய தமிழகம் கட்சி தேர்தலை சந்தித்தது. இந்தசூழலில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை தொடர்ந்து, இரண்டு கட்சிகளும் மீண்டும் இணைய வேண்டும் என்று கிருஷ்ணசாமி விருப்பம் தெரிவித்தார்.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கக்கோரி பாஜகவிடம் கிருஷ்ணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், அந்த தொகுதியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பரான ஸ்ரீதர் வேம்புவின் ஆதரவாளர் ஒருவருக்கு ஒதுக்கியிருப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடியுடன், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் மற்றொரு பிரமுகரான தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவர் ஜான் பாண்டியன் ஒரே மேடையில் அமர்ந்திருந்தார். இதனால் பாஜக நிலைப்பாட்டில் இருந்து மெல்ல மெல்ல விலகிய கிருஷ்ணசாமி, அதிமுகவுடன் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
ஏற்கனவே, பாமக, தேமுதிக கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அர்த்தம் மாறும் அமலாக்கம்: அப்டேட் குமாரு
பாஜக முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை!